வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

பங்குனி உத்திரப் பைந்தமிழ் முருக விழா

தமிழ்க் கடவுளாம் முருகன் குறித்த கருத்தாடல்கள் தொன்று தொட்ட தமிழிலக்கியங்களில் இடம்பிடித்துள்ளதற்குப் பல சான்றுகள் உள்ளன.

News image

தமிழ்க் கடவுளாம் முருகன்

Updated On :29 மார்ச் 2026, 11:41 am

தமிழாகரர் தெ. முருகசாமி

தமிழ்க் கடவுளாம் முருகன் குறித்த கருத்தாடல்கள் தொன்று தொட்ட தமிழிலக்கியங்களில் இடம்பிடித்துள்ளதற்குப் பல சான்றுகள் உள்ளன.

அரும்பெறல் மரபின் பெரும்பெயர்

முருகன் என்று முருகன் குறித்த பண்டறி

சுட்டான கருத்தை நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் கூறியுள்ளார்.

அரும்பெறல் மரபு என்பது தொன்று தொட்ட காலப்பழைமையைச் சுட்டுவதாகும். முருகு, முருகன் என்ற சொற்கள் சங்க இலக்கியங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. நினைத்ததை முடிப்பவன் முருகன் என்பதாகப் புறநானூற்றில் 'முன்னியது (நினைத்ததை) முடிக்க முருகொத்தீயே' எனப் போருக்கு எழும் ஒரு மன்னனின் வெற்றிப் புறப்பாட்டை நக்கீரர் (56) புகழ்ந்தார்.

முருகனது கோயிலைக் கோட்டம் என்பதாகவே அழைத்த குறிப்பைப் பொன்முடியாரின் புறநானூற்றுப் பாடலால் (299) உணர முடிகிறது.

திருப்பரங்குன்றத்தின் முருக வழிபாட்டைப் பரிபாடலில் பரக்கக் காணலாம். மகப்பேற்றுக்காகவும், வாணிபத்தில் பலன் உண்டாகவும் வேண்டிக் கொண்டார்களாம் மக்கள்.

'கரு வயிறு உறுக' எனக் கடம்படுவோரும் செம்பொருள் வாய்க்க எனச் செவி சார்த்துவோரும் என்பதாக நல்லந்துவனார் (8) கூறுகிறார்.

முருகனை வழிபட்டதோடு அவரது வேலை மட்டுமே வைத்து வழிபட்டதாகச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறும் பல கோட்டங்களுள் வேல்கோட்டமும் (கோயில்) ஒன்று என்பதைக் கூறியுள்ளார்.

முருகனைப் பற்றிய புராணக் கூறுகள் தமிழுக்கு வடநாட்டுத் தழுவலால் வந்தன. அதன் தொடர்பாகத்தான் சூரபதுமனை அழிக்க ஆறுமுகனும் பன்னிரண்டு கைகளுடன் காட்சியளித்தான் என்பர்.

ஆனாலும், தமிழனின் சைவ சித்தாந்தத் தத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் முருகனின் கதைகள் பொருத்தமாக உணரப்பட்டன. இதனால், இயற்கை வகையில் கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்புடைய முருகன், உலகியல் வாழ்வில் அந்நியப் படாதவனாகவே வணங்கப்பட்டதால் ஆங்காங்கே கோயில்கள் உருவாயின. கோயில்களில் பொதுவாகப் பூஜை வழிபாடுகளெல்லாம் நடத்தப்பட்ட குறிப்பை வள்ளுவரே 'சிறப்பொடு பூசனை' என்பதாகவே (18) அக்கால ஆன்மிகத்தைக் கோடிட்டுக் காட்டினார்.

தமிழ்நாட்டின் எந்த விழாவும் முழு நிலா நாளில் நடந்ததாகவே திருஞானசம்பந்தர் பாடிய மயிலாப்பூர் பதிகத்தின் மூலம் உணர முடிகிறது. அந்த வகையில் அகநானூற்றில் உறையூர் முதுகூத்தனார் என்பார். பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள் (137) என்பதாகக் கூறும் தொடராலும் உணர முடிகிறது.

