ஒற்றிழந்த 'தாய்க் கிழவி'
'தாய் கிழவி' என்ற பெயரில் அண்மையில் வெளியான தமிழ்த் திரைப்படம் தமிழிலக்கியவாதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கோப்புப் படம்

கோப்புப் படம்
'தாய் கிழவி' என்ற பெயரில் அண்மையில் வெளியான தமிழ்த் திரைப்படம் தமிழிலக்கியவாதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, இலக்கணவல்லாரின் சிந்தனையைத் தூண்டியுள்ளது. சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
'தாய் கிழவி' என்ற தொடரில் உள்ள இரு சொற்களுக்கிடையில் 'க'கர ஒற்று (க்) மிகுந்து, 'தாய்க் கிழவி' என்றே இருந்திருக்க வேண்டும் என்றும், 'தாய் கிழவி' என்று ஒற்றுப் பிழையுடன் அமைந்திருக்கக் கூடாது என்றும் தமிழ் ஆர்வலர்களில் பலர் கருத்துச் சொல்கின்றனர்.
தமிழை வளர்க்கும் நடைமுறையில் சுணக்கம் என்பது இருந்தால் கூடப்பரவாயில்லை, திரைப்படத்தின் தலைப்பில் இதுபோன்ற பிழைகளைச் செய்து தமிழ் வளர்ச்சியில் பெரிய தடையை ஏற்படுத்துவது சரியன்று என்கின்றனர்.
இந்தத் திரைப்படத்தின் பெயர்த் தலைப்பை இலக்கணக் கண்கொண்டு பார்த்தால், 'தாய் கிழவி' என்று குறித்திருப்பது தவறானது, 'தாய்க் கிழவி' என்பதே சரி.
'க'கர ஒற்று வரலாமா? வேண்டாமா? என்பதற்கு தொல்காப்பியம் விடை தருகிறது. அதன் எழுத்ததி
காரம், 'புள்ளி மயங்கியலில்' வரும் நூற்பா (தொல்.358),
யகர இறுதி வேற்றுமைப்
பொருள் வயின்
வல்லெழுத் தியையின்
அவ்வெழுத்து மிகுமே
என்கிறது இதற்கு,
'ய'கர ஈற்றுப் பெயர் (நாய்), வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண், வல்லெழுத்து முதன்மொழி (கால்), வந்து புணரின், அவ்வெழுத்து (க் ) மிகுந்து, (நாய் +கால்= நாய்க்கால்) நாயினது கால் என்ற 6-ஆம் வேற்றுமைப்பொருள் தந்து முடியும் என்பது அந்நூற்பாவின் பொருள்.
அதே தொல்காப்பியம், 'தாய்' என்ற சொல்லை மட்டும் எடுத்துக்கொண்டு (நூ.359), 'தாய்' என்பது நிலை மொழியாய் நிற்க, வருமொழியில் வல்லெழுத்தை முதலாகவுடைய 'கை' என்ற சொல் வந்து புணருமாயின் (சேருமாயின்), வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லொற்று மிகாமல், 'தாயினது கை' என்று 6-ஆம் வேற்றுமைப் பொருளில் தாய்கை என இயல்பாய் முடியும் என்கிறது.
இதே இலக்கண வழியில் பார்த்தால், இந்தத் திரைப்படத்தின் பெயரான 'தாய் கிழவி' என்பது சரியன்று; 'தாய்க் கிழவி' என்பதே சரி. இது தாயாகிய கிழவி என்பதை உணர்த்தும்.
அதாவது, இத்திரைப்படத்தில் வரும் தாயும் கிழவியும் ஆகிய இருவரும், வெவ்வேறான இரு பெண் பாத்திரங்கள் எனில், அதாவது, உம்மைத்தொகை எனில், 'தாய் கிழவி' என்பது சரி. ஆனால், தாயும் கிழவியும் ஒரே பெண்பாத்திரம் என்பதால், ஒற்று மிகுந்து, 'தாய்க் கிழவி' என்பதே சரியாகும்.
'பத்துதல' என்ற தவறான தலைப்பும், இவ்வாறே ஒற்றின்றி அமைந்ததே.
எந்தவொரு திரைப்படத்துக்கும் பெயர் சூட்டுபவர்கள், அதை வெளியிடுமுன், தமிழ் ஆர்வலர்களின் ஆலோசனை பெற்றால், சரியான பெயர் வைப்பு நிகழும்.
இதேபோல, புதிதாக உருவான தமிழக அரசியல் கட்சி (த.வெ.க.) ஒன்றும் 'க'கர ஒற்று இல்லாமல் அதன் பெயரை வெளியிட்டுவிட்டுப் பின் அது தவறு என்று சுட்டிக்காட்டிய பின்பு, 'க'கர ஒற்றைத் தொடரினுள் உடனடியாக நுழைத்துச் சரிசெய்து கொண்டமையும் இங்கு நினைவுகூரத்தக்கது.
ஆதலால், ஒற்றுப் பிழை என்பது மொழியைச் சிதைக்கும் என்பதை உணர்ந்து செயல்பட்டால், தமிழ் வளரும் என்பது உறுதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...