இந்த வாரம் கலாரசிகன் - 23.11.2025

பாரதியாரின் பிறந்த நாளில் எட்டயபுரத்திலோ, மதுரையிலோ உங்களைச் சந்திக்கக் காத்திருக்கிறேன்!
இந்த வாரம் கலாரசிகன் - 23.11.2025
Published on
Updated on
2 min read

ஆட்சிக்கு வந்த கடந்த நான்கு ஆண்டுகளில் திராவிட சிந்தனையாளர்களுக்கும், ஆட்சிக்கும், ஆட்சியாளருக்கும் ஆதரவாக இருப்பவர்களுக்கும் மட்டுமே விருதுகளும், பதவிகளும் வழங்கப்படுகின்றன என்கிற பரவலான கருத்துக்கு விதிவிலக்காக அமைந்திருக்கிறது பேராசிரியர் முனைவர் தெ.ஞானசுந்தரத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் 'இலக்கிய மாமணி' விருது. இதனால், அந்த விருதுக்கு மரியாதை அதிகரித்திருக்கிறது.

கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தும், தலைசிறந்த தமிழறிஞர் ஒருவர் எந்தவொரு விருதும், மரியாதையும் பெறவில்லையே என்கிற ஆதங்கம் எனக்கு மட்டுமல்ல, எண்ணிலடங்காத தமிழ் அறிஞர்களுக்கும், ஆர்வலர்களுக்குமே நீண்ட நாள்களாக இருந்து வந்தது. அரசு வழங்கும் அனைத்து விருதுகளுக்கும் தகுதியான அந்தத் தமிழறிஞர் தன்மீது அரசியல் முலாம் பூசிக் கொள்ளாத ஒரே காரணத்துக்காகப் புறக்கணிக்கப்படுகிறாரோ என்றுகூட நான் அவ்வப்போது வேதனையடைவதுண்டு.

காலதாமதமானாலும்கூட அவரை அடையாளம் கண்டு, அங்கீகரித்து அவருக்கு 'இலக்கிய மாமணி' விருது வழங்கி கெளரவித்திருக்கும் தமிழக முதல்வருக்கும், தமிழ்நாடு அரசுக்கும், தமிழ் வளர்ச்சித் துறைக்கும் தமிழ்ப் பற்றாளர் ஒவ்வொருவரும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

***********

இன்னும் சரியாக 19 நாள்கள்தான் இருக்கின்றன மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு; எட்டயபுரத்தில் வழக்கம்போல அனைவரையும் சந்திக்கும் அந்த நாளுக்காக மனம் இப்போதே காத்திருக்கிறது. காலையில் எட்டயபுரம் என்றால், மாலையில் பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் 'தினமணி' நாளிதழ் வழங்கும் 'மகாகவி பாரதியார் விருது' வழங்கும் விழா எப்போதும்போல நடைபெறும்.

தமிழகம் மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள எல்லா தமிழ் ஆர்வலர்களுக்கும், பாரதி பற்றாளர்களுக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள் இது. தமிழுக்குப் புது ரத்தம் பாய்ச்சி, ஏடுகளிலும், பல்கலைக்கழகக் கூடுகளிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழை, தமிழகத்தின் வீதிகளில் பவனி வரச் செய்த 'பைந்தமிழ்த் தேர்ப்பாகன்' சுப்பிரமணிய பாரதி.

இன்றுவரையில் அவருக்கு நிகரான தமிழ்க் கவிஞர் பிறந்ததில்லை. அவர் இட்ட பாதையில் இருந்து தமிழ் தடம் புரண்டதில்லை. ஆண்டுக்கு ஒரு நாள், அவர் பிறந்த மண்ணை தரிசிக்க வாருங்கள்.

எட்டயபுரம் வரமுடியவில்லையானால் பரவாயில்லை. நீங்கள் இருக்கும் ஊரில், வசிக்கும் தெருவில் பாரதியின் படம் வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்துங்கள். கவிஞர்களும், எழுத்தாளர்களும் தங்கள் படைப்புகளை அந்த நிகழ்வில் அரங்கேற்றுங்கள். மின்மினிப்பூச்சிகளாக, மழைக்கால ஈசல்களாக, எரிநட்சத்திரங்களாக வந்துபோகும் அரசியல் தலைவர்களைக் கொண்டாடுவதை விட்டு, தமிழுக்குப் புதுப்பாதையிட்ட நவயுகக் கவிஞர் பாரதி புகழை டிசம்பர் 11-ஆம் தேதி ஏற்றிப் போற்றுங்கள்.

