கோப்புப் படம்
கோப்புப் படம்Center-Center-Chennai

ஏமாந்த சோணகிரி ஈசர்

திருவண்ணாமலைக்கு சோணகிரி என்ற ஒரு சிறப்புப் பெயர் உண்டு.
Published on

திருவண்ணாமலைக்கு சோணகிரி என்ற ஒரு சிறப்புப் பெயர் உண்டு. சோணம் என்றால் செம்மை நிறம், கிரி என்றால் மலை. சோணகிரி என்றால் செம்மையான நெருப்புப் பிழம்பாய் ஒரு காலத்தில் புராணப்படி அயனுக்கும் அரிக்கும் நடுவே சிவ

பெருமான் மலையாய் நின்றதால் அப்பெயர் சிறப்பாய்

அமைந்தது.

சோணகிரியாம் அச்சொல்லை ஆடாமல் அசையாமல் இருக்கும் மலை என்ற கருத்தில் நாட்டுப்புறத்தில் 'ஏமாந்த சோணகிரி' என்பதாய், எளிதாக ஏமாறக்கூடியவரை ஏளனமாகக் கூறுவர். அங்ஙனம் ஏமாளியாகக் கூறப்படும் ஒருவரை ஓர் அஃறிணையான சடம் என்பது போன்ற கருத்திலேயே அச்சோணகிரி என்ற சொல்லை மொழிவர்.

உயர்வான அத் தெய்விகச் சொல்லை அஃறிணைக்குரியதாய்ச் சொல்லுங்கால் அச்சொல், ஏமாறும்

குற்றத்திற்குரியதைச் சுட்டுவதாக உள்ளது. அதற்கு அகராதிப்படிப் பொருள் உணருங்கால் 'ஏளனத்திற்குரிய ஏமாளியான எளிமையர்' என்ற பொருள்தரும் 'சோணங்கி' என்ற சொல்லே பேச்சுநடையின்

திரிபால் 'சோணகிரி' என்பதான வழக்காகி இருக்கக்கூடும் எனலாம்.

இந்தச் சொல் இலக்கிய வழக்காக ஏற்றம் பெற்றுள்ள உண்மையை திருவண்ணாமலை குறித்த பல நூல்களுள் ஒன்றான அருணகிரி அந்தாதியில் கீழ்க்

கண்டவாறு, திருவண்ணாமலையிலேயே தங்கி வாழ்ந்த குகை நமசிவாய தேவர் பாடியுள்ளார்.

ஏமாந்த சோணகிரி யீசரடி யாரடிக்கே

பூமா மலர்துவிப் போற்றாதார்}தாமென்றும்

வெஞ்ச மனத்திருக்கும் வேடராய் நாடேறும்

வஞ்சநம னுக்கஞ்சு வார். (71)

ஏமாந்த சோணகிரியாம் ஈசனின் அடியார்களது திருவடிகளைப் பூமலர்தூவிப் போற்றாதவர்கள் விலங்குகளை அஞ்சாமல் வேட்டையாடும் கொடிய மனத்து வேடராய் திரிந்தாலும் அவர்கள் எமனுக்கு அஞ்சுபவர்கள்} என்பது பாடலின் கருத்து.

இப்பாடல் கூறும் 'ஏமாந்த சோணகிரி ஈசர்' என்ற சொற்கள்}அடியார்களிடத்தில் ஏமாந்து போகும் அண்ணாமலையாம் சோணகிரியாகிய ஈசர் என்ற பொருளைத் தருகின்றன. இதனால், சோணகிரி

யாகிய ஈசர் அடியார்களிடத்தில் ஏமாந்து போகக்

கூடிய எளிமையானவர். அதாவது, செளலப்பியமானவர் எனத் தெரிகிறது.

இங்ஙனம் ஈசன் அடியார்களிடத்தில் எளிவந்த தன்மையாக ஏமாந்துபோகும் பண்பை ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் கூறும் 'கூடாரை வெல்லும் கோவிந்தா' என்ற தொடருக்குக் கூறிய வியாக்கியான பொருள் நுட்பத்தைப் பொருத்திப் பார்த்தால், அடியாரிடம் சிவன் ஏமாந்த சோணகிரியாவதை உண்மை என்று உணரலாம் எனத் தெரிகிறது.

'கூடாரை வெல்லும் கோவிந்தன்' என்றால், 'பகைவரை வெல்லும் கோவிந்தன்' என்று பொருள். ஆனால், தம்மிடம் பக்திகொண்டவரிடம் கோவிந்தன் தோல்வியடைவானாம். அதுபோல ஈசன் தன் அடியாரல்லாதவரிடத்து ஏமாறாதவராய் இருந்தாலும் அடியாரிடத்து ஏமாந்து போவான் என்பதால் குகை நமசிவாயர் 'ஏமாந்த சோணகிரி ஈசர்' என்றது சரியே எனலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com