சங்கப் புலவர்களின் போராட்ட குணம்

பொதுவாகப் போர்க்குணம் என்பது மனிதப் பண்பின் ஒரு கூறு. அதுவே மனித ஆளுமைக்கான முழுமையன்று. அஃதோர் எச்சரிக்கையின் பொருட்டு வருமுன்னர்க் காப்புக்கான தீயணைப்பு வண்டியின் உதவி போன்றதாகும். இந்த அளவில் சங்கப் புலவர்களின் போராட்ட உணர்வைத் தொட்டுத் துலக்குகிறது இந்தக் கட்டுரை.

சங்கப் புலவர்கள் மன்னர்களைப் பாடிப் பரிசு பெற்றாலும் அவர்கள் தம் அளவில் மட்டும் வாழாமல் சமூகக் கேடுகளைக்களையும் போராளிகளாகவும் வாழ்ந்தார்கள் என்பதற்குப் பலவற்றைக் கூறலாம்.

அந்நாளில் மகள் கொடையாகத் தர மறுத்த வேந்தர்கள் தம்முள் போர் மூண்டதுண்டு. இதனால் நாடு நகரங்கள் என்னாவது? என ஏங்கிய புலவர்கள் அப்போரைத் தவிர்க்கப் பாடியுள்ளனர்.

அப்படியானதொரு போர் வந்த போது பரணர் எனும் புலவர், ஒரு மகள் பொருட்டுப் போர் வந்ததால் மனம் நொந்து இம்மகளை அவள் தாய் பெறாதிருந்திருந்தால் போர் வந்திருக்காதே என்று போர்க் குணத்தோடு எதிர்ப்பாட்டாகப் பாடும் போது, (புறம் 348) "இவளைத் தாயே, ஈனானாயினள் ஆயின்' இவ்ஊரைச் சுற்றிப் போர்ப்படைகள் வந்து கேடு விளைவிக்காமல் இருந்திருக்குமன்றோ? என்றார்.

இதுபோல் வெள்ளைக்குடி என்னும் ஊரினராகிய நாகனார் என்னும் ஓர் உழவராம் புலவர், வேளாண் மாந்தர்களால் நிலவரியைக் கட்ட இயலாமையையறிந்து அதனைத் தள்ளுபடிச் செய்யுமாறான வரி விலக்கு கோரிச் சோழன் கிள்ளிவளவனிடம் விண்ணப்பித்தார்.

"வளவனே! நீ பெறும் போர்க்கள வெற்றியானது உனது நால்வகைப் படைகளால் மட்டும் உருவாவதன்று, உழவுச் சாலால் விளைந்த நெல்லின் பயனால் வருவதென்பதே அடிப்படை உண்மை. மேலும், பல்வேறு நிலைகளில் இயற்கை வஞ்சிப்பதால் ஏற்படும செயற்கை பஞ்சத்தைக் கண்டு மக்கள் பழிப்பர். எனவே நீ, யாரது சிறு சொல்லையும் கேட்டு ஆட்சி செய்யாமல் ஏர்த் தொழிலாளரைப் பாதுகாப்பதன் பொருட்டுப் பிற குடிகளையும் பாதுகாத்த பெருமைக்குரியவனாகும்போது பகைவரும் உன்னைப் போற்றுவர் என்பதால் வேளாண் தொழிலுக்கான வரிவிலக்கைச் செய்' என்று அறியுறுத்தினார்.

கூர்வேல் வளவ!

பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை

ஊன்றுகால் மருங்கின் ஈன்றதன் பயனே!

மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்

இயற்கைஅல்லன செயற்கையில் தோன்றினும்

காவலர்ப் பழிக்கும் இக்கண்ணகல் ஞாலம்,

அதுநற் கறிந்தனை யாயின் நீயும்

நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது

பகடு புறந் தருநர் பாரம் ஓம்பிக்

குடிபுறம் தருகுவை யாயின்நின்

அடிபுறம் தருகுவர் அடங்கா தோரே!

ஆம்! ஓர் அரசு இயங்க வரிவிதிப்புத் தேவைதான்! என்றாலும் அது பெருஞ்சுமையாகவோ அல்லது அடாவடித்தனமாகவோ இருந்து விடக்கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com