

அம்மூவனார் எழுதிய குறுந்தொகைப் பாடல் (163) ஒன்றில் தலைவியின் துயரம் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சான்றோர்கள் இரங்கலும் இரங்கல் நிமித்தத்தையும் நெய்தல் திணைக்குரிய உரிப்பொருளாக வகுத்துள்ளனர்.
நெய்தல் நிலத் தலைவி, தலைவன் பிரிந்து சென்ற துயரத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் வருந்தி இரங்குகிறாள்.
தலைவனைப் பிரிந்த தலைவி அவன் நினைப்பாகவே இருக்கிறாள். நெய்தல் நிலத் தலைவன் பெரும்பாலும் கடலோடியாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அவன் வணிகத்தின் பொருட்டு அல்லது மீன் பிடிக்கும் பொருட்டாகத் தலைவியைப் பிரிந்து கடல் வழியாகச் சென்றிருப்பான். தலைவன் மிகவும் கடினமான கடல் பயணத்தை மேற்கொள்கிறான். தலைவனின் பயணம் மற்ற நிலங்களில் நடைபெறுவது போன்றதன்று. கடல் பயணம் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாததாக இருக்கிறது.
தலைவியானவள் தலைவனின் பிரிவை மட்டுமே நினைத்து வருந்தினாள் என்று கருத முடியாது. தலைவன் எவ்விதமான ஆபத்துமின்றி பயணத்தை முடித்துத் தன்னிடம் திரும்பி வர வேண்டும் என்றே நினைக்கிறாள். தலைவனை நினைத்து வருந்தி, கடற்கரையில் அமைந்துள்ள பெருந்துறைக் குடியிருப்பில் காத்திருக்கிறாள். அவளது கவனம் முழுவதும் கடலின் மீது குவிகிறது. ஒரு சூழ்நிலையில் தலைவி கடலுடன் உரையாடுகிறாள்.
யார் அணங்கு உற்றனை கடலே, பூழியர்
சிறுதலை வெள்ளைத் தோடு பரந்தன்ன
மீன்ஆர் குருகின் கானல்அம் பெருந்துறை
வெள்வீத் தாழை திரை அலை
நள்ளென் கங்குலும் கேட்கும், நின் குரலே? (163)
கடலே! பூழி நாட்டினரின் சிறிய தலையையுடைய வெள்ளாட்டின் கூட்டம் பரவினாற் போல், மீன்களை உண்ணும் கொக்குகளையுடைய சோலை சூழ்ந்த பெரிய துறையினிடத்து வெள்ளிய பூவையுடைய தாழையை அலைகள் அலைக்கின்ற நடு இரவிலும் உனது ஆரவாரம் கேட்கின்றது. நீ யாரால் வருத்தமடைந்தாய்? என்கிறாள்.
தலைவியின் கூற்றானது, நான் தலைவன் மீது கொண்ட காதல் காரணமாக வருந்துகிறேன். நீ யார் மீது கொண்ட காதலால் வருந்துகிறாய் என்று கடலிடம் கேட்கும் தொனியில் வெளிப்படுகிறது. இந்தப் பாடல் அகத்திணை மரபினையொட்டி தலைவி, தன்னுடைய ஆற்றாமையைக் கடலின் மேல் ஏற்றிக் கூறும் மரபுபற்றிய அகப் பாடலாக அமைந்துள்ளது.
அம்மூவனார் எழுதிய நெய்தல் திணைப் பாடல் போன்று நம்மாழ்வார் எழுதிய திருவாய்மொழி பாடல் (2.1.8) ஒன்றும் அமைந்துள்ளது. தலைவி ஒருத்தி உப்பங்கழியுடன் பேசுவதாகப் பாடலை அமைத்துள்ளார்.
இருளின் திணிவண்ணம் மாநீர்க் கழியே! போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெருநசையால் ஆழாந்து நொந்தாயே?
(2.1.8)
இருள் செறிந்தாற் போன்று செறிந்த நிறமுடைய கருமையான உப்பங்கழியே! மிகவும் மருட்சி அடைந்து இராப்பகல் முடிவுற்றாலும் நீ தூங்காமல் இருக்கிறாய். உருண்டு வருகிற சகடத்தின் உருவாக அமைந்த அசுரனை உதைத்துக் கொன்ற பெருமாள் திருவருள் புரிவான் என்னும் பெருவிருப்பால் ஈடுபட்டு நீ வருந்தினாயோ? என்கிறாள்.
நம்மாழ்வார் படைத்த தலைவியின் கூற்று, நான் பெருமாள் மீது கொண்ட பற்றால் வருந்துகிறேன். நீ யார் மீது கொண்ட பற்றால் வருந்துகிறாய் என்று உப்பங்கழியிடம் கேட்கும் தொனியில் அமைந்துள்ளது. இந்தப் பாடல் பக்தி இலக்கியத்திற்குரிய நாயகன் நாயகி பாவத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
நம்மாழ்வார் இறைவனை உயிரின் காதலனாக (நாயகன்}நாயகி பாவம்), அனைத்திலும் நிறைந்தவனாக, மற்றும் எளிதில் அடையக் கூடியவனாகப் பாடி மகிழ்கிறார். நம்மாழ்வாரின் பக்தி நெறி என்பது, இறையுடன் பிரிக்க முடியாத காதல், முழுமையான சரணாகதி, மற்றும் வேதாந்த ஞானத்துடன் கூடிய பக்தி உணர்வின் உச்ச நிலையாகும்.
இரண்டு பாடல்களுக்கும் ஒத்த தன்மை இருப்பதை அறிய முடிகிறது. அம்மூவனார், அகத்திணை மரபினை உரிப்பொருள் வெளிப்பாடாகப் பயன்படுத்தியுள்ளார். நம்மாழ்வார், அகத்திணை மரபினைப் பக்தி நெறியை வெளிப்படுத்தும் இலக்கிய உத்தியாகக் கையாண்டு வெற்றியடைந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.