

தன் வரலாற்றை விடவும் தனக்கு முந்தைய காலத்து வரலாறுகளைக் கலை, இலக்கியக் கண்ணோட்டத்துடன் கண்டு களப்பணிகள் மேற்கொண்டு, என்றும் நிலைபெறுகிற வண்ணமாய் எழுத்தில் பொதிந்தும் வைத்தவர், மறைந்த கலைமணி, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் ஆவார்.
பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன் வழிவந்தவரும், முருகதாசர் என்று போற்றப்படுகிற தண்டபாணி சுவாமிகளின் சீடர்தம் பேரனுமாகிய தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், தற்போது நூற்றாண்டு காணும் எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதனின் அண்ணன். திருநெல்வேலியில் 22.7.1904 பிறந்தவர். இந்தியத் திருநாட்டின் ஆலயங்களுக்கெல்லாம் பயணம் செய்து அவை குறித்துப் பதிவு செய்தவர். கம்பனில் ஆழம் கண்டு கேட்போர் செவிகுளிர இலக்கிய விருந்து பரிமாறியவர்.
மேற்கல்விக்கு வேறு வேறு பாடங்கள் எடுத்தபோதும் தாய்க்கல்வியாகத் தமிழ் பயிலுதலை ஆக்கிக் கொண்ட அறிஞர்களில் இவரும் ஒருவராகிறார். இவர் பயின்று பெற்ற பட்டம், வனத்துறைப் பணியில் சேர வாய்ப்பளித்தது. அதில் இணைந்து, படிப்படியாகத் தன் துறைசார் பணிகளில் பதவி உயர்வு பெற்று, இறுதியாக, வேலூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் தொ.மு.பா.
ஆனால், இறுதி வரையிலும் ஓய்வறியாத் தமிழ்ப் பணியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் என்றால் அதற்குக் காரணம் அவரது இளம்பருவக் கல்வி. இதற்குமேலும், இளம்பருவத்திலேயே இவருக்குள் இலக்கிய வேட்கையை ஊட்டி வளர்த்தவர் வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார். தொடர்ந்து, பொதியமுனியாம் ரசிகமணி டி.கே.சி.அவர்களின் "வட்டத்தொட்டி'யில் தமிழமுதம் பயின்றவர் என்றால் கேட்கவா வேண்டும்?
இவருக்குள் கிளர்ந்தெழுந்த தமிழ் ஊற்று, இளம்பருவத்திலேயே எழுத்திலும் பேச்சிலும் வல்லவர் ஆக்கிற்று. எழுத்து, பேச்சு இவற்றோடு சேர்ந்து நிர்வாகப் பணியும் இவரை ஆட் கொண்டபோது ஒன்றுக் கொன்று முரண்படா வகையில் திறம்படச் செயல்பட்டிருக்கிறார். என்பதைவிட, ஒன்றோடொன்றைத் தொடர்புபடுத்தி மக்களுக்குப் பயனுள்ள வகையில் பணியாற்றி இருக்கிறார் என்பதே இவர்தம் சிறப்பு.
கல்லூரிக் கல்வி பெற்ற காலத்தில் கம்பன் குறித்துப் பேசவும் எழுதவும் பழகிய இவர் அக்காலத்துப் பிரபல இதழான ஆனந்தபோதினியில் பல அற்புதக் கட்டுரைகள் வரைந்தார். எதுகை மோனையுடன் கவிதை நயம் துள்ளத் துள்ளக் கம்பனின் கதாபாத்திரங்கள் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் வாசகர்களைப் பெரிதும் ஈர்த்தன.
தொ.மு.பாஸ்கரன் என்ற பெயரில், ஆனந்தபோதினி (1928}1929 நவம்பர்}மார்ச்) இதழில் இவர் எழுதிய கட்டுரை, "வள்ளுவம் உள்ளம்' என்பது. தெரிந்த திருக்குறள் பாக்களுக்குள் பொதிந்திருக்கும் நுட்பத்தை அக்கால வழக்கத் தமிழ்நடையில் எழுதிய இவர், அதிகாரத் தலைப்புத் தெரிவில் கூடத் திருவள்ளுவர் அறம்பேணிய விதத்தைத் திறம்பட விளக்குகிறார்.
இவர் தஞ்சையில் பணியாற்றியபோது, கண்ணுக்கெட்டிய திசையெங்கும் கலைச் செல்வங்கள், சிற்ப வடிவங்கள் கவனியாது கிடப்பதைக் கண்டு பிடித்தார், அவற்றைச் சேகரித்து, தஞ்சாவூரில் அற்புதமானதொரு கலைக்கூடமே அமைத்துவிட்டார். வரலாறு பேசும் அப்பணிக்கு இணையாக, பணி ஓய்வு பெற்றபின்னர் இவர் படைத்தளித்த நூல்கள் வரலாறு குறித்த வரலாறு பேசுபவை.
