தங்களது மூதாதையர்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்காகச் சிந்திய ரத்தத்தையும், வியர்வையையும், தியாகத்தையும் உயர்ந்து போற்றும் தலைமுறையினர் இருக்கவே செய்கிறார்கள். 'தினமணி' நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணிபுரியும் தி.நந்தகுமார் தான் எழுதிய சிறு நூல் ஒன்றை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார். அது அவரது பாட்டனார் தியாகி பாரத் ஆதிமூலம் குறித்தது.
அன்றைய ஒன்றுபட்ட சென்னை ராஜதானி என்பது இன்றைய தமிழ்நாடு மட்டுமல்லாமல், இப்போதைய கர்நாடகம், ஆந்திர, கேரள மாநிலங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது. அந்த சென்னை ராஜதானியின் குறிப்பிடத்தக்க தியாகிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் பாரத் ஆதிமூலம். 1942 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் ஈடுபட்டு 16 மாதங்கள் அவர் சிறையில் அடைக்கப்பட்டபோது, பின்னாளில் கர்நாடக முதல்வராகவும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் இருந்த எஸ்.நிஜலிங்கப்பா அவரது சிறைத் தோழர். 1954}இல், முதல்வராக காமராஜர் குடியாத்தம் இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது, அவரது வெற்றிக்குப் பாடுபட்டவர்களில் பாரத் ஆதிமூலம் முக்கியமானவர்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் அவரது பங்களிப்பும், தியாகமும் அளப்பரியது. இந்தியா விடுதலை பெற்ற அன்று, குடியாத்தம் செüத் இந்தியன் சில்க் மில்லில் இருந்து பத்து லட்சம் தேசியக் கொடிகள் தயாரிக்கப்பட்டு, பிரதமர் பண்டித நேருவின் கோரிக்கைக்கு இணங்க தில்லிக்கு அனுப்பப்பட்டிருக்கும் செய்தியைப் பதிவு செய்கிறது அந்தச் சிறு நூல்.
விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கும், இன்றைய அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதற்கு குடியாத்தம் தியாகி 'பாரத்' ஆதிமூலம்தான் எடுத்துக்காட்டு. தியாகிகளுக்கான தாமிரப் பட்டயம் வழங்கப்பட்ட பாரத் ஆதிமூலத்துக்கு, அரசு 20 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்தது. தேசத்துக்குச் செய்த தியாகத்துக்குப் பிரதியுபகாரம் வேண்டாம் என்று மறுத்துவிட்டார் அவர்.
இன்றைய அரசியல்வாதிகள் சொத்து சேர்க்கிறார்கள்; அன்றைய தியாகிகள் தங்கள் சொத்தை பொதுச் சேவைக்காக செலவழித்தார்கள்!
======================
ஏறத்தாழ நான்கு ஆண்டுகளாக எனது மேஜையில் இருக்கும் புத்தகம் இது. புத்தக விமர்சனம் என்று பத்தில் ஒன்றாக எழுதிவிடக் கூடிய படைப்பல்ல இது. அதனால்தான் பல முறை படித்தும் பதிவு செய்யாமல் இருந்துவிட்டேன்.
மகாகவி பாரதியாரின் கவிதைகளைப் படித்து, வியந்து மயங்கியவர்கள் பலருண்டு. அவரது ஒவ்வொரு சொல்லுக்கும் புதிய பொருள் கண்டு சிலாகித்து மகிழ்ந்தவர்கள் உண்டு. ஒவ்வொரு வார்த்தைக்கும் ஓராயிரம் அர்த்தங்களைத் தேடி மலைத்தவர்களும் உண்டு. மேலே சொன்ன பட்டியலின் அனைத்துக் கூறுகளையும் ஒருசேர, ஒருசிலரிடம்தான் பார்க்க முடியும். அவர்களில் பாரதி கிருஷ்ணகுமாரும் ஒருவர்.
அவர் எழுதிய 'அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி' என்கிற புத்தகம் சில மாதங்களுக்கு முன்னால் திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகத்தில் பரிசுக்கும் பாராட்டுக்கும் உரித்தானது. அது வெறும் புத்தகமல்ல. மிகப் பெரிய பாரதியியல் ஆய்வு.
