

கையில் பொருள் இல்லாத நிலையில், பயன்படுத்தும் மதிப்புடைய அணிகலன், பாத்திரம், நிலபுலம் இவற்றுள் ஒன்றை அடகு வைத்துப் பொருள் பெறுவது மனித வாழ்வில் இடம்பெறும் நிகழ்ச்சியாகும். நாடாண்ட அரிச்சந்திரன், எல்லாம் இழந்த நிலையில் மனைவியையும் மகனையுமே அடகு வைத்ததாக அரிச்சந்திர புராணம் கூறுகிறது.
அடகு வைக்கும் வரலாற்றில் மிக அதிசயமான நிகழ்வு ஒன்று உண்டு. கும்பகோணத்தில் ஒரு திருமண வீட்டில் இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.
பாடகர் தோடி ராகத்தை மெல்லிய கண்ணாடி இழைகளாக இழைத்துக் கொண்டிருந்தார். அவையில் தேனருவி கரைபுரண்டது. கேட்டவர்கள் சொக்கிக் கிடந்தனர். அந்த ராகம் முடிந்தவுடன் அவையில் இருந்தவர்கள் பாடகரை சங்கராபரணம் பாடக் கேட்டனர்.
'அதைப் பாடுவதற்கில்லை'' என்றார் பாடகர்.
'சங்கராபரணம் பாடுவதில் மிகப்புகழ் பெற்றவராயிற்றே நீங்கள்! அதைப் பாட என்ன தடை?''என்று கேட்டனர். அவர் இசையவில்லை. திருமண வீட்டுக்காரரான பெருஞ்செல்வர் பாடகரிடம், 'சங்கராபரணம் பாட என்ன தடை?'' என்று கேட்டார்.
'அது அடகில் இருக்கிறது!'' என்றார் பாடகர். கேட்ட அனைவரும் வியப்படைந்தனர்.
பாடகர் மேலும் விவரம் சொன்னார். 'ஒரு சமயம் பொருளில்லாது துன்புற்ற காலத்தில் கவித்தலம் என்ற ஊரில் வள்ளல் பரம்பரையில் வந்த ஒருவரிடம் சென்று முந்நூறு ரூபாய் கடன் கேட்டேன். "அடகு வைக்க உம்மிடம் ஏதாவது ஆபரணம் இருக்கிறதா?' என்று அவர் வேடிக்கையாகக் கேட்டார். நானும் விடாது, "ஓ! இருக்கிறதே சங்கராபரணம். அதையே உங்களிடம் அடகு வைக்கிறேன். இனி அதை அடகு மீட்கும் வரை நான் எங்கும் பாட மாட்டேன்' என்று அடகு வைத்துவிட்டேன்'' என்று சொன்னார் பாடகர்.
உடனே இசையன்பர்கள் கவித்தலம் சென்று சங்கராபரணத்தை அடகு மீட்க வந்திருப்பதாகக் கூறிப் பணம் கொடுக்க வந்தபோது அந்தச் செல்வர், 'பெரியோர்களே! அதை நான் அடகு வாங்க வேண்டுமென்று வாங்கவில்லை. ஆபரணம் இருக்கிறதா என்று கேட்டேன். சங்கராபரணம் இருக்கிறது என்று கூறிய அவரோடு சிறிது வேடிக்கையாக விளையாடிப் பார்க்கவே செய்தேன். பணம் வேண்டாம். "சங்கராபரணம் மீட்கப்பட்டுவிட்டது' என்று அவரிடம் சொல்லுங்கள்!'' என்றார்.
சங்கராபரணம் மறுபடியும் அவையெல்லாம் அலைபாய்ந்தது.
இப்படி எதை அடகு வைப்பது என்று தெரியாமல் எதை வேண்டுமானாலும் அடகு வைப்பதும், மீட்பதும், மீட்க முடியாமல் போதுவும் நிறைய நிகழ்ந்திருக்கின்றன.
சங்க காலத்தில் மதுரைப் பக்கத்தே கள்ளில்என்ற ஊரில் ஒரு தலைவன் இருந்தான். தலைவன் என்றால் மாடமாளிகைகளை உடைய மன்னன் இல்லை.
சிற்றூரில் வாழ்ந்த ஒரு சிறிய மக்கள் கூட்டத்துக்குத் தலைவன். அவன் தன்னைச் சார்ந்த இனமக்களோடு புழுதி படிந்த கட்டாந்தரையில் படுத்துக்கிடப்பான். தனக்கு கிடைக்கும் வருவாயைப் பலரோடு சேர்ந்து கள்ளுண்டு களித்து மகிழ்வான்.
நேற்று, அவனை நாடி விருந்தினர்கள் வந்துவிட்டார்கள். ஆனால் கையில் பொருள் இல்லை. அவன் இடுப்பில் செருகி வைத்திருந்த வாள் ஒன்றே அவனிடம் இருந்தது. அதை அடகு வைத்துப் பலரோடும் பகிர்ந்துண்ணக் கருதினான். அடகுக்கடை நோக்கி நடந்தான்.
'இந்த இரும்பால் செய்த வாளையா அடகு கொடுக்கக் கொண்டு வந்தாய்!'' என்று கேட்டான் அடகுக்குப் பொருள் கொடுப்பவன்.
'இது எத்தனை களம் கண்ட வாள் தெரியுமா? இதற்குக் கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாம் என்று தான் உன்னிடம் கொண்டு வந்தேனே தவிர இதை அடகு வைத்து எனக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை'' என்றான் தலைவன்.
அடகுக் கடைக்காரன் அவனது திறமிக்க பேச்சைக் கேட்டு சிரித்தான். வேண்டிய பொருளும் கொடுத்தான்.
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனன்
(புறநானூறு-316).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.