உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

மழை வரவை அறிந்த தமிழர்கள்

மழை இல்லையேல் பசும்புல்கூட தலைக்காண்பது அரிது (குறள் 16) என்று வள்ளுவப் பெருந்தகை மழையைச் சிறப்பிக்கிறார்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:04 pm IST

- முனைவர் சொ. ஏழுமலை

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று (குறள் 11)

மழை இல்லையேல் பசும்புல்கூட தலைக்காண்பது அரிது (குறள் 16) என்று வள்ளுவப் பெருந்தகை மழையைச் சிறப்பிக்கிறார்.

இளங்கோவடிகள் 'மாமழைப் போற்றுதும்' என மழையை வாழ்த்து நிலையில் வைத்தார். ஒளவையார் 'வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்' என்று மழையின் பயனை மொழிந்தார்.

வெப்பத்தின் காரணமாக நீரானது ஆவியாக மேலே சென்று மேகமாக மாறுகிறது. இந்தச் செயல் தொடர்ந்து நடைபெறும்போது மேகம் கருமேகமாக மாறுகிறது. கருமேகங்கள் காற்றின் திசைக்கு ஏற்ப நகர்கின்றன. நகர்ந்த மேகங்கள் மலையில் மோதும்போது அங்குள்ள தாவரக் குளிர்க்காற்றால் மேகத்தில் உள்ள நீரானது குளிர்ந்து மழையாகப் பெய்கிறது.

அதேபோன்று, வெப்பத்தின் காரணமாகக் காற்று ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்குச் செல்லும்போது அங்குள்ள வெற்றிடத்தைக் குளிர்ந்த காற்று நிரப்பிப் பிறகு மழையாகப் பெய்கிறது. இதுவே அறிவியல் அடிப்படை. இத்தகைய கருத்துகளை அன்றைய தமிழன் நன்றாக அறிந்து மழையை முன்னெச்சரிக்கையுடன் எதிர்கொண்டான்.

மழை தோன்றுவதைப் பெருங்குன்றூர் கிழார் நற்றிணையில்,

மாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித்

தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய்,

மலை இமைப்பது போல் மின்னி,

சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே?

(நற்.112)

என்ற அடிகளில், 'காற்று பெரிய கடலையும் அருவியையும் நீராவியாக எடுத்துக் கொண்டு மேகமாகச் சென்று மலைமீது மோதி, மலை மின்னலைச் சிமிட்டிப் பிறகு மழையாகத் தந்தது' என்று கூறுகிறார். இதில் மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாக வெளிப்பட்டதையும் காட்டுகிறார். இவ்வாறே மழை உருவாக்கத்தை மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமாரனாரும்

'...வானம்

நளி கடல் முகந்து, செறிதக இருளி,

கனை பெயல் பொழிந்து, கடுங் குரல் பயிற்றி,

கார் செய்து... (நற்.289)

என்ற அடிகளில் காட்டுகிறார்.

எயினந்தை மகன் இளங்கீரனார் இதே கருத்தை,

குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளித்

தண் கார் தலைஇய நிலம் தணி காலை

(நற்.346)

என்ற அடிகளில் காட்டுகிறார். மேலும் இவ்வடிகளில் புலவர், கிழக்குக்கடல் காற்று மேற்கு மலைக்குச் சென்று மழை பெய்தது என்று கூறி கார் பருவத்தின் இறுதி நிலையைக் கூறி வாடைக் காற்றின் தொடக்கத்தை நுட்பமாகக் கூறுகிறார்.

இதேபோன்ற மழை உருவாக்கத்தைப் புலவர்கள் அகம்.183, ஐங். 469, 492 ஆகிய பாடல்களில் பதிவு செய்துள்ளனர்.

