முனைவர் ம. திருமலை
பல வகைகளில் வளர்ச்சி கண்டு முன்னேறியதும் தாராள மனப்பான்மை உடையது இன்றைய சமூகம் என்று கூறிக்கொள்கிறோம். ஆனால், இப்போதுதான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜாதியுணர்வும் ஆணவமும் தலைதூக்கி நிற்கின்றன. பண்டைய நாள்களில் காதலர்கள் விஷயத்தில் சமூகம் எப்படி நடந்து கொண்டது என்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாகக் காணலாம்.
காதலில் உறுதியாக இருக்கும் ஒரு தலைவனும் தலைவியும் எப்படியாவது இணைந்து இல்லறம் நடத்த முயற்சி செய்வது இயல்பு. அவர்களின் காதலுக்கு குடும்பம், சமூகம் போன்ற நிறுவனங்களின் அங்கீகாரம் கிடைக்காதபோது அவர்கள் ரகசியமாக வெளியேறி வேற்றூருக்குச் சென்று மணம் செய்து கொள்வர்.
தொன்மையான இலக்கியங்கள் இதை 'உடன்போக்கு' என்று குறிப்பிட்டன. இது குறித்து ஆய்வு செய்த உளவியல் வல்லுநர்கள் 'உடன்போக்கு' என்பது ஓர் ஆண் ஒரு பெண் தொடர்புடையது மட்டுமல்ல; அது சமூக உள்ளடக்கம் உடையது என்று கூறுகின்றனர். பெற்றோரின் பிடிவாதம், சமூகத்தில் காணப்படும் பரந்து விரிந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகள் காரணமாகவே 'உடன்போக்கு' நிகழ்வதாகக் கூறுகின்றனர்.
சங்க இலக்கிய ஆய்வுகளின் முடிமணியாகத் திகழும் 'தமிழ்க் காதல்' என்ற நூலை எழுதிய வ.சுப.மாணிக்கனார், தலைவன், தலைவி இருவரின் உள்ளோட்டங்களையும் ஊராரின் புறவோட்டங்களையும் கணித்தறிந்த தோழி... இனிக் களவுக் காதல் நீளாது; உடன்போக்கே வழி என்று ஆற்றுப்படுத்துவாள் என்று உடன்போக்கு தோன்றும் முறையை விளக்குகிறார்.
வ.சுப.மா.வின் கூற்று உளவியல் வல்லுநர்களின் ஆய்வோடு ஒத்திருப்பதை உணரலாம். 'தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை' என்ற நூலை எழுதிய பேராசிரியர் சுப்புரெட்டியாரும் இதே கருத்தை முன்வைக்கிறார். இவர்களின் கருத்துகளுக்கு மூலமாக அமைவது தொல்காப்பியரின் பின்வரும் நூற்பா:
ஒருதலை உரிமை வேண்டினும் மகடூஉப்
பிரிதலச்சம் உண்மை யானும்
அம்பலும் அலரும் களவு வெளிப்படுக்குமென்று
அஞ்ச வந்த ஆங்கிரு வகையினும்
நோக்கொடு வந்த இடையூறு பொருளினும்
போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும்
(பொருளியல் 29)
உடன்போக்கு எதனால் நிகழ்கிறது என்ற செய்தி இதுகாறும் விளக்கப்பட்டது.
இற்றை நாள்களில் உடன்போக்கை சமூகமும் பெற்றோரும் எதிர்கொண்டு கையாளும் முறை குறித்து விரிவாக விளக்க வேண்டியதில்லை. ஆனால், பண்டைக்காலத்தில் தமிழ்ச் சமூகம் உடன்போக்கைக் கையாண்ட முறையை அறிய இலக்கியச் சான்றுகள் கிடைக்கின்றன; காதலை அற்றை நாள் சமூகம் இயன்றவரை ஆதரித்தது என்றே கொள்ளலாம்.
