இளம் தலைமுறையினரிடம் இயற்கை விவசாயம்!
'உலகில் பல இடங்களுக்கும் இயற்கை உணவுப் பொருள்கள் சென்றடைய வேண்டும்.
'உலகில் பல இடங்களுக்கும் இயற்கை உணவுப் பொருள்கள் சென்றடைய வேண்டும். எதிர்வரும் தலைமுறையினரிடத்தில் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவேண்டும். இதுவே எனது குறிக்கோள்'' என்று கூறும் சரண்யா ராஜேந்திரன், சென்னை பள்ளிகரணையைச் சேர்ந்தவர். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய பொறியாளர். பெண்களை முன்னிலைப்படுத்தும் வகையில், பாரம்பரியப் பொருள்களைத் தயாரிக்கும் நோக்கத்தில் தற்போது நங்கநல்லூரில் 'ஒரு அம்மாவின் கடை' என்ற அடையாளத்தில், 90 சதவீதப் பெண்கள் பணியாற்றும் 'சனாஸ் தினை ஆர்கானிக்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். கல்வி நிறுவனங்களில் தொழில்முனைவோர் பயிற்சியும், சுய உதவிக் குழுக்களுக்குப் பாரம்பரிய வேளாண்மை சார்ந்த இலவசப் பயிற்சியும் அளித்து வரும் அவரிடம் பேசியபோது:
'என் அப்பா இராஜேந்திரன், ரயில்வே துறையில் சுமை தூக்கும் தொழிலாளி. அம்மா ராஜேஸ்வரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றினார். குடும்பத்தை நிலைநிறுத்த அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். 'கல்வி ஒன்று தான் மாற்று வழி' என்று கூறி, என்னைப் படிக்க வைத்தனர். வாழ்க்கை எனக்குக் காட்டிய ஒவ்வொரு சவால்களையும் ஏற்றேன். தோல்விகளில் பல பாடங்களைக் கற்றேன்.
பொறியியல் முடித்து மென்பொருள் துறையில் பணியாற்றினேன். திருமணமானது. குழந்தைகள் பிறந்தது. ஆறாவது மாதத்திலேயே பிறந்த இரண்டாவது பெண் குழந்தைக்கு அதிக கவனிப்பு தேவைப்பட்டது. அப்போது, ஒரு தாயாக நான் மிகவும் பயந்தேன். 'அவளுக்குச் சரியான உணவு கொடுக்கிறேனா?' என்ற கவலை உண்டானது.
பதப்படுத்தப்பட்டு சேமித்து வைக்கப்பட்ட பொருள்களை என் குழந்தையின் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. என்னுடைய வீட்டிலேயே இயற்கையான உணவுகளை தயாரிக்கத் தொடங்கினேன். அது ஒரு தொழில் சார்ந்த யோசனை இல்லை. ஒரு தாய் என்ற பொறுப்பு. அந்த அனுபவம் தான் இன்று 'சனாவின் தினை ஆர்கானிக்ஸ்' என வளர்ந்திருக்கிறது.
அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆயிரம் சதுர அடி பரப்பளவு இடத்தை வாடகைக்கு எடுத்து எனது பயணத்தை ஆரம்பித்தேன்.
கரோனா காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மக்கள் தேர்வு செய்தது எனக்குப் பாடமாக அமைந்தது. அதற்கு எங்கள் நிறுவனம் வழி வகுத்தது.
எல்லாவற்றையும் இயற்கை சார்ந்து மாற்ற, எனக்கு பழைய நாள்கள் திரும்பிக் கிடைத்தது போல இருந்தது.
தரமான மூலப்பொருள்கள் வாங்குவது ஆரம்பத்தில் சவாலாக இருந்தது. தரத்தில் சமரசம் பண்ணக் கூடாது; விலையும் நியாயமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் தான் இன்று வாடிக்கையாளர் நம்பிக்கையோடு எங்களிடம் பொருள்களை வாங்குகின்றனர்.
இயற்கை முறையில் விளைவிக்கப்படும் தினை, வரகு, சாமை, குதிரைவாலி, பாரம்பரிய அரிசி வகைகள், எண்ணெய்கள், மூலிகைகளை நேரடியாக விவசாயிகள், நம்பகமான விற்பனையாளர்களிடம் வாங்குகிறோம். ஒவ்வொரு பொருளின் தரத்தையும் சரிபார்க்கிறோம்.
பொருள்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து வாங்குவதால், தரமான பொருள்களையே வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறோம்.
மிகச் சிறந்த வணிகம் செய்வோர் மட்டுமே தொழில் முனைவோர் ஆகமுடியும் என்பது அல்ல. மாணவர்கள் நினைத்தாலும், தொழில் முனைவராக முடியும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். மாணவர்களிடத்தில் சந்தை வாய்ப்புகளைக் கண்டறிந்து, புதிய வணிகத்தைத் தொடங்கி, அதன் மூலம் லாபம் ஈட்டுவது குறித்து எடுத்துக் கூறுகிறேன். என்னுடைய வெற்றிக்கு உறுதுணையாக கணவர் சாய்ராம், குழந்தைகள் சஹானா, சதானா, நிறுவன ஊழியர்கள், தோழிகள் இருந்து வருகின்றனர்'' என்கிறார் சரண்யா ராஜேந்திரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

