இன்று பிற கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். தனிப்பெரும்பான்மை பெற முடியாவிட்டாலும், சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாகவும், தமிழகத்தில் பரவலான ஆதரவு பெற்றதாகவும் உயர்ந்திருக்கும் த.வெ.க. கட்சியின் தலைவரான அவருக்கு வாழ்த்துகள். தமிழ் மொழியின் நன்மை கருதி அவரிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கத் தோன்றுகிறது.
மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. சம்ஸ்கிருதத்துக்கு இணையான வரலாறு கொண்ட பழைமையான மொழி என்கிற பெருமைக்குரிய தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற்றதால், அதன் தனித்துவம் நிறுவப்படும் என்று எதிர்பார்த்த நமக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கியதுடன் நின்றுவிடவில்லை என்பதுதான் எதிர்பாராத திருப்பம்.
2008-இல் கன்னடம், தெலுங்கு மொழிகளுக்கும், 2013-இல் மலையாளத்துக்கும், 2014-இல் ஒடிஸா மொழிக்கும் தமிழுக்கு வழங்கியதுபோல செம்மொழி அந்தஸ்து வழங்கியபோது, அதை நாம் வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது. இப்போது மராத்தி, பாலி, பிராகிருதம், அஸ்ஸாமி, பெங்காலி ஆகிய மொழிகளும் தமிழ், சம்ஸ்கிருதத்துக்கு இணையான செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளாகத் திகழ்கின்றன.
அது போகட்டும், இப்போது நான் சொல்ல வரும் விஷயம் அதுவல்ல.
தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. அதற்காக ஆண்டுதோறும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. தமிழ் வளர்ச்சிக்கும், செம்மொழித் தமிழ் குறித்த ஆராய்ச்சிகளுக்கும் வழிகோலுவதுதான் அந்த நிறுவனத்தின் பணி.
சாதாரணமாக இது போன்ற மத்திய அரசின் அமைப்புகளின் தலைவர்களாக மொழியியல் வல்லுநர்களோ, அரசுத் துறை உயர் அதிகாரிகளோதான் நியமிக்கப்படுவது வழக்கம். அதற்கு மாறாக, அன்றைய மன்மோகன் சிங் அரசிடம் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, செம்
மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைமையிடத்தைச் சென்னையில் நிறுவிக் கொண்டது மட்டுமல்லாமல், தன்னையே அதன் தலைவராகவும் நியமித்துக் கொண்டார் அன்றைய முதல்வர் மு. கருணாநிதி.
தமிழ் மீதும், அதன் வளர்ச்சி குறித்தும் முன்னாள் முதல்வரும், திமுகதலைவருமான கருணாநிதியின் அதீத அக்கறையும், ஈடுபாடும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. ஆனால், அவர் தன்னைத் தலைவராக நியமித்துக் கொண்டு பல திட்டங்களைச் செயல்படுத்த நினைத்ததுதான் இப்போது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் திறம்படச் செயல்படுவதற்குத் தடையாக மாறி இருக்கிறது.
கருணாநிதிக்குப் பிறகு இதுவரையில் நான்கு முதல்வர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். அவர்களில் யாருக்குமே தமிழ் மொழி குறித்த ஆழமான புரிதலோ, தமிழ் இலக்கியத்தில் நாட்டமோ இருக்கவில்லை. அதன் பாதிப்பை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எதிர்கொள்கிறது.
அதன் ஆரம்பகால துணைத் தலைவர்களாக முனைவர் வ.ஐ. சுப்பிரமணியமும், வா.செ. குழந்தைசாமியும் சிறிதுகாலம் இருந்தனர். நீண்ட காலம் யாரும் இல்லாமல் இருந்து, முனைவர் தெ. ஞானசுந்தரம் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரும் சரி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு துணைத் தலைவராகத் தொடரும் டாக்டர் சுதா சேஷய்யனும் சரி, தலைவராக இருக்கும் முதல்வரைச் சந்திப்பது என்பதேகூட இல்லை என்பதுதான் நிலைமை.
வாரம் ஒரு முறை வேண்டாம், மாதம் ஒரு தடவையாவது தலைவர் தலைமையில் நிர்வாகக் குழு கூட வேண்டாமா? ஆலோசனைகள் வழங்க வேண்டாமா?
மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவதற்கான திட்டம் தீட்ட வேண்டாமா?
அதனால் புதிதாகப் பொறுப்பேற்க இருக்கும் முதல்வர் விஜய்க்கு எனது தாழ்மையான வேண்டுகோள்- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டு, அந்த நிறுவனம் திறம்படச் செயல்படுவதற்கு அவர் வழிகோல வேண்டும்!

