
நீரின்றி அமையாது உலகு என்பதைப்போல மக்கள் செல்வம் இன்றியமையாதது. அரசர் முதல் ஏழைகள் வரை அனைவருக்கும் குழந்தைச் செல்வமே செல்வத்துள் முதலான செல்வமாக இருந்து வருகிறது. சங்க இலக்கியங்களில் குழந்தைகளைப் போற்றும் இயல்பை அகப்பாடல்களில் மட்டுமல்லாது புறப்பாடல்களிலும் காண்கிறோம்.
ஒரு குடும்பத்துக்கு மட்டுமல்ல மனித இனம் தொடர்வதற்கும் வளர்வதற்கும் குழந்தை அவசியம். குழந்தைகள் ஆரோக்கியமாகவும் வீரம், அன்பு என நற்பண்புகளோடும் வாழ்வது இதனால் அவசியமாகிறது. அதனை நன்கு உணர்ந்த நம் முன்னோர்,
ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்
மக்கட் பேற்றின் பெரும் பேறில்லை
(முதுமொழிகாஞ்சி - 51)
என்று சொல்லி வைத்தனர்.
குழந்தையினால் பெறும் இன்பத்தையும் குழந்தைச் செல்வம் இல்லாதவர்களின் வாழ்க்கையின் குறைபாட்டையும் ஒருங்கே விளக்குகிறது பாண்டியன் அறிவுடை நம்பி பாடிய புறநானுற்றின் 188ஆம் பாடல்.
படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெரும் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி,
இட்டும் தொட்டும், கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே'
இந்தப் பாடலுக்கும் அது தரும் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும் விளக்கம் தேவையில்லை.
யாழ், குழலோசை போல அமுதம் போன்றதும் செவிக்கு இன்பம் அளிப்பதும் குழந்தைகளின் மழலை மொழி. மழலைமொழி இன்பம் தருவதாகவும் குழந்தையின் தந்தைக்கு அம்மழலைச் சொல் தவப்பயனான அருள் கிடைத்தாற்
போன்றது என்பதையும்,
'யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா
பொருளறி வாரா ஆயினுந் தந்தையர்க்கு
அருள் வந்தனவால் புதல்வர் தம் மழலை'
புறம் (92)
என்று போற்றிப் பரவுகிறது புறநானூறு.
குழந்தைகளாக அவர்கள் விளையாடலும் மழலையும் மட்டுமல்ல, வளர்ந்த பிறகு அவர்கள் பெற்றோர்களுக்குப் பெருமை சேர்ப்பதிலும் இன்பம் இருப்பதைப் பதிவு செய்ய புறநானூறு தவறவில்லை.
'யாண்டுபல வாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதி ராயின்
மாண்டவென் மனைவியொடு மக்களு நிரம்பினர்
யான்கண் டனையரென் னிளையரும்';
புறம் (191)
வயது முதிர்ந்த பின்னும் நரைகூடி கிழப்பருவம் அடையாமல் இளமையாகவே ஒருவர் இருப்பதற்குக் காரணம்' மனைவி நற்குணமுடையவள்; என் பிள்ளைகள் அறிவில் சிறந்தவர்கள்; எனது கருத்தைப் புரிந்து கொண்டு நடப்பவர்கள்' என்று காரணம் சொல்கிறார் புலவர் பிசிராந்தையார்.
குழந்தைப் பருவம் மட்டுமே கொண்டாட்டத்துக்கு உரியது என்று எண்ணாமல் குழந்தைகள் வளர்ந்து தங்கள் பண்பினாலும் அறிவாற்றலாலும் சிறந்து விளங்கி பெற்றோரைப் பெருமைப்படுத்துவார்கள் என்பதால்தான் குழந்தைச் செல்வம் என்று சொல்வதைவிட மக்கட்செல்வம் என்று மக்களைப் போற்றுகிறது தமிழ் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.