மேகேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் மேலிடத்திற்கு முதல்வர் விஜய் அழுத்தம் கொடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்! நவ. 18-ல் தவெகவின் 2 ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்! சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்நாட்டைக் கட்டமைப்பதில் பழங்குடியின சமூகம் ஈடு இணையற்ற பங்களிப்பு: பிரதமர் மோடிகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

புலவன் காட்சியும் புரவலன் மாட்சியும்...

கவிஞர்கள் எப்பொழுதும் மற்றவர்களில் இருந்து சற்று வேறுபட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

Updated On :

கவிஞர்கள் எப்பொழுதும் மற்றவர்களில் இருந்து சற்று வேறுபட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

கவிஞர்கள் தான் காணும் காட்சிகளில் எல்லாம், ஏதாவது ஓர் அர்த்தத்தைக் காண்பதற்கே முயல்வர் அல்லது காட்சிகள் எல்லாம் அவர்களுக்கு ஏதாவது அர்த்தங்களைச் சொல்லுவன போலவே இருக்கும்.

அதற்குக் காரணம் அவர்களது நோக்கு கூர்மையாக இருப்பதும், சிந்தனை கற்பனை வளமுடையதாக இருப்பதும்தான். கவிஞர்களின் தனிப் பாடல்களைப் பொறுத்தவரை, ஒரு காட்சி அல்லது அனுபவம் அப்போதைய அவர்கள் மனநிலைக்கேற்ற பொருளோடு கவிதையாகின்றது.

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர் வேள் ஆய் அண்டிரனைப் புகழ்ந்து பாடும் ஒரு பாடல் புறநானூற்றிலே வருகிறது. இந்தப் பாடல் ஒரு காட்சியை வியந்து அரசரோடுப் புகழ்ந்து பாடுவதாக அமைந்திருக்கிறது.

ஆய் அண்டிரனின் நாடு மலை சூழ்ந்த காட்டுப் பிரதேசம். அவனது நாட்டின் பெருஞ்செல்வம் யானைகளே. ஏராளமான யானைகள் அவனது காட்டிலே வசித்து வந்தன. அவனைப் புகழ்ந்து பாடிவரும் புலவர்களுக்குப் பரிசிலாக யானைகளைக் கொடுப்பது அவன் வழக்கம்.

புலவர் முடமோசியார் காட்டு வழியிலே செல்லும்போது அங்கே ஏராளமான யானைகள் நிற்பதைக் காண்கின்றார். ஆய் அண்டிரனின் கொடைச் சிறப்பை நன்கு அறிந்தவரான அப்புலவருக்கு அந்தக் காட்சி ஒரு

விசித்திரமான கற்பனையை உண்டாக்குகிறது. இந்தக் காடு வேள் ஆய் அண்டிரனிடம் சென்று அவனைப் புகழ்ந்து பாடித்தான் இத்தனை யானைகளைப் பரிசாகப் பெற்றதோ என்ற கற்பனைதான் அது.

'மழைக்கணஞ் சேக்கு மாமலைக் கிழவன்

வழைப்பூங் கண்ணி வாய்வா ளண்டிரன்

குன்றம் பாடின கொல்லோ

களிறுமிக வுடையவிக் கவின்பெறு காடே.'

இயற்கையாக காட்டில் நிற்கும் யானை, புலவரின்

கற்பனையில் எப்படி ஒரு சிந்தனையைத் தூண்டியுள்ளது பாருங்கள்.

இதே போன்று புறநானூற்றிலே இன்னெரு காட்சி புலவர் கபிலரது கற்பனையில் வளம் பெறுகிறது. பாரி வள்ளலின் உயிருக்குயிரான நண்பராக இருந்தவர் கபிலர். பாரியைச் சூழ்ச்சியால் வீழ்ச்சியுறச் செய்கின்றனர் முடியுடை மூவேந்தர். பாரி அரசாண்ட பறம்பு மலை மூவேந்தரின் படையெடுப்பால் கைப்பற்றப்பட்டு, பாரி மன்னனும் கொல்லப்படுகின்றான். பாரியின் பிள்ளைகளான அங்கவை, சங்கவை என்ற இரண்டு பெண்களையும் அழைத்துக்கொண்டு தப்பிச்செல்கிறார் கபிலர். பாரியின் பிரிவு தாங்காமல் வடக்கிருந்து உயிர் நீக்கக் கருதிய கபிலர், பாரியின் பிள்ளைகளின் திருமணத்துக்காகக் காத்திருந்தார்.

