நெஞ்சொடு கிளத்தல்

ஒரு செய்தியை யாரிடமும் கூறமுடியாததாக இருப்பின் என்ன செய்வது?
நெஞ்சொடு கிளத்தல்
SWAMINATHAN
Updated on
2 min read

ஒரு செய்தியை யாரிடமும் கூறமுடியாததாக இருப்பின் என்ன செய்வது? அதைத் தன்நெஞ்சுக்குக் கூறிக்கொள்வதே நெஞ்சொடு கிளத்தலாகும்.

யாரிடமாவது சொல்லியே தீரவேண்டுமென்ற நிலையில், யாரிடமாவது சொன்னால், தன்னைக் குறித்தே நிலை இறங்க நினைக்கக்கூடும் என்ற நினைப்பில் ஒருவன் அல்லது ஒருத்தி தன் நெஞ்சிற்கு உரைத்துக் கொள்வது எல்லாரிடத்தும் நிகழ்வதே. இதனை ஒரு சுவையான பாடுபொருளாக்கி விடுகிறான் அகத்திணைப்புலவன்.

ஒரு செய்தியை ஊரெங்கும் பரப்ப வேண்டுமென்றால் 'இதை உனக்கு மட்டும் சொல்கிறேன். வேறுயாருக்கும் சொல்லி விடாதே' என்று அதை ஒரு பெண்ணிடம் கூறினால் போதும்; அது ஊரெங்கும் பரவி விடும். மனித மனம் தகவல் தொடர்பை இயற்கைக் குணமாகக் கொண்டது. 'கேட்டாயா செய்தியை', 'இது உனக்குத் தெரியுமா', 'காதோடு சொல்கிறேன் கேள்', 'இது நமக்குள் இருக்கட்டும்', 'வெளியில் விட்டு விடாதே' என்பனவெல்லாம் ஒரு செய்தியைக் கமுக்கமாக வைத்துக்கொள்ள உதவுவதில்லை.

ராஜாவுக்கு கழுதை காது என்ற இரகசியத்தை அரண்மனைச் சேவகன் தன்னுள் அடக்கி வைத்துக் கொள்ள முடியாமல், தன் மனைவியிடம் சொல்ல அவள் மற்றவரிடம் கூற ஊர் முழுவதும் அச்செய்தி பரவிவிட்டதைக் கலைவாணர் திரைப்படத்தில் சுவையான நிகழ்ச்சியாக்கிக் காட்டுகிறார்.

நெஞ்சொடு கிளத்தலில் இந்த இடையூறில்லை. பாலுறவு தொடர்பான செய்திகளைச் செய்யுளில் புனைந்து காட்ட நெஞ்சொடு கிளத்தல் பெரிதும் துணையாகும்.

தலைவன் தன்னையன்றி வேறு ஒருத்தியிடமும் உறவு கொண்டிருப்பதை அறிந்து தணலில் வீழ்ந்த புழுவாகிறாள் தலைவி ஒருத்தி. புதிய உறவில் சற்றுப் புளிப்பேற்றப்பட்ட பிறகு தலைவன் திரும்பி வருகின்றான். தலைவி அவனோடு ஊடுகின்றாள்; விலகி நிற்கிறாள்; எனினும், அவள் நெஞ்சு அவனிடம் போய்விடுகிறது. இந்த நிலையில், அவள் நெஞ்சொடு கிளத்தல் நேர்கிறாள்.

பிரப்பங் கொடியின் வரிகளை உடைய பழத்தை, ஆழமாகிய நீரை உடைய குளத்தில் உள்ள மீன் கவ்விக் கொள்ளும் குளிர்ச்சி மிக்க ஊரினன் என் தலைவன். அவனுக்கு மனைவியாக வாய்ந்த நீ, உன் நெஞ்சில் பலப்பல துன்பத்தைப் பெறுக. காலம், இடம், தகுதி எதுவும் பாராமல் கொடை கொடுக்கும் அதியமான் நெடுமான் அஞ்சி போரிடும் போர்க்களம் உள்ள இரவில் மக்கள் துயிலாதது போல நீ தூங்கும் நாட்களும் சிலவாகும் என்று தன் நெஞ்சுக்குக் கூறுகின்றாள்.

கணவன் ஒழுக்கமுடையவன் இல்லை என்பதை யாரிடம் கூறுவது? பிரிவை எண்ணி எண்ணித் தூங்காது கழித்த இரவுகள் குறித்து யாரிடம் சொல்வது? தன் துயரத்தை வெளிப்படுத்திக் கொள்ள தன் நெஞ்சே புகலிடமாய் அதனிடம் கூறி உள்ளம் ஆறுகின்றள் ஒளவையாரின் தலைவி (குறுந். 91).