தலைவன், தலைவி இருவரும் காதல் கொண்டு உடன்போக்கில் சென்ற பின்னர் செவிலித்தாய் அவர்களைத் தேடிக்கொண்டு செல்கிறாள்; வழியில் எதிர்ப்பட்டவரிடம் விசாரிக்கிறாள். தலைவனையும் தலைவியையும் கண்டு கடந்து வந்த துறவியர், சிறந்த பொருத்தமான இணையரைக் கண்டோம்; அவர்கள் அன்பு பூண்டவர்கள்; அவர்களைப் பிரித்துத் தீங்கு செய்து விடாதீர்கள்; சந்தனம் மலையில் பிறந்தாலும் அது பூசுபவர்களுக்குத்தான் பயன்படும்; மலைக்குப் பயன் ஏதுமில்லை; நன்முத்துகள் கடலில் பிறந்தாலும் அணிபவர்களுக்கு அல்லாமல் கடலுக்குப் பயன்படுவதில்லை; நல்ல இசை யாழில் பிறந்தாலும் கேட்பவர்களுக்கு அல்லாமல் யாழுக்குப் பயன்படுவதில்லை; அதைப் போன்றே உங்கள் மகளும் காதலனுக்குப் பயன்படுவதல்லாமல் உங்களுக்குப் பயன்படப் போவதில்லை; எனவே, உலக இயல்பை உணர்ந்து காதலர்களைச் சேர்த்து வைத்து வாழ வையுங்கள் என்று செவிலித் தாய்க்கு அறிவுரை கூறுகின்றனர். பாலை பாடிய பெருங்கடுங்கோவின் பாலைக்கலிப் பாடல் பின்வருமாறு அமைகிறது:
பலவுறு நறுசாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவை
தாம் என் செய்யும்?
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு
அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம்
என் செய்யும்?
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு
அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம்
என் செய்யும்?
காதலர்களைச் சமூகம் பாதுகாத்து அங்கீகரித்தமைக்கு இப்பாடல் சான்று. பெற்றவர்கள் காதலுக்கு எவ்வகையில் எதிர்வினையாற்றினர் என்பதைக் இனி காணலாம்.
தலைவி, தலைவனுடன் உடன்போக்கில் சென்றபின்னர் செவிலித்தாய் வருந்திக் கூறும் ஒரு பாடல் குறுந்தொகையில், மோசிகீரனாரால் பாடப்பட்டுள்ளது. அதில் உடன்போக்கிற்கு முந்தைய நாளில் செவிலித்தாய் தலைவியைத் தழுவிக்கொண்டபோது அவள் செவிலித்தாயை விலக்கினாள் என்பதைக் கூறி வருந்துகிறாள்.
ஆம்பல் மலரை விட மென்மையான தலைவியின் மனநிலையை முன்னரே அறியாமற் போனதற்காக வருந்துகிறாள். அப்பாடல் பின்வருமாறு அமைகிறது:
பெயர்த்தனென் முயங்க யான் வியர்த்தென
னென்றனள்
இனியறிந்தேன் அது துனி யாகுதலே
கழறொடியாஅய் மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தன் தண்ணியளே
(குறுந்தொகை- 84)
இப்பாடலில் தலைவியின் காதலையும் உடன்போக்கினையும் முன்னரே அறியாமற் போனதற்காக செவிலித்தாய் வருந்துகிறாள் என்பது குறிப்பிடப்பட்டது. முன்னரே அறிந்திருந்தால் அறத்தொடு நின்று திருமணத்தை நிகழ்த்தியிருக்க இயன்றிருக்கும் என்று
செவிலித்தாய் வருந்துவதான உணர்ச்சி இப்பாடலில் தொக்கி நிற்கிறது.
தமிழ்ச் சமூகம் பழைமையான நிலையில் அறத்தின் வழியே நடை பயின்றது. தனி மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்தது. களவுக்காதலை அறத்தின் வழியில் நின்று கற்பாக மாற்ற உதவி செய்தது. தோழியின் செயல்பாடுகளும் கண்டோர், செவிலித்தாயின் கூறுகளும் நமக்கு அறத்தின் மேன்மையை எடுத்துக்காட்டி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.