விச்சிக்கோ என்ற மன்னனுக்கு பாரியின் பிள்ளைகளை மணம்முடித்து வைப்பதற்காக அழைத்துச் செல்கிறார் கபிலர். அவர்களை அரசனுக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றார். கபிலர் அறிமுகப்படுத்தும், அழகு ரசிக்கத்தக்க கற்பனையாக அமைகிறது. பாரி முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்த கொடைச் சிறப்பு அக்காலத்தில் பெரும் புகழாகக் கொள்ளப்பட்டது. தனது ஆட்சியில் ஒரு முல்லைக் கொடிகூட கொழுகொம்பின்றி, ஆதரவின்றி அல்லல் படக்கூடாதே என்ற அரும்பெரும் நோக்கில், தான் ஊர்ந்து வந்த தேரை அந்த முல்லைக் கொடிக்கு ஆதரவாக, கொழுக்கொம்பாக நிறுத்தி விட்டு, கால்நடையாகப் பறம்புமலைக்கு வந்து சேர்ந்தான் பாரி.

துயரைக் கண்டவுடனேயே துடைத்தெறியும் முயற்சியில் ஈடுபட்ட அவனது பரிவுணர்ச்சி மிகவும் போற்றத்தக்கதே. இயல்பாகவே தனக்குரிய கொழுகொம்பைத் தேடிப் படரும் முல்லைக் கொடியின் மேலேயே அரசனுக்கு இவ்வளவு கருணை, இரக்கம் அக்கறை, அனுதாபம் இருந்திருக்கிறது என்றால், அவன் ஆட்சிக்குட்பட்ட குடிமக்களின் குறைகளைக் களைவதில் அவனது அக்கறை எப்படி இருந்திருக்கும் என்பதை எடுத்துக்காட்டும் சிறப்புடையது இந்த முல்லைக்குத் தேர் கொடுத்த கொடை.

விச்சிக்கோவிடம் கபிலர் கூறுகிறார், சாதாரணமாக எல்லா அரசர்களும் தன்னைப் புகழ்ந்து பாடும் புலவர்

களுக்குத்தான் பரிசு கொடுப்பார்கள். ஆனால், பாரியோ அதற்கு விதிவிலக்கானவன். தன்னைப் புகழ்ந்து பாடாத முல்லைக் கொடிக்குக்கூட நெடுந்தேரைக் கொள்க எனக் கொடுத்த பெருங்கொடையாளன். அவனது மக்களே இவர்கள் என்று அறிமுகப்படுத்துகிறார் புலவர் கபிலர்.

'இவரே, பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை

நாத்தழும்பு இருப்பப் பாடாஅது ஆயினும்

கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த

பரந்துஓங்கு சிறப்பிற் பாரி மகளிர்'

பாரி முல்லைக்குத் தேர் கொடுத்ததை கபிலரின் கவியுள்ளம் காணும் கற்பனையே இது. தொடர்ந்து பூத்துக் கொண்டே இருக்கும் முல்லைக்கொடி, பாரி மன்னனைப் புகழ்ந்து பாடவே இல்லை. அப்படித் தன்னைப் பாடாத முல்லைக்கும், சுழல்கின்ற மணிகள் பூட்டிய உயரமான தேரைக் கொடுத்த சிறப்புடையவன் பாரி, இவர்கள் அவரின் மகளிரே. கபிலரின் கவியுள்ளம் கண்ட அற்புதமான கற்பனை அழகான பாடலாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.