தீர்த்த யாத்திரை, தலயாத்திரை என்கிற அளவில் திருத்தலப் பயணம் மேற்கொண்ட பக்தர்களுக்கு அந்தந்தத் திருக்கோயில்களின் அற்புதங்களையும், ஆலயக் கட்டமைப்பு, தொன்மம், வரலாறு, சிற்பம் முதலான கலைகளின் சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றையும் எடுத்துக் காட்டி எழுதிய நூல்கள், இனிய, சிறந்த ஆவணக்களஞ்சியங்கள்.
ஏற்றுக் கொண்ட பணிக்கு இடையூறில்லாமல் ஓய்வாய்க் கிடைக்கும் பொழுதுகளிலும், ஓய்வு பெற்ற பின்னரும் இந்திய அளவில், பல்வேறு திருத்தலங்களுக்குப் பயணம் செய்து இவர் தேடிச் சேகரித்த தரவுகள், எடுத்து நிரல் படுத்திய நிழற்படங்கள், தொகுத்துப் பகுத்து ஆய்வு செய்து உரைத்த செய்திகள் எல்லாம் என்றும் அழியாத கலை, இலக்கியக் கருவூலங்களாகத் திகழ்கின்றன.
வேங்கடம் முதல் குமரி வரை, வேங்கடத்துக்கு அப்பால் என்ற தலைப்புகளில், கல்கியில் 56 கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டு, அவை இன்று நூல் வடிவமும் பெற்று விட்டன. இவை தவிர பிள்ளைவாள், தமிழறிஞர் முதலியார், ரசிகமணி டிகேசி என்ற நூல்களும், கலைஞன் கண்ட கடவுள், கல்லும் சொல்லாதோ கவி, அமர காதலர், தென்றல் தந்த கவிதை, இந்தியக் கலைச் செல்வம், தமிழர் கோயில்களும் பண்பாடும் என்னும் கலைக்கட்டுரைத் தொகுப்புகளும், மதுரை மீனாட்சி, ஆறுமுகமான பொருள், பிள்ளையார்பட்டிப் பிள்ளையார், கம்பன் சுயசரிதம், கம்பன் கண்ட இராமன், அன்றும் இன்றும், பட்டி மண்டபப் பேருரைகள் உள்ளிட்ட நூல்களும் குறிப்பிடத்தக்கவை. காரைக்குடிக் கம்பன் கழகத்திலும் பிற இடங்களிலும் இவர் ஆற்றிய அற்புத உரைகளில் ஒருசில ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
'நான் கலெக்டராக இருந்த காலத்தில் ஒரு நாடகம் நடத்த ஏற்பாடு செய்தேன். நாடகத்திற்குத் தலைமை தாங்க முதலமைச்சரை அழைத்தேன். நாடகத்தை நானே எழுதினேன். "சர்க்கார் சேவகம் அன்றும் இன்றும்' என்று நாடகத்திற்குப் பெயர் சூட்டினேன். அன்று அதிகாரிகள் எல்லாம் மக்கள் பேரில் அதிகாரம் செலுத்தி ஆண்டார்கள் என்பதை விளக்கியதோடு, இன்று மக்கள் எப்படி அதிகாரிகள் பேரில் குதிரை ஏறுகிறார்கள், அதற்கு அரசியல்வாதிகள் எப்படி எப்படி எல்லாம் உதவுகிறார்கள், நிர்வாகத்தில் அவர்கள் தலையிட்டு எப்படி குட்டையைக் குழப்புகிறார்கள் என்றெல்லாம் காட்டினேன். ஏன்? சொல்லப் போனால், நானே ஒரு ரிட்டயர்டு தாசில்தார் வேடம் தாங்கி நடித்தேன்.
தலைமை வகித்த முதலமைச்சர் நடிகர்களை எல்லாம் பாராட்டிவிட்டுச் சொன்னார் - "தொண்டைமான் சிறந்த ஒரு எழுத்தாளர், பேச்சாளர் என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால் அவர் ஒரு சிறந்த நடிகரும் கூட என்பது எனக்குத் தெரியாது. இந்த எழுத்தாளர் - கலெக்டரை நான் பாராட்டுகிறேன்' என்று முடித்தார். அப்போது முதலமைச்சராக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர்.''
மனித நேயமும், கலை இலக்கிய தாகமும், நேர்மையும் துரிதமும் உடைய நிர்வாகத் திறமையும் கொண்ட, தொண்டைமான் குடும்பத்துச் சகோதரர்கள் தொ.மு.சி.ரகுநாதன், தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் ஆகிய இருவரையும் நினைக்கத் தூண்டியதற்குக் காரணம், அண்ணனுக்கு இது 121-ஆவது பிறந்த ஆண்டு. தம்பிக்கோ நூற்றாண்டு.
தமிழுக்கும் தாய்நாட்டிற்கும் இவர்கள் ஆற்றிய தொண்டுகள் போற்றத் தக்கவை மட்டுமல்ல, பின்பற்றக் கூடியவையும் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.