களவுக் காலத்தில் இந்த நெஞ்சுக்கு நேர்தல் மிகப் பலவாக நிகழும். மனித மனம் ஓர் இருபத்து நான்கு மணிநேரத் தொழிற்சாலை. இதயத்தின் நான்கு அறைகளிலும் பரவும் குருதி அலைகள், மூளை நரம்புகளை மீட்டுகின்றன. என் காதலி ஏன் வரவில்லை? பெற்றோர் தடுத்தாரோ? வழியிடை ஏதும் துன்பம் விளைந்ததோ? நொதுமலர் மணம்பேச வந்தாரோ? என்றெல்லாம் இதயக் கூட்டில் எண்ணப் பறவைகள் சலசலக்கின்றன. இந்நிலையில் தலைவன் எண்ணுகின்றான்.

குணகடல் திரையது பறைதபு நாரை

திண்தேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை

அயிரை ஆரிரைக் கணவந் தாங்குச்

சேயல், அரியோட் படர்தி

நோயை, நெஞ்சே! நோய்ப்பா லோயே (குறுந். 128).

கீழைக் கடற்கரைக்கு அருகில் உள்ளதும்,

முதுமையால் சிறகுகள் நீங்கப் பெற்றதுமாகிய நாரை, சேரனது கடற்கரைப் பட்டினமாகிய தொண்டியில் உள்ள கடற்கரையில் அயிரை மீனைப் பெறுவதற்கு விரும்பித் தலையைத் தூக்கிப் பார்ப்பது போலத் தலைவி வந்தாளா நாம் கூறிய இடத்துக்கு எனக் காணும் நெஞ்சே! நீ வருந்துகின்றாய்! இது உன் ஊழ்வினையே காண்!' என்கிறான்.

காதல் என்பது இயல்பாக ஓடி வெற்றி பெறுகிற ஓட்டப்பந்தயமன்று. அது தடைகளைத் தாண்டி ஓடும் ஓட்டப்பந்தயம். தடுக்கி விழலாம்; காயப்படலாம், மண்ணைக் கவ்வலாம்; தோல்வியே அடையலாம்; வெற்றியும் பெறலாம். இவ்வனைத்து நிகழ்வுகளிலும் 'நெஞ்சொடு கிளத்தல்' நிகழும்.

தலைவன் 'இனித் தலைவி நமக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என நினைக்கிறான். ஊழ் இவ்வாறு அமைந்ததே எனக் கவல்கிறான். எனினும், அவன் உள்ளத்தில் காதல் அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கின்றன.

தலைவியோடு நான் இப்போது கொண்ட நட்பு இன்றோடு முடிந்து விடுவதன்று. இப்பிறவியில் அது கூடாதாயினும் மறுமையில் கூடும். நெஞ்சமே! நீ இதனை அறிக என்று பரணரின் தலைவன் கூறுகிறான் (குறுந். 199) இப்படி ஓர் ஆறுதலில் நெஞ்சத்தின் வழியே தானே கூறிக் கொள்கிறான்.

மனம் மனிதனின் உற்றத் தோழன்; பழகும் தோழனிடம் சொல்ல முடியாதவற்றையெல்லாம் மனத்திடத்துச் சொல்லி ஆறுதல் பெறலாம். வண்டு, கிளி, மலர், காற்று என்பவற்றை நோக்கிக் கூறுவன எல்லாம் நெஞ்சை நோக்கிக் கூறுவனவே. தன் நெஞ்சை நோக்கி உவகையில் நெஞ்சமே! நீ வாழ்க எனக் கூறலாம். எதிர்பாராதது நிகழும்போது பாழும் நெஞ்சே இது உன் நினைவால் வந்தது என்று தூற்றவும் செய்யலாம்.

மனம் என்பது மனிதனின் ஆறாவது புலன். ஐந்து புலன்களின் மீதும் ஊர்ந்து அவற்றை இயக்கும் தலைமைப் பொறி நெஞ்சம். நெஞ்சத்துக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது.

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்னெஞ்சே தன்னைச் சுடும்

என்கிறார் திருவள்ளுவர். நெஞ்சு அல்லது மனம் என்பது உடலுறுப்பன்று. எனினும், நெஞ்சு நெகிழ்கிறது; எரிகிறது; குளிர்கிறது; உறங்குகிறது; விழித்திருக்கிறது என்றெல்லாம் பேசும் மரபு வளர்ந்துள்ளது. 'வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே' என்கிறார். மற்றவரோடு பேசுவதற்கு ஒருவர் அனுமதி பெற வேண்டும். தன் நெஞ்சோடு பேசுவதற்கு யார் இசைவும் பெற வேண்டியதில்லை.

நெஞ்சில் நினைவுகள் ஊறும்; அங்கு அன்புடையவர்களுக்கு ஆலயம் சமைக்கலாம். நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்; நினைவிருக்கும் வரை காதலிருக்கும். காதலிருக்கும் வரை நெஞ்சொடு கிளத்தலும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

- முதுமுனைவர் அரங்க.பாரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com