
புதிதாகத் திருமணம் செய்து கொண்ட மனைவியை விட்டுப் பிரிந்து ஆறு மாதமாகி விட்டது. இலங்கையில் ஒரு வேலையாகப் போய்விட்டுத் திரும்பும்போது அவன் மனம் காற்றாய் பறந்து, கண்ணில் கனவு பெரிதாய் விரிந்தது. நேற்றைக்கு முன்னாளில் அவனுடைய ஊருக்குப் போகிற நண்பனிடம் அவன் சொல்லி அனுப்பியிருந்தான்.
'மறக்காமல் என் மனைவியிடம் சொல். நான் இரண்டு மூன்று நாள்களில் வந்துவிடுவேன்'' . அவன் சொன்னானோ இல்லையோ, தெரியவில்லை. விமானத்தில் வந்து இறங்கி ஓர் உந்து வண்டியைப் பிடித்துத் தன் ஊரான கூடலூருக்கு விரைந்து போகச் சொன்னான். காரோட்டி சிரித்துக் கொண்டான்.
'என்னய்யா சிரிக்கிறாய்?''
' இல்லையில்லை. கல்யாணமாகி ஐந்தாறு மாதம்தான் ஆகியிருக்கும் போலத் தெரியுது. அதான் வேகமாக இருக்குன்னு நெனச்சேன்'' என்றான் காரோட்டி.
'எப்படி ஐயா தெரிந்தது?'' -அவன் கேட்டான்.
'உங்களை விட அந்த வயசிலே நான் பறந்திருக்ககேனில்லே. அதை நினைச்சுத்தான் சிரிச்சேன்'' என்றான்.
அவசரம் தெரிந்த ஒருவர் வண்டியோட்டுவது அவனுக்கு மகிழ்ச்சி தந்தது. வண்டி காற்றைப் பிய்த்துக் கொண்டு பறந்தது.
'இன்னும் கொஞ்சம் வேகமாகப் போகக் கூடாதா?'' அவன் கேட்டான்.
'120 கிலோ மீட்டர் வேகத்துல போய்க்கிட்டிருக்கேன். இதற்கு மேலே போனா எங்கே போவோம்னு உங்களுக்கே தெரியாதா ?'' என்றான் காரோட்டி.
'சரி... சரி... ஓட்டப்பா'' என்றான் அவன்.
வண்டி வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. வண்டி ஓட்டி சொல்வது போல் வேகமாய்ப் போய் எங்காவது ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று கருதிய அவன், 'நிதானமான வேகத்தோடு போ. ஆமாம், அது சரி... நீ ஏன்? ஆரன் அடிக்காமலேயே ஓட்டுகிறாய்! ஆரன் பழுதா?'' என அவன் கேட்டான்.
புன்னகையோடு காரோட்டி சொன்னான்.
'பல நாளைக்குப் பிறகு இப்போதுதான் மழை பெய்திருக்கிறது. வயலில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. அந்தத் தண்ணீரை நாடி தவளைகள் போய்க் குழிகளில் இறங்கி மகிழ்கின்றன. அவை ஜோடியாகவும் போவதைப் பாருங்கள். நான் ஆரன் அடித்தால், அவை மிரண்டு அவற்றின் மனதில் பொங்கும் இன்பக்கிளர்ச்சி வற்றிவிடும். அந்தப் பாவம் செய்யலாமா?'' என்றான் காரோட்டி.
'வேண்டாம் ! ஆரன் அடிக்காதே ! வண்டியை மெல்லவே ஓட்டு'' என்றான் அவன்.
கேட்பதற்கு இது புதுமையாக இருந்தாலும் இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட மனிதர்கள் சிலர் இருக்கவே செய்கிறார்கள். பிறர் மனதைப் புரிந்து கொள்வது, மதிப்பது, அதற்கேற்ப தான் பேசுவது, செயல்படுவது என வாழ்கிற சக மனிதர்களை நாம் எல்லாரும் பார்த்திருக்கக் கூடும். பழங்காலத்திலும் கூட இத்தகைய மனிதர்கள் இருந்திருக்கிறார்கள்.
இப்படித்தான் அந்தக் காலத்தில் பிற உயிர்களின் மேலான இரக்கம் கலையாமல் காதல் உணர்வும் இருந்திருக்கிறது.
இதைச் சங்கப் புலவன் கீரத்தனார் எப்படிச் சொல்கிறார் பாருங்கள்!
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய
பழமழை பொழிந்த புதுநீர் அவல
நா நவில் பல்கிளை கறங்க மாண் வினை
மணியொலி கேளாள் வாணுதல்
நற்றிணை (42)
உலகத்து உயிர்கள் மகிழ்ச்சியோடு தத்தம் தொழிலை மேற்கொள்ள, தொன்று தொட்டுப் பெய்கின்ற வழக்கத்தைப் போல மழை பெய்தது. அதனால் புது நீர் நிரம்பிய பள்ளங்கள்தோறும் நாவினால் ஒலி செய்யும் தவளைக்கூட்டங்கள் ஒலி செய்வதால் ஒளி பொருந்திய நெற்றியையுடைய தலைவி தேரில் கட்டிய மணியொலி கேளாள் என்று கூறுகிறது. தவளைகள் ஒலி செய்வது தடுக்கப்படவில்லை. அதனால் தலைவிக்கு மணி ஒலியைக் கேட்க முடியவில்லை. 'மணி நா ஆர்த்த மாண்வினைத் தேரன்' என்பது அகநானூறு.