பரபரப்பான அரசியல் நிகழ்வுக்கு நடுவில், புத்தகங்கள் படிப்பதற்கு இந்த வாரம் எனக்கு அவகாசம் கிடைக்கவில்லை என்பதை நான் நேர்மையுடன் ஒப்புக் கொள்கிறேன். ஏற்கெனவே படித்து எழுத வேண்டும் என்பதற்காகத் தேர்ந்தெடுத்து அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து ஒன்றை இந்த வாரம் பதிவு செய்கிறேன். இத்தனை ஆண்டுகள் பதிவு செய்யாமல் தள்ளிப் போனதற்கு வருந்துகிறேன்.
முன்பெல்லாம் ஏதாவது புதிய புத்தகத்துடன் சந்திக்க வருபவர் மகேந்திரா புக் சென்டர்ஸ் மகேந்திரன்.
இப்போது சில ஆண்டுகளாகவே அவரை நான் சந்திக்கவில்லை. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு என்னைச் சந்தித்தபோது அவரும் ஜெ. வீரநாதனும் அன்பளிப்பாகத் தந்த புத்தகம் இயற்கை வழியில் வேளாண்மை'.
மசானபு ஃபுகோகா, நம்ம ஊர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் முன்னோடி. அவரது வேளாண்மை குறித்த கருத்துகளை தத்துவங்கள் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். இன்று சர்வதேச அளவில் பேசப்படும் இயற்கை உரங்கள் குறித்த விழிப்புணர்வுக்குப் பிள்ளையார் சுழி போட்டவரே அவர்தான்.
2008-ஆம் ஆண்டு தனது 95-ஆவது வயதில் இயற்கை எய்திய மசானபு ஃபுகோகா, தெற்கு ஜப்பானில் உள்ள ஷிகோகு தீவில் உள்ள விவசாய கிராமத்தில் பிறந்தவர். நுண்ணுயிரியலில் தேர்ச்சி பெற்ற ஃபுகோகா, தனது 25-ஆவது வயதில் தனது சொந்த நிலத்தில் முன்னெடுத்த இயற்கை விவசாய முயற்சிகள் உலகளாவிய வரவேற்பைப் பெற்றன.
ஜப்பானிய மொழியில் பல நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி இருக்கும் மசானபு ஃபுகோகாவின் பசுமைத் தத்துவத்தின் கோட்பாடு மற்றும் செயல்முறை குறித்த பதிவுகள்தான் இயற்கை வழியில் வேளாண்மை' என்கிற புத்தகம். இதைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் கயல்விழி'.
இந்த நூல் வெறும் விவசாயம் குறித்தானது மட்டுமல்ல, தத்துவ ரீதியாக, ஆய்வு ரீதியாக, அனுபவ ரீதியாக வேளாண்மையின் அத்தனை பரிமாணங்கள் குறித்தும் மசானபு ஃபுகோகாவின் விரிவான பதிவாகும்.
கவிஞர் செந்திருவின் ஆதிவனத்தின் குருதி' கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது
இந்தக் கவிதை.
கிழிந்த
புடவைகளைப்
பேழைக்குள்
பத்திரப்படுத்திய
அம்மாவின் ரகசியம்
புரியவில்லை எனக்கு-
நான் தாவணி கட்டும் வரை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் விஜய் பிரசாரம் - புகைப்படங்கள்

விஜய் ஆதரவுடன் முதல்வராக இபிஎஸ் திட்டம்; பதவியை விட்டுக்கொடுத்தேன்! செங்கோட்டையன்

இந்த வாரம் கலாரசிகன் - 05-04-2026

என்சிஇஆா்டி-க்கு நிகா்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து: சொந்த தனித்துவ பட்டங்களை வழங்க அதிகாரம்
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

