தமிழ் மொழிக்கே உரிய தனிச்சிறப்பு !

தமிழ் மொழியின் தொன்மையும் தனித்துவமும்!
Published on
Updated on
3 min read

உலகத்தின் மிகமிகத் தொன்மையான மொழிகளில் முதன்மையான மொழி தமிழ் என்று கூறினார் ரஷிய நாட்டு மொழியியல் அறிஞர் அலெக்சாண்டர் துபியான்ஸ்கி.

உலகில் இன்றைக்கு ஏழாயிரம் மொழிகளுக்கு மேல் பேசப்படுகின்றன. இந்த மொழிகளுக்கெல்லாம் மூலமொழி, முதல்மொழி எதுவாக இருக்குமென்று நான் பல்லாண்டு காலம் ஆராய்ச்சி செய்தேன். என் ஆராய்ச்சியின் முடிவில் நான் கண்டுகொண்ட உண்மை என்னவென்றால், அநேகமாக அந்த மூல மொழி,

முதல்மொழி தமிழ்மொழி ஒன்றாகத்தான் இருக்க முடியும் என்ற முடிவிற்கு வருகிறேன் என்று கூறினார் அமெரிக்க நாட்டு மொழியியல் அறிஞர் அலெக்ஸ் கொலியர்.

அ.தி.மு.க. ஆட்சியின்போது நடந்த மாணாக்கர் கருத்தரங்கம் ஒன்றில் இந்தக் கருத்தை முதன்முதல் பதிவு செய்தவர் அன்றைய தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளராக இருந்த ராஜாராம் ஐ.ஏ.எஸ். அவர்கள்.

"உலகின் முதல் மொழியே எங்கள் உன்னதத் தமிழ்மொழியாம்' என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு

சூழ்கலை வாணர்களும் - இவள்

என்று பிறந்தவள் என்றுணராத

இயல்பினளாம் எங்கள் தாய்.

என்று பாரதத் தாயைப் பற்றி பாரதி பாடினார். இது தமிழுக்கும்

பொருந்தும்.

கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடியாகிய தமிழ் மக்கள் ஒழுக்கத்தை உயிராகப் போற்றினார்கள்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப்படும்.

என்றார் வள்ளுவர். உயிரைவிட உயர்ந்தது ஒழுக்கம் என்றால் ஒழுக்கத்தை விட உயர்ந்தது ஒன்றுமில்லையென்று தானே பொருள். அதனால் ஒழுக்கத்தை ஒன்றாக வகுத்தார்கள். அதன் பிறகு நல்லொழுக்கம், தீயொழுக்கம் என்று நாமாக வகுத்துக் கொண்டோம். ஒழுக்கம் என்றால் நல்லொழுக்கத்தை மட்டுமே குறிக்கும்.

திணையை உயர்திணை, அஃறிணையென்று இரண்டாக வகுத்தார்கள். வழிபடும் கடவுளை சிவன், திருமால், நான்முகன் என்று மும்மூர்த்திகளாகக் கண்டார்கள். பெண் தெய்வங்களை மலைமகள், கலைமகள், அலைமகள் என்று முப்பெருந்தேவியர்களாக வணங்கினார்கள். உலகத்தைக் கூட மேல்உலகம், பூவுலகம், பாதாள உலகம் என்று மூன்றாக வகுத்தார்கள். கனிகளைக் கூட, மா, பலா, வாழையென்று முக்கனிகள் என்றார்கள்.

தமிழை இயல், இசை, நாடகம் என்று மூன்றாகப் பிரித்தார்கள். தமிழ் எழுத்தைக் கூட உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து என்று மூன்றாகப் பிரித்தார்கள். எழுத்தின் இனத்தைக்கூட வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூவினமாகப் பகுத்தார்கள். சொற்றொடரில் கூட எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் என்று மூன்று கூறுகளைக் கண்டார்கள்.

முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் இதைவிட விளக்கமாகவும் விரிவாகவும் கூறியிருக்கிறார்கள்.

நாம் நாட்டை சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்று முப்பெரும் நாடாகக் கண்டார்கள். அவற்றின் தலைநகரங்களையும் வஞ்சி, புகார், மதுரையென்று மூன்று பெரும் நகரங்களாகக் குறிப்பிட்டார்கள். அந்த நகரங்களின் பெயர்கள் கூட மூன்றெழுத்துக்களில் அமைந்தவைதான்.