''பாரதிக்கும் தொலைந்து போன வாழ்க்கை ஒன்று உண்டு என்பதையும், அதைப் பற்றிய குறிப்பை அவனே தன் பாடல் வரிகளுக்குள் புதைத்தும் வைத்துள்ளான் என்பதையும், எப்படியோ பாரதி கிருஷ்ணகுமார் கண்டுபிடித்துவிட்டார். பாரதியைப் பற்றிய பாரதி கிருஷ்ணகுமாரின் கண்டுபிடிப்பு முற்றிலும் புதிய கண்டுபிடிப்பு'' என்கிற மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியனின் பாராட்டைவிடப் பெரிய சான்றிதழ் வேறு என்னவாக இருந்துவிட முடியும்...
பாரதி தன்னைத்தானே பன்றி என்று சொல்லிக்கொண்ட காரணத்தை ஆராய்கிற முதல் முயற்சி பாரதி கிருஷ்ணகுமாருடையது. 1898}ஆம் ஆண்டு தொடங்கி 1904}ஆம் ஆண்டுவரையில், பாரதியாரின் வாழ்வில் ஆறு ஆண்டுகள் எதுவும் எழுதாமல் வீணானதன் காரணம் என்னவாக இருக்கும் என்கிற கிருஷ்ணகுமாரின் ஆய்வுதான் 'அருந்தவப்பன்றி'. பாரதி தன்னைப் பன்றியுடன் ஒப்பிட்டுக் கொள்ள வேண்டிய அவசியம்தான் என்ன? என்பதில் அடங்கி இருக்கிறது, பாரதியின் அதிகம் வெளிவராத மறுபக்கம்.
எழுத்தாளர் பிரபஞ்சன் குறிப்பிடுவதுபோல, அண்மைக் காலங்களில் வெளிவந்த மிகச் சிறந்த பாரதி ஆய்வுகளில் ஒன்று பாரதி கிருஷ்ணகுமாரின் 'அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி'.
======================
'தினமணி' செய்தி ஆசிரியராக இருந்து இப்போது பணி ஓய்வுபெற்ற பா.முத்துக்குமரனிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதைப் படித்தபோது எனது நினைவுகள் என்னை 40 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றன.
எண்பதுகளின் தொடக்கத்தில், 'சாவி' வார இதழுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டிருந்த நேரமது. அப்போது மாலன், சுப்ரமண்ய ராஜு, பாலகுமாரன் மூவரும் 'சாவி' வார இதழ் அலுவலகத்தின் மும்மூர்த்திகளாக வலம் வந்து கொண்டிருந்த காலம். மாலன், பாலகுமாரனிடம் இருந்ததுபோன்ற தொடர்பு எனக்கு சுப்ரமண்ய ராஜுவிடம் இருந்ததில்லை. மூன்று நான்கு தடவைகள் சந்தித்திருக்கிறோம், பேசியிருக்கிறோம் அவ்வளவே...
சென்னை நந்தனம் நாற்சந்தியில் சிவப்பு விளக்குக்காகக் காத்திருந்தபோது, பின்னால் இருந்து பேருந்து இடித்ததில், சம்பவ இடத்திலேயே சுப்ரமண்ய ராஜு என்கிற அற்புத எழுத்தாளரின் உயிர்பிரிந்த சோகத்தில் தமிழ் இதழியல் உலகமே மூழ்கியது.
'கசடதபற' இலக்கிய இதழில் கவிஞராக அறிமுகமாகித் தனது 39 வயது வாழ்க்கையில் சுமார் ஐம்பது கதைகள்தான் எழுதி இருப்பார் ராஜு. ஆனால் காலம் கடந்தும் தமிழில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராக அவர் நினைவுகூரப்படுகிறார் என்பதில் இருந்து, அந்த எழுத்தின் வீச்சையும், வீரியத்தையும் நாம் புரிந்து கொள்ளலாம்.
அவரது மனைவி என்னவானார்? சுப்ரமண்ய ராஜுவுக்கு இரண்டு குழந்தைகள் உண்டே, அவர்களுக்கு இப்போது சுமார் ஐம்பது வயது இருக்குமே, எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்?
இப்படியெல்லாம் எனது நினைவு அந்தக் குறுஞ்செய்தியையும் கவிதையையும் படித்தபோது அலைபாய்ந்தது. முத்துக்குமரன் அனுப்பித் தந்திருந்த சுப்ரமண்ய ராஜுவின் அந்தக் கவிதை இதுதான் -
வாயிலே அழுக்கென்று
நீரெடுத்துக் கொப்பளித்தேன்
கொப்பளித்துக் கொப்பளித்து
வாயும் ஓயாமல்
அழுக்கும் போகாமல்
உற்றுப் பார்த்தேன்
நீரே அழுக்கு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.