மீனாட்சி பாலகணேஷ்
தமிழின் இன்சுவை, இம்மொழியில் பாடப்பட்ட கவிதைகளின் அருமையான சொற்பிரயோகங்களில் இருந்து விரிந்து தெரியும். சிற்றிலக்கியங்களில் இவற்றைப் படித்து இன்புறலாம். பலவிதமான கவிதை வடிவங்களைக் கொண்டு இயற்றப்படுவன சிற்றிலக்கியங்கள்.
உலா என்பது அழகான சிற்றிலக்கியம். இறைவன் உலாப்போதலைக் கண்டு ஏழு பருவத்துப் பெண்டிரும் அவர் மீது காதல் கொள்வதனை விவரிப்பன உலா இலக்கியங்கள். இவற்றுள் ஒன்றே பெயர் தெரியாத புலவரொருவரால் இயற்றப்பட்டுள்ள திருச்சிறுபுலியூர் உலாவாகும். உலா என்றால் பவனி வருதல் எனப்பொருள்.
இது சிறுபுலியூரில் எழுந்தருளியுள்ள திருமாலைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவன் பவனிவரும் சிறப்பைக் கூறும் தமிழ்ப் பிரபந்தமாகும். அழகான சொல்லாடல்களைக் கொண்டு விளங்கும் இதனின்றும் சில கண்ணிகளைக் காண்போம். திருமாலின் குணநலன்களை விளக்கும் சில கண்ணிகள்:
...........- சீராரா
காயத்தா னூற்றுவரைக் காயத்தான் பாண்டவர்பங்
காயத்தா னானச காயத்தான் - காயத்தான்
வாகனத்தான் சொன்னவடி வாகனத்தான் வேள்வியிலா
வாகனத்தான் செய்யதிரு வாகனத்தான் - மாகனத்த
ஆழியான் கண்டுயில்பா லாழியா னொற்றைநட
வாழியா னாழிநடு வாழியான் - ஆழியநீர்
சீரார் ஆகாயத்தான் - சிறப்புப் பொருந்திய பரமாகாயத்தை (உயர்வான உடலை) உடையவன்; நூற்றுவரைக் காயத் தான் பாண்டவர் பங்காய் அத்தானான சகாயத்தான்- துரியோதனன் முதலான நூறு கௌரவர்களையும் தண்டிக்கும் பொருட்டுத் தானே பாண்டவர் பக்கத்தில் மைத்துனனாகி இருந்து உதவி செய்தவன். காயத்தான் - உருவத் திருமேனி கொண்டவன்.
வாகனத்தான் - (கருட) வாகனத்தை உடையவன்; சொன்ன வடிவு ஆகம் நத்தான் - சொர்ணம் போன்ற வடிவான உடலைக் கொண்டவன்; வேள்வியில் ஆவாகனத்தான் - யாகங்களில் ஆவாகனம் செய்யப்படுபவன், நிலை பெறுபவன். செய்ய
திரு ஆகம் நத்தான் - சிவந்த (அழகிய) இலக்குமியை மார்பில் விரும்பி வைத்தவன்.
மா கனத்த ஆழியான் - பெரிய (எடை) வலிமை பொருந்திய சக்கரத்தினை உடையவன்; கண் துயில் பாலாழியான் - பாற்கடலில் கண் துயில் பவன்; ஒற்றை நடவு ஆழியான் ஆழி நடு வாழியான் - செலுத்தப்படும் ஒற்றைச் சக்கரத்தை உடைய தேரை உடையவனான சூரியனுடைய மண்டலத்தின் நடுவில் வாழ்தலை உடையவன்.
இவ்வடிகளில் காயத்தான், வாகனத்தான், ஆழியான் எனும் சொற்களை பலமுறை வெவ்வேறு பொருள்களில் வருமாறு பயன்படுத்தியுள்ளது சுவையாக உள்ளது.
இத்தகைய செய்யுள் மூலம் சிற்றிலக்கியங்களைப் படித்து இன்புறுவதும் ஒரு சுவையான அனுபவமாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.