இந்த வாரம் கலாரசிகன் - 07-09-2025

மகாகவி பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி நினைவுக்கு வந்தவுடன், இந்த வாரத்தில் அவர் குறித்த பதிவு வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டது.
இந்த வாரம் கலாரசிகன் - 07-09-2025
Published on
Updated on
2 min read

மகாகவி பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி நினைவுக்கு வந்தவுடன், இந்த வாரத்தில் அவர் குறித்த பதிவு வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி வெளிவந்த கிருங்கை சேதுபதியின் 'மகாகவி பாரதியும் மகான் குள்ளச்சாமியும்' என்கிற புத்தகத்தை ஏற்கெனவே படித்து பதிவு செய்வதற்காக எடுத்து வைத்திருந்தேன்.

மகாகவி பாரதியாரின் வாழ்க்கையில் பலர் தாக்கம் ஏற்படுத்தி இருக்கிறார்கள். அரசியல் குருவாகத் திலகர் பெருமானையும், ஞானம் புகட்டிய வழிகாட்டியாக நிவேதிதா தேவியையும் ஏற்றுக்கொண்ட பாரதியார், சித்த மரபில் தன்னை ஆட்கொண்டவர்களான குள்ளச்சாமி, கோவிந்தசாமி, யாழ்ப்பாணத்துச்சாமி ஆகியோரைக் கருதியதாகத் தெரிகிறது.

புதுவையில் யாழ்ப்பாணத்துச்சாமியும், கோவிந்தசாமியும் பாரதியை ஈர்த்து வந்திருக்கிறார்கள் என்றாலும், குள்ளச்சாமி என்று அவரால் குறிப்பிடப்படும் மாங்கொட்டைச் சாமிதான் பாரதியாரின் உள்ளம் கவர்ந்தவராக விளங்கினார் என்று கூறலாம். இல்லையென்றால், புதுவை கனகராஜாவுக்குக் கடிதம் எழுதி, குள்ளச்சாமியைத் தக்க துணையுடன் சென்னைக்கு அனுப்புமாறு தமது கைப்பட கடிதம் எழுதி இருக்க மாட்டார்.

பாரதி பல நாள்கள் மெளன விரதம் இருந்ததாக செல்லம்மாள் பாரதியும் யதுகிரி அம்மாளும் குறிப்பிடுகிறார்கள். அதன் பின்னணியில் குள்ளச்சாமியின் தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் கிருங்கை சேதுபதி. அது மட்டுமல்ல, சுதேசமித்திரன் நாளிதழில் காளிதாஸன் என்கிற புனைபெயரில் பாரதியார் எழுதிய பல கட்டுரைகளில் வேணுமுதலி, குள்ளச்சாமி குறித்த சில அரிய செய்திகளைப் பதிவு செய்திருக்கிறார்.

பாரதியாரின் மறைவு குறித்த தகவலை குள்ளச்சாமிக்குத் தெரிவித்தவர் அவர்தான்.

குள்ளச்சாமிக்கும் பாரதியாருக்கும் இருந்த நெருக்கம் குறித்த இன்னொரு முக்கியமான பதிவு 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சிதம்பரனாருடையது. சென்னை பெரம்பூரில் வ.உ.சி. வசித்துக் கொண்டிருந்தபோது, ஒருநாள் இரவு குள்ளச்சாமியும், பாரதியும் தன்னைக் காண வந்திருந்தது குறித்து அவர் எழுதி ருக்கிறார்.

பாரதியாரின் சுயசரிதையில் முக்கியமான இடத்தைப் பெறும் குள்ளச்சாமி குறித்த பல தகவல்களையும் திரட்டி, கூடவே பாரதியாரின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளைச் சேர்த்து

சுவாரஸ்யமான வரலாற்றுப் பதிவை வழங்கி இருக்கிறார் இளவல் கிருங்கை சேதுபதி. பாரதியியல் ஆய்வில் தவிர்க்க முடியாத பல தரவுகளைக் கொண்ட படைப்பு ''மகாகவி பாரதியும் மகான் குள்ளச்சாமியும்.''