பங்குனி முயக்கம் என்பது பங்குனி மாத நிறைமதியும் உத்திர நட்சத்திரமும் சேர்ந்த நாளில் திருவிழா நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. தொன்றுதொட்ட பங்குனி உத்திர விழாக்கள் தனித்த முருகன் திருக்கோயில்களில் மட்டுமின்றிப் பொதுவாக சிவாலயங்களிலும் சிறப்பாக நடைபெறுகின்றன.

பழநி, குன்றக்குடி, மயிலம் போன்ற பழம்பெரும் தனித்த முருகன் கோயில்களைப் போல் பின்னாளில் தோன்றிய முருகன் திருக்கோயில்களில் பங்குனி உத்திர விழா நடைபெற்று வருகிறது.

தேர் பவனியும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செய்வதாகவுமான சிறப்புகள் இந்தப் பங்குனி உத்திரத்துக்கு உண்டு.

மயிலம் சுப்பிரமணியர் துதியமுது பாடிய பாவேந்தர் பாரதிதாசன் அந்தக் காலத்தில் மயிலம் முருகனுக்கு ஒளவை சு. துரைசாமி பிள்ளையுடன் நேர்த்திக் கடனாகக் காவடி எடுத்ததான செவிவழிச் செய்தி புறந்தள்ள முடியாததாக உள்ளது. கடலூரைச் சேர்ந்த அப்பர் கரையேறிய குப்பத்தில் பங்குனி உத்திரப் பெருவிழா வெகு சிறப்பாகும்.

அதுபோல், நெய்வேலி வேல் உடையான்பட்டு முருகன் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா பார்போற்றும் விழாவாக அங்கு கிடைக்கும் நிலக்கரி பொருளுக்கு இணையாகப் பெருமையுடன் நடைபெறுவது உலகறிந்த விழாவாகும்.

பங்குனி உத்திர முருகன், முத்தமிழ்க் கடவுள் என்பதால்தான் தமிழ்மொழியோடு அவன் இணைத்துப் பேசப்படுகிறான்.

முருகு என்ற சொல் தமிழின், வல்லின- மெல்லின- இடையினம் போன்ற மூன்று இலக்கணப் பகுப்புடைய சொல். உலகின் நாற்றிசையுடன் மேல், கீழ் என்ற ஆறுபக்கம் போல் ஆறுமுகங்கள் அவருக்கு உண்டு. ஒரு முகத்துக்கான இரு கைகள்போல் ஆறுமுகத்துக்கும் பன்னிரு கைகளும் பன்னிரு உயிரெழுத்துகள் போன்றனவாம்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி தாம் எழுதிய தொல்காப்பியப் பூங்காவில் சுட்டும் உயிரெழுத்து 12 என்பதற்கான கருத்துத் தொடர்ச்சியில் முருகனது கையைப் பொருத்திக் கூறுவர் என்றார்.

முருகன் சிவனின் பாங்கானவன், அதாவது அம்சமானவன் என்பதற்கு இணையாக நெற்றிக் கண்ணுடன் ஆறுமுகத்திற்கான 18 கண்கள் தமிழின் மெய்யெழுத்துகள் பதினெட்டைக் குறிப்பதாகக் கூறுவதுண்டு.

முருகன் கையிலுள்ள வேல், உயிருக்கும் மெய்யிற்கும் இணைப்பாக உள்ள ஆயுத எழுத்து போன்ற தனி நிலையானதாகத் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் கூறுவார்.

ஆக, மங்காப் புகழ் பங்குனி உத்திர விண்மீன் பேரொளி நாள் போன்ற அரும்பெறல் மரபின் பெரும் பெயர் முருக விழாவை ஆங்காங்கே கண்டு பேறு பெறுவோமாக.

பெரும்பெயர் என்பதைத்தான் வடமொழியாளர்கள் மகா வாக்கியம் என்பர். இருப்பினும், அவன் ஸ்ரீ முருகன் என்பதைவிடத் திருமுருகன் என்ற பெரும்பெயர் உடையவர் என்பதே தமிழ் வழக்காம் என்க!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.