
குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓரிடத்துக்குச் சென்றுவிட வேண்டும் என்று கருதி, நாம் பயணம் மேற்கொள்வதுண்டு. அப்பொழுது, நாம் பயணம் மேற்கொள்ளும் வாகனத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று எண்ணுவோம்.
அதைவிட, நம்மைக் கொண்டு செலுத்துவோர் வழக்கமாகச் செல்லும் சுற்றுவழியைக் கைவிட்டு, சுருக்கு வழியில் சென்று, நம்மை அக்குறிப்பிட்ட இடத்திற் சேர்த்து விடுவாராயின் அவரை வெகுவாகப் புகழ்ந்து பாராட்டத் தயங்கவும் மாட்டோம்.
இதே போன்றதொரு சூழலில், சங்க காலத் தலைவன் ஒருவன் தனது தேர்ப்பாகனைப் பாராட்டுகிறான். தலைவியைப் பிரிந்து வினைமேற் சென்ற அத்தலைவன், அவ்வினை முடிந்ததும் மீண்டு வந்து தலைவியைக் காண முற்படுகிறான். தேரில் ஏறிப் புறப்படுகிறான். அத்தேரினைச் செலுத்தும் தேர்ப் பாகனும் தலைவனின் தவிப்பைப் புரிந்துகொண்டு தேரினை விரைந்து செலுத்துகின்றான்.
தலைவனைப் பிரிந்து காமநோயால் வருந்திக் கொண்டிருக்கிறாள் தலைவி. உரிய காலத்தில் தலைவன் தன்னிடம் வந்து சேரவில்லையென்றாலோ, அவள் இறந்துவிடுவாள் போன்ற அச்சம் தரத்தக்க சூழ்நிலை அது.
இந்தக் கடிய சூழலைப் புரிந்து கொண்ட தேர்ப்பாகன் தேரினை விரைந்து செலுத்தித் தலைவியிடம் தலைவனைச் சேர்ப்பித்துவிடுகிறான். இதனால் மனமகிழ்ந்த தலைவன், தேர்ப்பாகனை வெகுவாகப் புகழ்ந்து பாராட்டுகிறான்.
'பாகனே! நாம் தேரிலேறி வழக்கமான பழைய வழியில் செல்வோமானால் காம நோயுடைய, அழகிய பருத்த தோளினைக் கொண்டு விளங்கும் தலைவியின் துயரினை இன்றே சென்று களைய முடியாதென்று நீ கருதினாய் போலும்! அதனால், தலைவியை இன்றே கண்டுவிட வேண்டும் என்ற எனது எண்ணத்தைப் புரிந்து கொண்டு, அதை நிறைவேற்றவும் துணிந்தாய்!
அதனால், 'சேயாறு' (சுற்றுவழி) நீக்கிச் சுருக்கமான புதுவழியைத் தேர்ந்தாய், பருக்கைக் கற்களையுடைய மேட்டு நிலமாகிய இடம் நுறுங்கும்படி தேரினைச் செலுத்தி, பாழ் நிலத்தில் புதிய வழியை உண்டாக்கிச் சென்றாய், சுற்றி வளைந்து சென்றிருந்தால், உரிய நேரத்தில் தலைவியின் காம நோயைத் தீர்த்திருக்க முடியாது. அதனால் அவள் வருந்தி இறந்துபடுவதையும் தவிர்த்திருக்க இயலாது.
ஆதலால், விரைந்து உரிய நேரத்திற்குள் சென்று சேர்வதற்காகவே உன்னுடைய மதி நுட்பத்தினால், புதுவழியைக் கண்டறிந்து தேரினைச் செலுத்தினாய். அவ்வகையில், சுருக்குவழியில் நீ விரைந்து வந்து, தேரை மட்டும் என்னிடம் ஒப்படைக்கவில்லை; தலைவியானவள் இறந்துவிடாமல் அவளையல்லவா என்னிடம் தந்தாய்!' எனத் தன் தேர்ப்பாகனை வியந்து மனநிறைவுடன் பாராட்டினான் அத்தலைவன்.
தலைவனின் கூற்றாக வரும், 'பேயனார்' என்ற புலவர் பாடிய குறுந்தொகைப் பாடல் இதுதான்}
சேயாறு செல்வாம் ஆயின் இடர் இன்று
களைகலம் காமம் பெருந்தோட்கு என்று
நன்றுபுரிந்து எண்ணிய மனத்தை ஆகி
முரம்புகண் உடையஏகிக் கரம்பைப்
புதுவழிப் படுத்த மதியுடை வல்லோய்
இன்று தந்தனை தேரோ
நோய்உழந்து உறைவியை நல்க லானே (400)
வாழ்க்கையில் குறுக்கு வழியில் செல்லலாகாது என்பதை மறைமுகமாக வலியுறுத்தும் இப்பாடல் நமது அன்றாட வழிப் பயணத்தில் தேவையற்ற சுற்றுவழியில் செல்ல வேண்டிய அவசியமில்லையென்பதை வெளிப்படையாகவே நமக்கு அறிவுறுத்துகின்றது. இது ஒரு நல்ல உளவியல் வெளிப்பாடாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.