

முனைவர் கா.ஆபத்துக்காத்தபிள்ளை
தமிழ் அகப்பொருள் இலக்கியங்களில் தலைவன், தலைவியை அடுத்து சிறப்பிடம் பெறுபவர்கள் தோழியும், செவிலியுமேயாவர். தலைவியைத் தாய் பெற்றெடுத்தாலும் அவளை வளர்த்து ஆளாக்கும் பெரும் பொறுப்பு அக்காலத்தில் செவிலிக்கே உரியதாக இருந்தது. இவர்களுள் செவிலி செவிலித் தாய் என்றே அழைக்கப்பட்டாள்.
அதற்குக் காரணம் தலைவிக்குத் தாயே செவிலிதான் எனும் அளவுக்கு சங்க காலத்தில் உரிமை உடையவளாய் இருந்திருக்கிறாள். 'தாய் எனப்படுவோள் செவிலி ஆகும்'. (தொல்; பொருள்களவி 34) என்ற தொல்காப்பியர் கூற்றும் அதனை உறுதிப்படுத்தும்.
தலைவி தலைவனோடு உடன்போக்கு நிகழ்த்தியவழி அவளை நினைந்து வருந்தி செவிலி புலம்புவது அகப்பொருளில் சிறப்பாகப் பேசப்படுகிறது. சங்கப் பாடல்களில் 27 பாடல்கள் (குறுந். 9 நற்றி.1, ஐங்குறு. 13, அக.3, கலித். 1) செவிலி கூற்றாக அமைகின்றன.
குறுந்தொகையில் அமையும் ஒன்பது பாடல்களில் மூன்று பாடல்கள் (356, 378, 396) கயமனார் என்னும் புலவரால் பாடப்பெற்றவையாகும். அவை 'மகட்போக்கிய செவிலித்தாய் உரைத்தது' எனும் துறையின் கீழ் அமைகின்றன. தலைவியிடம் செவிலி கொண்டிருந்த தாயன்பை அறிவுறுத்துவனவாய் அப்பாடல்கள் அமைவது சிறப்பாகும்.
தலைவி தலைவனோடு உடன்போக்கு நிகழ்த்துகிறாள். அதனை அறிந்த செவிலி 'நீரற்ற, நிழலே இல்லாத கொடிய பாலைநிலத்தை தன்மகள் எங்ஙனம் கடந்து போவாள்? நீரற்ற சுனையின் பக்கம் தேங்கிக் கிடக்கும் வெவ்விய கலங்கல் நீரை தவ்வெனும் ஓசை எழும்படி குடிக்க எங்ஙனம் வல்லமை பெற்றாள்?
வீரக்கழலணிந்த தன் தலைவன் காப்பான் என்ற நம்பிக்கைதானே அதற்குக் காரணமாகயிருக்கும் என புலம்புகிறாள். இதனை,
நிழலான் றவிந்த நீரி லாரிடைக்
கழலோன் காப்பக் கடுகுபு போகி
அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த
வெவ்வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய
யாங்குவல் லுநள்கொ றானே யேந்திய
செம்பொற் புனைகலத் தம்பொரிக் கலந்த
பாலும் பலவென வுண்ணாள்
கோலமை குறந்தொடித் தளிரன் னோள்.
(குறுந்.356)
என்ற பாடல் உணர்த்தும், தலைவியின் பிள்ளமைத் தன்மையை நேரில் அனுபவித்ததால் செவிலி யாங்கு வல்லுநள் கொல்? என வியக்கிறாள். செவிலி தலைவியிடம் கொண்ட பரிவை இது உணர்த்தக் காணலாம்.
அடுத்த பாடல் செவிலியின் தாயன்புக்கு முத்தாய்ப்பாய் அமைகிறது. 'மகட் போக்கிய செவிலி தெய்வத்துக்குப் பராயது' என்ற துறையின் கீழ் அப்பாடல் அமைகிறது. தெய்வமே, என் மகள் செல்லும்கொடிய பாலை நிலத்தில் ஞாயிறு தன் வெப்பக் கதிர்களை வீசாதிருக்கட்டும்; நடக்கும் பாதையில் மரங்களின் நிழல் பொருந்தி அமையட்டும்; மலையிடத்தே அவள் செல்லும் சிறுவழியில் மழை பெய்து அவள் நடக்க மணல் குளிர்ச்சியாக அமையட்டும் என வேண்டுவதாய் அமைகிறது. இதனை,
ஞாயிறு காயாது மரநிழற் பட்டு
மலைமுதல் சிறுநெறி மணம்மிகத் தாஅய்த்
தண்மழை தலையின் றாக நந்நீத்துச்
சுடர்வாய் நெடுவேற் காளை யொடு
மடமா வரியை போகிய கரனே. (குறுந்.378)
என்ற பாடலில் காணலாம். பாலையொன்றாலே 'ஞாயிறு காயும் வெப்பம் தானே'. அதென்ன நிழல்தரும் மரங்களைக் கொண்ட சோலையா? மழை பெய்து செழித்தால் அது பாலை என அழைக்கப்படுமா? எல்லாம் தெரிந்தும் தெய்வத்தை வேண்டச் செய்வது செவிலியின் தாயுள்ளம் தானே என எண்ணும்போது பெற்ற தாயைவிட பன்மடங்கு பரிவை செவிலியிடம் காண முடிகிறது.
