கம்பனின் தமிழமுதம் - 2: அங்கணம் என்றால்...!

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் கம்பன் பற்றி எழுதிய மிக அருமையான ஆய்வு நூல், 'கம்பனின் அம்பறாத்தூணி'.
கம்பன்
கம்பன்
Published on
Updated on
1 min read

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் கம்பன் பற்றி எழுதிய மிக அருமையான ஆய்வு நூல், 'கம்பனின் அம்பறாத்தூணி'. அந்த நூலில், கீழ்க்காணும் தனிப்பாடலைக் குறிப்பிடுகிறார் அவர்.

வில் கிடந்தது மிதிலையின் நகரிலே

கல் கிடந்தது கானகம் தன்னிலே

நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே

சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே

உயர்ந்தெழுந்தது இராமனின்

கதை அரோ

தமிழ்ச் சொற்கள் கம்பன் மனத்தில் குவிந்து கிடந்தன. தமிழ் மொழி மீது அளவிலா அன்பு கொண்டிருந்தான் கம்பன். பல இடங்களில் அதற்கான சான்றுகளைப் பதிவு செய்துகொண்டே போகிறான். வழக்கொழிந்துபோன பழந்தமிழ்ச் சொற்கள் பலவற்றைக் காப்பியத்தில் பயன்

படுத்துகிறான் கம்பன்.

அத்தகைய ஒரு சொல் 'அங்கணம்'. தமிழாய்ந்த எழுத்தாளர்கள் சிலர் மட்டுமே இந்தச் சொல்லைத் தங்கள் படைப்புகளில் இன்று பயன்படுத்துகிறார்கள்.

வீட்டு முற்றத்தில், அழுக்குத் தண்ணீர் செல்லும் வழி; சேறும் அழுக்கும் நிறைந்த நீர் செல்லும் வழி; முற்றத்தில், தூண்களுக்கு இடையே உள்ள இடம் என்றெல்லாம் இந்தச் சொல்லுக்குப் பொருள்.

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்

தம்கணத்தர்

அல்லார்முன் கோட்டி கொளல்

என்று, தனது குறள் ஒன்றில் 'அங்கணம்' என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறான் வள்ளுவன் (குறள் 720). நாம் சொல்லுவதைப் புரிந்துகொள்ளும் திறனற்றவர்களிடம் நமது கருத்தைச் சொல்லிக் கொண்டிருத்தல், உயரிய அமிழ்தத்தை சேறு தங்கியுள்ள முற்றத்தில் கொட்டியதற்கு ஒப்பாகும் என்பது பொருள்.

இந்தச் சொல்லினை, எதிர்பாராத, ஆனால் பொருத்தமான ஓர் இடத்தில் பயன்படுத்துகிறான் கம்பன்.

அசோக வனத்தில் சிறைப்பட்டிருக்கும் சீதை, தன்னை எப்போது ஏற்றுக்கொள்வாள் என்னும் சிந்தனையிலேயே இருந்தான் இராவணன்.

'இதற்கு ஒரு வழி சொல்லேன்...' என்று தனது அமைச்சனான மகோதரனிடம் கேட்டான்.

'நம் ஆள் ஓருவனை, சீதையின் அப்பா ஜனகனைப் போலவே உரு மாறச் செய்து, அந்தப் பொய்ச் சனகனை சீதையிடம் உனக்காகப் பேசச் செய்யலாம்' என்று அவன்

ஆலோசனை சொன்னான்.

அதன்படி, மாயாசனகனை அழைத்துக் கொண்டு சீதையிடம் சென்றான் இராவணன். பல வகையில் அவளிடம் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு கெஞ்சினான். 'உன் தந்தையைக் கைது செய்திருக்கிறேன்...' என்று

மிரட்டினான்.

'இராவணனை ஏற்றுக்கொண்டு அவனுடன் நீ வாழ வேண்டும்...' என்றான் பொய்ச் சனகன்.

'நீ என் தந்தையே இல்லை! என் தந்தை இந்தச் சொற்களைக் கூற மாட்டான்!' என்றாள் சீதை.

'நீ ஒப்புக்கொள்ளாவிடில், உன் தந்தையைக் கொன்றுவிடுவேன்' என்று மிரட்டிய இராவணனுக்கு சீதை சொன்னதாகக் கம்பன் இப்படி

எழுதினான்:

வரிசிலை ஒருவன் அல்லால், மைந்தர்

என மருங்கு வந்தார்

எரியிடை வீழ்ந்த விட்டில்

அல்லரோ? அரசுக்கு ஏற்ற

அரியொடும் வாழ்ந்த பேடை,

அங்கணத்து அழுக்கு தின்னும்

நரியொடும் வாழ்வது உண்டோ

நாயினும் கீழ்ப்பட்டோனே!

'நாயைவிடக் கேவலமானவனே! ஆளுமை மிக்க ஆண் சிங்கத்துடன் வாழ்ந்த பெண் சிங்கம், அழுக்கைத் தின்று பிழைக்கும் நரியுடன் வாழாது' என்றாள் சீதை.

இராவணனை 'அங்கணத்தில் தேங்கிக் கிடக்கும் அழுக்கைத் தின்னும் நரி' என்று சீதை திட்டுவதாகக் காட்சி அமைத்து, 'அங்கணம்' என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறான் கம்பன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com