பாரதியாரின் பிறந்த நாளில் எட்டயபுரத்திலோ, மதுரையிலோ உங்களைச் சந்திக்கக் காத்திருக்கிறேன்!

***************

'தினமணி' நாளிதழால் 'பல்துறை வித்தகர்' என்று அடையாளப்படுத்தப்பட்டவர் சு.த.குறளினி. கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் இளம் இலக்கியவியல் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவி. எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே 'என் ஆத்திசூடி' என்கிற நூலைப் படைத்தவர்.

'உறவின் உயிர்ப்பு', 'வாசித்தேன் சுவாசித்தேன்' உள்ளிட்ட படைப்புகளுக்குச் சொந்தக்காரர் குறளினி.

'குறளமுது' என்கிற யூடியூப் சேனலை தொடங்கி அதில் தமிழ் சார்ந்த செய்திகளைப் பதிவிட்டு வருபவர். அவரது சமீபத்திய படைப்புதான் 'அவள் அவளாக...' என்கிற சிறுகதைத் தொகுப்பு.

முற்றிலும் தன்முனைப்பு சார்ந்த சிறுகதைகள் குறளினியினுடையவை. தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியின் முதல்வர் முனைவர் கா.திருநாவுக்கரசு தனது அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பதுபோல, அகவை வழிபெற்ற அனுபவமும் அறிவும் சிறுகதைப் படைப்பாக மலர்ந்துள்ளன.

ஒவ்வொரு சிறுகதையும், ஏதாவது ஒரு நுண்ணிய உணர்வின் தாக்கத்தால் எழுதப்பட்டிருக்கிறது. தாய் அவருக்குத் தந்தையானது, தந்தை அவருக்குத் தாயுமானது, நாய்க் குட்டி நட்பானது, பேராசிரியர்கள் தோழமைகள் ஆனது, நண்பர்கள் பேராசிரியர்கள்போல வழிகாட்டியானது என்று பல அனுபவங்கள் கதைக் கருவாகி இருக்கின்றன.

வருங்காலத்தில் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவராக வலம் வரப்போகும் குறளினிக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்!

அதிர்ந்துதான் போனேன் நான். புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்த அந்தக் கவிதைத் தொகுப்பும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த கடிதமும் என்னை தூங்கவிடாமல் செய்துவிட்டன. 'எனது முதல் கவிதைத் தொகுப்பை விமர்சனத்துக்காக இணைத்துள்ளேன். இதைப் படித்துவிட்டு உங்கள் விமர்சனத்தை வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்பதுதான் அந்தக் குறிப்பு.

ஒசூரில் வசிக்கும், திருநெல்வேலியைச் சொந்த ஊராகக் கொண்ட 'அதிரன்' என்கிற புனைபெயரில் கவிதைகள் எழுதும் க.இசக்கியப்பன், பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் மறைமுக வரிப் பிரிவில் மேலாளராகப் பணிபுரிகிறார் என்கிறது அதிலுள்ள தன்னுரைக் குறிப்பு. அவரது கவிதைத் தொகுப்பின் பெயர் 'அம்மாவின் பூனை'.

பக்கத்துக்குப் பக்கம் 'சபாஷ்' போட வைக்கும், 'அடடா' என்று உரக்கச் சொல்ல வைக்கும், ரசித்துப் பகிர்ந்து கொள்ள வைக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பை ஒருவருடைய முதல் கவிதைத் தொகுப்பு என்று எப்படி நம்புவது?

உதவி ஆசிரியர் பொருநை வளவன், முதுநிலை வடிவமைப்பாளர் சுந்தரபாண்டியன், எனது தனி உதவியாளர் சந்திரமெüலி எல்லோருமே கவிஞர்கள். இந்தத் தொகுப்பில் இருந்து எந்தக் கவிதையைத் தேர்ந்தெடுப்பது என்கிற குழப்பம் எனக்கு. ஒன்றைவிட மற்றொன்று நன்றாக இருக்கிறது. நாங்கள் அனைவரும் ஒருசேர ஆமோதித்து, நான் சொன்னபோது அதைக் கவிஞர் ஜெயபாஸ்கரன் ஸ்லாகித்து ரசித்த கவிதை இது. மற்ற கவிதைகளை அவ்வப்போது வெளியிடுகிறேன்.

பெருமை கொள்

நீ பாரதியின் செல்லம்மாள்

என்றேன்

உண்மை சொல்

நீ பாரதியா???

என்றாள்

எங்கோ வலித்தது

எனக்கு...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com