முந்தைய தலைமுறை குறித்த தகவல்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் மிகப் பெரிய பங்களிப்பைத் தமிழகத்துக்குச் செய்து கொண்டிருந்தவர் கவிஞர் ஜீவபாரதி. அது மகாகவி பாரதியார் குறித்ததாக இருந்தாலும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்ததாக இருந்தாலும் கவிஞர் ஜீவபாரதியின் பதிவுகள் முக்கியமான தரவுகள். அந்த வரிசையில் இப்போது அவர் இன்னொரு முக்கியமான பணியைச் செய்து தமிழினத்துக்குத் தொண்டாற்றி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டை ஒட்டி மார்க்சிஸ்ட் கட்சி, 'தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்' , 'தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்' என்கிற தலைப்பில் இரண்டு புத்தகங்கள் வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள்.

அந்தப் புத்தகங்களை மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் அனுப்பித் தந்தார். இப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்திருக்கிறது ஜீவபாரதி தொகுத்திருக்கும் 'காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்' என்கிற புத்தகம்.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் கம்யூனிஸ்டுகளின் பங்கு என்பது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, அகற்ற முடியாததும்கூட. தன்னலமற்ற பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் தொழிற்சங்கங்களை உருவாக்கியதிலும், மக்களை அரசியல் ரீதியாக சித்தாந்தப்படுத்துவதிலும், பொதுவுடைமைச் சிந்தனைகளை விதைத்ததிலும் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள்.

'தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்' என்று அறியப்படும் சிங்காரவேலர், தோழர் லெனினைச் சந்தித்த தமிழர் என்கிற பெருமைக்குரிய எம்.பி.டி.ஆச்சார்யா என்று தொடங்கி தோழர் மதுரை மாரி வரையிலான 100 கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் குறித்த பதிவுகளைத் தாங்கி வெளிவந்திருக்கிறது 'காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்'.

பிரிந்துபோன மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களை விட்டுவிடாமல், அவர்களது பங்களிப்புகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இணைத்திருக்கும் பெருந்தன்மைக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் தோழர் கவிஞர் ஜீவபாரதியையும் எத்தனைப் பாராட்டினாலும் தகும்.

ஒன்றுபட்ட சென்னை ராஜதானியில் இருந்தவர்கள் என்பதால் மலபாரின் ஏ.கே.கோபாலன், புதுவை சுப்பையா உள்ளிட்ட தோழர்களையும், கட்சியிலிருந்து விலகி மாற்று இயக்கங்களில் இணைந்தவர்கள் என்றாலும்கூட மணலி கந்தசாமி, மோகன் குமாரமங்கலம் போன்றவர்களையும் இணைத்திருப்பதை சிலாகித்துப் பாராட்டாமல் எப்படி இருக்க முடியும்?

'பட்டியல் இத்துடன் முடிந்துவிடவில்லை; அடுத்த ஐம்பது தயாராகிறது' என்கிற மாநிலச் செயலர் இரா.முத்தரசனின் அணிந்துரை வரிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

தனது மூன்று மாத அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பி இருந்த கவிஞரும் இயக்குநருமான சீனு.ராமசாமி என்னைச் சந்திக்க அலுவலகம் வந்திருந்தார். அவரது இரண்டு திரைப்படங்கள் வெளியிடத் தயாராக இருப்பதாகச் சொன்னவர் நீண்ட நேரம் கவிதைகள் குறித்தும், திரைப்படங்கள் குறித்தும், எம்.ஜி.ஆர்., சிவாஜி கால செய்திகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தார்.

அவர் வெளிக்கொணர்ந்திருக்கும் புதிய கவிதைத் தொகுப்பு 'மேகங்களின் பேத்தி' அதிலிருந்து ஒரு கவிதை.

ஒருவன் சட்டைப் பையிலிருந்து

இன்னொருவன் சட்டைப் பைக்குப்

பணம் போகும் இடைவெளி தூரம்தான்

நானறிந்த உலகின் மிக நீண்ட பாதை,

நெரிசல் துளியற்ற சாலை,

அவ்வளவு சாதாரணமாக

நடந்தேறாத பயணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com