உலகப் பொதுமறை என்று சொல்லப்படுகின்ற திருக்குறளையும் அறம், பொருள், இன்பம் என்று முப்பாலாகப் பிரித்தார்கள். இந்த முப்பால் சொல்லும் நெறிப்படி வாழ்ந்தால் நாட்டில் கொலை, களவு, பாலியல் வன்முறை, கள்ளக்குறிச்சி நிகழ்ச்சியெல்லாம் நடை பெற்றிருக்காது.

தமிழின் முதல் காப்பியம் என்று சொல்லி மகிழ்கின்ற சிலப்பதிகாரத்திலும் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்கள் தாம் இருக்கின்றன. அது போற்றி வணங்கக் கூடிய இயற்கைப் பொருள்களும் மூன்றுதான். "ஞாயிறு போற்றுதும், திங்களைப் போற்றுதும், மாமழை போற்றுதும்' என்றுதான் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சிலப்பதிகாரம் சொல்லக் கூடிய நீதிகளும் மூன்றுதான்.

அரசியல் பிழைத்தோர்க்

கறங்கூற்றாவதூஉம்

உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும்

ஊழ்வினை வந்துருத் தூட்டும்

என்பதூ உம்

சூழ்வினை சிலம்பு காரண மாகச்

சிலப்பதிகாரம் என்னும் பெயரால்

நாட்டுதும் யாமோர் பாட்டுடைச்

செய்யுள்

என்றுதான் இளங்கோவடிகளும்

கூறுவார்.

வள்ளலாரும் பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்று மூன்று கடமைகளைத்தான் வலியுறுத்தினார். புத்த மதமும் புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி என்று மூன்று வணக்கத்தைத்தான் சொல்கிறது. காலத்தில் கூட நிகழ் காலம், எதிர் காலம், இறந்த காலம் என்று மூன்று காலங்கள்தான் குறிப்பிடப்படுகின்றன. வள்ளலாருடைய சன்மார்க்க சங்கத்தில் அன்புநெறி, அருள்நெறி, கருணை நெறி என்று

மூன்று நெறிகள்தாம் வலியுறுத்தப்

படுகின்றன.

நபிகள் நாயகம் கூட உலக மக்களுக்கு மூன்று கருத்துக்களைத்தான் கூறினார். பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே, உன்நடத்தை மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அமைய வேண்டும், உன்னிடம் உள்ள செல்வம் உனக்கானது மட்டுமல்ல என்றார். நமது திருக்குறள் போன்ற நீதி நூல்களும் இதைத்தானே போதிக்கின்றன.

இப்படி எல்லாவற்றையும் மூன்றாகப் பிரித்த தமிழ் முன்னோர்கள் காற்றைக்கூட தென்றல், வாடை, கொண்டல், குடகாற்று அல்லது மேல் காற்று என்று நான்காகப் பகுத்தார்கள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலத்தை ஐந்தாகப் பிரித்தார்கள். சுவையை ஆறாகப் பிரித்தார்கள். இசையை ஏழாகப் பகுத்தார்கள்.

குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற ஏழிசை பற்றி "உளியின் ஓசை' திரைப்படத்தில் "எத்தனை பாவம் இந்த நடனத்திலே - அவை அத்தனையும் அறிந்தவர் யார் உலகத்திலே' என்றொரு பாடலை நானே எழுதியிருக்கிறேன்.

இசையை ஏழாகப் பிரித்தது போல ஆடவர், பெண்கள் பருவத்தையும் ஏழாகப் பிரித்தார்கள். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று பெண்களுக்குரிய பருவங்கள் எல்லார்க்கும் தெரியும். ஆண்களுக்குரிய பருவங்கள் பலருக்குத் தெரியாது. பாலப் பருவம், மீளிப் பருவம், மறவோன், திறலோன், காளை, விடலை, முதுமகன் என்பது ஆண்களுக்குரிய பருவங்கள்.

மலரைக் கூட ஏழு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். மலர் அரும்பும் நிலையில் இருக்கும்போது அதற்கு அரும்பு என்று பெயர். அது மொட்டுவிடும் நிலையில் இருக்கும்போது அதற்குப் பெயர் மொட்டு. அது முகை அவிழும்போது அதற்குப் பெயர் முகை. முகை விரிந்து மலரும்போது அதற்குப் பெயர் மலர். மலர்ந்த பிறகு அதற்குப் பெயர் அலர். அது வாடத் தொடங்கும்போது அதற்குப் பெயர் வீ. அது வதங்கத் தொடங்கும் போது அதற்குப் பெயர் செம்மல். இதைப் போலப் பகுப்பு முறை தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் கிடையாது. தமிழின் சிறப்புக்கு இது ஒன்றே போதும் என்று கருதுகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com