கம்பனின் தமிழமுதம் - 59: ஏது இந்த நகைகள்...?

தந்தை சொன்னதாகக் கூறி, இராமன் காட்டுக்குப் போகும் சூழலைக் கைகேயி உருவாக்கிவிட்டாள். உடன், பிடிவாதமாக இலக்குவனும் கிளம்பினான்.
கம்பர்
கம்பர்
Published on
Updated on
2 min read

தந்தை சொன்னதாகக் கூறி, இராமன் காட்டுக்குப் போகும் சூழலைக் கைகேயி உருவாக்கிவிட்டாள். உடன், பிடிவாதமாக இலக்குவனும் கிளம்பினான். மரவுரி ஆடைகள் தரித்துக்கொண்ட இருவரும், சீதையிடம் சொல்லிவிட்டுச் செல்ல வந்தார்கள். காட்டுக்குக் கிளம்பத் தயாராக இருவரும் வந்திருப்பதை அறிந்த சீதை, தனது அணிகலன்களையும் அரச உடைகளையும் நீக்கிவிட்டுத் தானும் மரவுரி ஆடை அணிந்துகொண்டு, இராமன் தடுத்தும் கேளாமல் உடன் கிளம்பிவிட்டாள்.

மரவுரி என்பது அனைத்தையும் துறந்த முனிவர்கள் மட்டுமே அணிகின்ற காவி நிற உடை. முனிவர்கள் அடிக்கடி வரும் அரண்மனைகளில், அவர்களுக்கு வழங்குவதற்காக இந்த ஆடைகள் வைத்திருப்பார்கள் என்று குறிப்புகள் சொல்கின்றன. எவ்வித அணிகலனும் அணிந்து கொள்ளாமல், துறவிகள் அணியும் மரவுரி ஆடையுடன் சீதை கிளம்பினாள் என்று உறுதி செய்கிறான் கம்பன்.

காட்டில் தனியாக இருந்த சீதையைக் கவர்ந்து சென்றான் இராவணன். அவளை மீட்க சபரியின் அறிவுரையின்படி, சுக்கிரீவன் தங்கியிருந்த குன்றத்தை வந்தடைந்தார்கள் இராமனும் இலக்குவனும். ஒருநாள், அனைவரும் கிட்கிந்தை மலையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, அதற்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றைச் சொன்னான் சுக்கிரீவன்.

'ஒருநாள் இப்படி நாங்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, வானில் பறந்த புட்பக விமானத்தில் இராவணன், ஒரு பெண்ணை வலிந்து கொண்டு சென்றதைக் கண்டோம்.

கண்களில் நீர் வழிந்தோட இருந்த அந்தப் பெண், தான் அணிந்திருந்த நகைகளை ஒரு துணியில் பொதிந்து கீழே போட்டாள். அவற்றை நாங்கள் எடுத்து வைத்திருக்கிறோம். தான் கடத்தப்படும் சூழலை அடையாளப்படுத்தவே அவள் அப்படிச் செய்திருக்க வேண்டும். அந்த நகைகளைக் கொண்டு வரச் சொல்கிறேன்; அவை சீதை அணிந்திருந்தவையா என்பதை நீ உறுதிப்படுத்து' என்று இராமனிடம் சொன்னான் சுக்கிரீவன்.

அந்த நகைகளைப் பார்த்த இராமன், 'இவை சீதை அணிந்திருந்தவைதான்' என்று உறுதிப்படுத்தியதாக எழுதினான் கம்பன்.

எந்த நகையும் இல்லாமல் காட்டுக்கு வந்த சீதை, தான் அணிந்திருந்த நகைகளைக் கழற்றி, துணியில் பொதிந்து கீழே எறிந்தாள் என்று காட்சியை எப்படி அமைத்தான் கம்பன் என்பது எல்லோருக்கும் இயல்பாக எழும் கேள்வி.

இப்படி மற்றொரு காட்சியும் உண்டு. இலங்கைக்குத் தன்னைத்தேடி வந்து, அசோகவனத்தில் தன்னைப் பார்த்த அனுமனிடம், தனது துணியில் பொதிந்து வைத்திருந்த சூடாமணியை அடையாளமாகத் தந்து அனுப்பினாள் என்றும் ஒரு காட்சி அமைத்தான் கம்பன்.

இவை எப்படி சாத்தியம்? ஏது இந்த நகைகள்...? அணிகலன்கள் ஏதும் இன்றி மரவுரி அணிந்து கிளம்பிய சீதை, இரு இடங்களில் நகைகளை அடையாளப்படுத்துவது எப்படி முடியும்...? மிகப் பெரும் காப்பியம் படைக்கும்போது, இப்படிச் சில தடுமாற்றங்கள் வருவது இயல்புதான் என்று விட்டுவிடவேண்டியதுதானா..?

ஆனால், கம்பன் நம்மை எப்போதும் ஏமாற்றுவதில்லை. இந்த நம்பிக்கையுடன் தேடிச் சென்றால், ஏதோ ஓர் இடத்தில், எந்தச் சிக்கலுக்கும் தீர்வினைச் சொல்லியிருப்பான்.

இந்த நகைச் சிக்கலுக்கான தீர்வையும், கதைப்போக்குடன் ஓரிடத்தில் சொல்லிக்கொண்டு போகிறான் கம்பன். தண்டக வனத்துக்குள் நுழையும் முன்னர், அன்று இரவு கானகத்தில் அத்திரி முனிவர் என்பவரது ஆசிரமத்தில் அவர்கள் மூவரும் தங்கினர்.

அந்த முனிவரின் மனைவி அனசூயை. மறுநாள் அவர்கள் கிளம்பும்போது, முனிபத்தினியான அனசூயை, சீதைக்கு சில துணிகளும், நகைகளும், சந்தனம் போன்றவற்றையும் பரிசாகத் தந்து அனுப்பினாள் என்கிறான் கம்பன். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களில் ஒன்றாக மறைந்து கிடக்கும் அந்தப் பாடலைப் பார்க்கலாம்.

அன்ன மா முனியொடு அன்று, அவண் உறைந்து, அவன் அரும்

பன்னி, கற்பின் அனசூயை பணியால், அணிகலன்,

துன்னு தூசினொடு சந்து, இவை சுமந்த சனகன்

பொன்னொடு ஏகி, உயர் தண்டக வனம் புகுதலும்.

அணிகலன்கள் இல்லாமல் காட்டுக்கு வந்த சீதை, தண்டக வனத்துக்குள் நுழையும்போது, அனசூயை அணிவித்த நகைகளுடன் வந்தாள் என்பதைப் பதிவு செய்து, அவையே அவளுக்குத் துன்பக் காலங்களில் அடையாளம் காட்டப் பயன்பட்டன என்பதையும் உணர்த்தி, சங்கிலி அறுபடாமல் காட்சிகளை நகர்த்திச் செல்கிறான் கம்பன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com