இறுதிப்பாடல் தலைவியின் இளமைத் தன்மை, கொடிய பாலையின் வெம்மையைத் தாங்குமா? என நினைத்து செவிலி வருந்துவதாய் அமைகிறது. இச்சிறுமகள் பாலை நிலத்தைக் கடந்து செல்வது எளிதானது என்றா நினைத்தாள்? அடுத்து செவிலி, பாலை வழியை நினைத்துப் பார்க்கிறாள். பாலைநில வழியில் மலையருகே வளர்ந்து நிற்கின்றன ஓமை மரங்கள்.
இம்மரத்தின் கிளையை நீருக்காக தன் கொம்பால் குத்தி நிற்கும் ஆண்யானையானது வெப்பம் மிகுந்த அம்மலையடிவாரத்தில் மேகம் முழங்கும் இடியோசையைக் கேட்டு மழையின் வரவை ஆவலோடு எதிர்பார்த்து நிற்கிறதாம். மேலும், வழியில் மூங்கில்கள் வழி காணமுடியாத அளவிற்கு அடர்ந்து வளர்ந்துள்ளதாம். இத்தகு கொடிய பாலை வழி எளிதென நினைத்து சென்றுவிட்டாளே என்று வருந்துகிறாள். இதனை,
பாலு முண்ணாள் பந்துடன் மேவாள்
விளையா டாயமொ டயர்வோ ளினியே
எளிதென உணர்ந்தனள் கொல்லோ! முளிசினை
ஓமை குத்திய வுயர்கோட் டொருத்தல்
வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன்
மழைமுழங்கு கடுங்குர லோர்க்கும்
கழைதிரங் காரிடை யவனொடு செலவே
(பா.396)
என்ற பாடல் உணர்த்தும்.
இப்பாடலில் செவிலி தலைவியின் மாற்றத்தை உணராமல் அவளைச் சிறுகுழந்தையாகக் கருதி நடத்தியதை 'குறுந்தொடி தளிர் அன்னோள்' 'மடமா' என்ற குறிப்புகளில் இருந்து அறியலாம். இது செவிலியின் அறியாமையா? அல்லது தன் மகள் தன்னை மீறி எதுவும் செய்யாள் என்ற நம்பிக்கையா? என்று சிந்திக்க வைக்கிறது. கொடி வளர்ந்தால் ஒரு கொழுகொம்பை நாடுவது இயற்கை என்பதைச் செவிலி அறியாதவளா? அவளும் ஒரு காலத்தில் இன்று நற்றாய் எனும் அன்றைய தலைவிக்குத் தோழியாக இருந்தவள்தானே.
இல்லத்தில் தந்த இனிய பாலை வெறுக்கும் தலைவி உடன்போக்கின்போது பாலை நிலத்துக் கலங்கல் நீரை தவ்வெனும் ஓசையுடன் விரும்பி உண்பது, தலைவன் அருகிருக்கும் காரணமே என்பதை 'கழலோன் காப்ப' (356) 'சுடர்வாய் நெடுவேல்காளை' (378) எனத் தலைவனைச் சிறப்பிப்பதிலிருந்து அறிய முடிகிறது. பெற்றோருக்குப் பிறகு இன்பமோ, துன்பமோ ஒரு பெண்ணுக்கு தலைவனே எல்லாம் என்கிற அக்காலப் பண்பாட்டையும் இங்கே தலைவியிடம் காண முடிகிறது.
ஒருவார்த்தைகூட தன்னிடம் கூறாது மறைத்து தலைவனோடு சென்றுவிட்டாளே என்ற ஏமாற்றமும் துக்கமும் செவிலிக்கு இருந்தாலும் செல்லும் வழி தன் பெண்ணுக்கு இனிதாக அமையட்டும் என்று தெய்வத்தை வேண்டுவது செவிலியைத் தாய்க்கு மேலாக எண்ண வைக்கிறது.
பாலை நிலத்தின் வளர்ந்துள்ள ஓமை மரத்தின் பட்டையின் உள்ளிருக்கும் நீரை அருந்த யானை அதன் கொம்பால் குத்தும் என்பதும் புதிய செய்தியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.