

தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல; அதன் நோய் எதிர்ப்பு தன்மைக்குத் தேவையான அத்தனை ஆற்றல்களும் செறிந்துள்ளன. தமிழ் இலக்கியத்தில் பாலூட்டும் மரபு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
திருஞானசம்பந்தருக்கு இறைவனே இறைவியாக வந்து திருமுலைப்பால் சுரந்து பொற்கிண்ணத்தில் வைத்தூட்டினார் என சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்திலும் மொழிந்துள்ளார்.
அரந்தைகெட புகலியர்கோன்
அமுதுசெயத் திருமுலைப்பால்
சுரந்தளித்த சிவகாம சுந்தரி
- உமாபதி சிவாச்சாரியார்
தாய்ப்பால் உண்ணாத குழந்தை நிறைவான உடல் நலத்தையும், பிணி எதிர்க்கும் துணிவையும் பெற்றிருக்காது எனக் குறிப்பால் உணர்த்துகிறது இந்த வரி.
வயிறா தாய்முலை யுண்ணாக் குழவியும்
நல்குரவு சேரபட்டார்
- திரிகடுகம்
தாய்ப்பால் கொடுக்கும் முறை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் சுரப்பு முனையை கையால் பிடித்து குழந்தையின் திருவாய்க்குள் நுழைத்து தாயமுது ஊட்ட வேண்டும் என இந்தப் பாடலில் உள்ளது. இதன் மூலம் சுரக்கும் பால், குழந்தையின் நாசிக்குள்ளோ, கண்களுக்குள்ளோ, செவி
களுக்குள் வழிந்தோ செல்லும் அபாயம்
தடுக்கப்படுகிறது.
புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை
முலைவாய் உறுக்கும் கைப்போல
- நற்றிணை
இல்லறக் கடமையில் இயங்கி வரும் ஒரு தாய் எந்தப் பணியில் இருந்தாலும் குழந்தையின் பசி நேரம் குறித்து எப்போதும் ஒரு பக்கத்தில் சிந்தித்துக் கொண்டே இருப்பாள். நாம் இப்போது சென்று பாலுணவு வழங்காவிடில் குழந்தை பசியால் வருந்தி அழுமே! என்று சிந்தித்து விரைந்து சென்று பாலூட்டுவார். இதை மணிவாசகர், இறைவன் தனக்காக தாயைவிட விரைவாக தயை கொண்டு
இறங்கி வந்து அருள் பாலிப்பதாகச்
சொல்கிறார்.
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ஒளி பெருக்கி
உலப்பு இலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து
- திருவாசகம்
பாலுண்ணாத குழந்தை சவலைப் பிள்ளையாக நலிந்து மெலிந்து வருந்தும் என்பதையும் தனது பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தாயாய் முலையைத் தருவானே
தாரா தொழிந்தாற் சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ!
- மணிவாசகர்
உலக வாழ்க்கையை துறந்து, செல்வத்தின் மீதும் பகட்டு வாழ்க்கையின் மீதும் பற்றறுத்த பட்டினத்துப் பிள்ளையார் 'குழந்தைக்கு பசி என்றவுடன் பரிவோடு பற்றி எடுத்து இரண்டு கைகளால் தாங்கி உணவுக் கலசத்தினால் பாலூட்டிய தாயின் உன்னதத் தன்மையினை அவரது மறைவின்போது நினைவுகூரும்
பாடல் அனைவரின் கண்களிலும் நீர்
ததும்பச் செய்வன.
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம்
நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் -
செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
- பட்டினத்தார்
தாய்ப்பால்தான் தனித்துவம் வாய்ந்தது, அதுதான் குழந்தைக்கு உகந்தது. பசுவின் பால் அதன் கன்றுக்கு உரியது என்ற கருத்து தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இதை
மெய்ப்பிக்கும் வகையில் பசுவின் பால்
அருந்துவோரை மானிடப் பசுக்கள் எனச் சாடுகிறார் சிவவாக்கியர்.
மாடுகொண்டு வெண்ணெய்
உண்ணும் மானிடப் பசுக்களே
- சிவவாக்கியார்
கருவினுள் சிசுவாக இருக்கும் போது கொடி வழியே தாய் - சேய் தொடர்புள்ளது. பிரசவித்த பிறகு அத்தொடர்பு தாய்ப்பால் மூலம் பல மாதங்கள் தொடர்ந்து செல்கிறது.
செயற்கை கரைசல்களையும், செரிக்காத உணவினங்களையும் வலிந்தூட்டி குழந்
தைக்கு தீங்கிழைக்காமல் தாய்க்குரிய முதற்
கடனாக தாய்ப்பால் ஊட்டுவதை விழிப்புடன் செய்தால் விழிப்புணர்வு வாரங்கள் எனத் தனியே தேவைப்படாது. குழந்தை நலத்தால் குடும்ப நலமும் கூடும், இல்லங்களில் அமைதி நடமாடும், மகிழ்ச்சி உறையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.