மழை உருவாக்கத்தை அறிந்த தமிழன் அது எப்போது வரும் என்பதை அறிந்து அதைச் சிறப்பாகப் பயன்படுத்தினான். மழை வருவதற்கு உரிய காலமாகக் கார் காலத்தை (ஆவணி, புரட்டாசி) வகுத்திருந்த போதிலும் சில வேளைகளில் கார் காலத்திலும் மழை வராமல் பொய்த்ததுண்டு. எனவே, அதிகமாகக் காற்றடிப்

பதையும் மின்னல் வெட்டுவதையும் மழை

வருவதற்குரிய அடையாளமாகக் கொண்டான். இதனை,

நெடு வான் மின்னி, குறுந் துளி தலைஇ,

படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து

(நற்.274)

இரு விசும்பு அதிர மின்னி,

கருவி மா மழை கடல் முகந்தனவே! (நற்.329)

உலகம் உவப்ப, ஓது அரும்

வேறு பல் உருவின், ஏர்தரும் மழையே!

(நற்.237)

எனும் அடிகள் காட்டுகின்றன.

பெருங்குன்றூர்கிழார் மற்றுமொரு பாடலில் (நற்.347), 'வேனில் கால வெப்பம் கொடுமையாக இருந்தது. அதைத் தாங்காத தவளையானது மணலின் உள்சென்று புகுந்து கொண்டது' என்று வெயின் கொடுமையைச் சுட்டிக்காட்டி, இனி மழை பெய்வதற்கான சூழல் எழுந்துள்ளதைப் புலையன் வாயிலாக, 'கடலினிடத்தே நீரை எடுத்துக் கொண்டு மேகம் வானில் சென்று மின்னலாக மின்னி மழை பொழியும். இடியோசை கேட்ட பாம்புகள் அழியும். மேகங்கள் குன்றினை மூடிக் கொள்ளும்' என்று பறை கொட்டினான் என மழை வரவை நுட்பமாகக் காட்டுகிறார்.

முக்கூடற்பள்ளு இலக்கியமும், 'மலையாளம், ஈழம் ஆகிய பக்கங்களில் இருந்து மின்னல் சூழ்ந்தது. கிணற்றுச் சொறித் தவளை சப்தமிட்டது. சேற்று நண்டு மழை வருவதை உணர்ந்து தன் வளை வாயிலில் தண்ணீர் வராது அடைத்தது. வானம்பாடி பறவை பாடி மகிழ்ந்தது' போன்ற அறிகுறிகள் மூலமாக மழை வரப்போவதைக் காட்டுகிறது.

குறிஞ்சி நிலக் குறவர்கள் தினையை மழையின் நிலைமை அறிந்து அறுவடை செய்ய மேக இயக்கத்தை இரவு நேரத்தில் மரத்தில் உள்ள மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சத்தைக் கொண்டு கணித்தனர். மேகம் அங்கேயே நிலைகொண்டிருந்தால் மழை வரும் என்றெண்ணி அறுவடையை ஒத்திப் போட்டனர். மேகம் நகர்ந்து வட, தென்திசை சென்றால் மழை வராது என்றெண்ணி காலையில் அறுவடை செய்ய முனைந்தனர்.

இதைப் பெருங்கெளசிகனார்,

பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து,

செல் மழை இயக்கம் காணும் (நற்.44)

எனக் காட்டுகிறார்.

இளம்புல்லூர்க் காவிதி, கீழைக்காற்று எழுந்து விண்ணிலே மேகமாகச் சென்று மலையை மோதி மழையாகப் பெய்தாகக் கூறி (நற்.89) கீழைக்காற்று மேகமாக எழுந்தால் மழை வரும் என்ற செய்தியைக் காட்டுகிறார்.

ஆவூர்க் காவிதிகள் சாதேவனார், வலமாக எழுந்த காற்று மழை தந்து உடன் அடங்கும் என்ற குறிப்பைத் தருகிறார்(நற்.264).

வெள்ளிக்கோல் வடக்கே தோன்றினால் மழை நன்கு பெய்யும் என்று சிலப்பதிகாரம் காட்டுகிறது. இவ்வாறு மழை வரவை அறிந்ததால் தமிழர்கள் சிறப்பாக உழவுத் தொழிலை மேற்கொண்டு ஒப்பற்ற நிலையில் வாழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.