இயற்கை விவசாயத்தில் இங்கிலாந்து விவசாயி!
வாழ்வாதாரத்துக்காக நிலங்களை விற்று வரும் சூழலில், ஆரோவில்லில் சுமார் 5 ஏக்கரில் உள்ள 'சாலிடியூட்' (தனிமை) விவசாயப் பண்ணையில், இயற்கை விவசாயம் செய்து லாபம் ஈட்டி வருகின்றார்.
தமிழக விவசாயிகள் பலரும் தங்கள் வாழ்வாதாரத்துக்காக நிலங்களை விற்று வரும் சூழலில், ஆரோவில்லில் சுமார் 5 ஏக்கரில் உள்ள 'சாலிடியூட்' (தனிமை) விவசாயப் பண்ணையில், இயற்கை விவசாயம் செய்து லாபம் ஈட்டி வருகின்றார், இங்கிலாந்தைப் பூர்விகமாகக் கொண்ட விவசாயி கிருஷ்ணா மெக்கன்சி.
விழுப்புரம் மாவட்டத்தில், வானூர் வட்டத்தில், புதுச்சேரி எல்லையை ஒட்டி அமைந்துள்ளது சர்வதேச நகரமான ஆரோவில். இங்குள்ள தகவல் மையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள இந்தப் பண்ணையை உரிய அனுமதி பெற்றுப் பார்வையிடலாம்.
தமிழ் மீது கொண்ட பற்றால் மெக்கன்சி தனது பெயரை 'கிருஷ்ணா' என மாற்றிக் கொண்டதோடு, தமிழ் மண்ணை நேசித்து, மொழியையும் கற்று, தமிழ்ப் பெண்ணைக் காதலித்து மணம்புரிந்து இரு வாரிசுகளுடன் தமிழராகவே மாறிவிட்டார். ஆரோவில்லில் முப்பது ஆண்டுகளாக வசித்து வரும் இவர் விவசாயம் சார்ந்த ஏராளமான தகவல்களைச் சேகரித்து வைத்துள்ளார். தமிழர்கள் மறந்துவிட்ட பாரம்பரிய இயற்கை விவசாயத்தை அவர் நினைவுபடுத்துவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
இசையிலும் ஆர்வம் கொண்டவர். இசைக் குழுவின் வாயிலாக இசைநிகழ்ச்சிகளையும் நடத்தி வரும் அவர் 'மண்ணே தெய்வம்... பயிர்களே நண்பர்கள்' என்ற கொள்கையைக் கொண்டவர்.
அவரிடம் பேசியபோது:
'பள்ளியில் படிக்கும்போது முதன் முதலில் ஆரோவில்லுக்குச் சுற்றுலா வந்தேன். அங்குள்ளோரின் வாழ்க்கை முறை, இயற்கைச் சூழலில் பண்ணை விவசாயம் உள்ளிட்டவை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
பள்ளிப்படிப்புக்குப் பின்னர், 'எந்தச் செயல் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும்' என்று சிந்தித்தேன். மேல்படிப்புக்கு மாற்றாக இயற்கையோடு வாழ்வதே நம் வாழ்க்கையை மேம்படுத்தும் என உணர்ந்தேன்.
எனது 19-வது வயதில் மீண்டும் ஆரோவில்லுக்கு வந்தேன். சில ஆண்டுகள் சேவைக்குப் பின்னர் நிரந்தரமாக வாழ அனுமதி வழங்கப்பட்டது. என் பெயருடன் கிருஷ்ணாவைச் சேர்த்து கிருஷ்ணா மெக்கன்சியாக மாறிவிட்டேன்.
'தனது உணவு எங்கிருந்து வருகிறது என்பதை அறியாத சமூகம், பண்பாடு அற்ற சமூகமாகும். பண்பாடு இல்லாத மனிதகுலம் அழிந்துவிடும். பூமி, பூச்சிகள், மண்ணில் விளையும் தாவரங்களையும் அப்படியே விட்டு விடுவது தான் இயற்கை வேளாண்மை' என்ற எனது ஜப்பானிய குரு மசனோபு ஃபுகோகவின் வழிகாட்டுதலின்படி, இயற்கை விவசாயியாக மாறிவிட்டேன்.
இயற்கை விவசாயப் பண்ணை ஒன்றில் வேலை பார்த்து நுணுக்கங்களைக் கற்றேன். என்னுடன் பணியாற்றிய வயதான பாட்டியிடம் இருந்தும், விவசாயத் தொழிலாளிகளிடமிருந்தும்தான் பலவற்றைக் கற்றேன்.
பழங்காலத் தமிழர்களின் உணவு முறை இயற்கையைச் சார்ந்திருந்தது. இதை மீட்டெடுக்க விரும்பி, மரபு வழி விவசாயத்தைக் கண்டறிந்து கடைப்பிடிக்கத் தொடங்கினேன்.
தெய்வத்துக்கு இணையானது மண். இதற்கு ரசாயன உரங்களைப் போடுவது தெய்வத்துக்கு விஷம் தருவதாகும். இந்த உயிர் மண்ணுக்கு இயற்கை உரங்களாக தழைகளை, செடி- கொடிகளை மட்டுமே உரமாகப் போட்டு விவசாயம் செய்து வருகிறேன்.
கத்தரிக்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய், சுண்டைக்காய், தூதுவளை, முருங்கைக் கீரை, பல்வேறு வகையான வாழை இனங்கள், வெற்றிலைவள்ளிக்கிழங்கு, மணத்தக்காளி, பப்பாளி, பூசணி உள்ளிட்ட பலவிதமான தாவரங்களையும் விவசாயம் செய்கிறோம்.
நான் நடத்தும் ' ஃபார்ம் டூ பிளேட்' உணவகத்துக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு, மீதமுள்ள காய்கறிகளை ஆரோவில்வாசிகளுக்கு விற்று விடுகிறேன்.
அன்றைக்குக் கிடைக்கும் காய்கறிகளைக் கொண்டு, உணவகத்தில் உள்ள வகைகளை முடிவு செய்கின்றோம். நாள்தோறும் சங்குப் பூ, செம்பருத்திப் பூ, தூதுவளைகளைப் பயன்படுத்துகிறோம். வாழைத்தண்டை சுவையாகச் சமைத்துத் தருகிறோம். அன்றாடம் கீரை நிச்சயம் இடம்பெறும். மூலிகைப் பவுடர்கள், ஊறுகாய் வகைகளை விற்பனைக்கு வைத்துள்ளோம்.
இயற்கை விவசாயம் வளர...
நான் கற்ற விவசாய அனுபவங்களை மற்றவர்களுக்கு சனிக்கிழமைகளில் இரண்டு மணி நேரம் கற்றுத்தருகிறேன். இதற்கு முன்கூட்டியே பதிவு செய்வது அவசியம்.
தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகங்கள் உள்ளன. பள்ளிகளில் மாணவர்களுக்கான காலை, மதிய உணவுத் திட்டங்கள் உள்ளன. இவற்றுக்குத் தேவையான காய்கறிகளை அந்தந்தப் பகுதியில் உள்ள இயற்கை விவசாயிகள் விளைவித்து, சமைக்கும் மையத்துக்குத் தந்தால் விவசாயிகள் பயனடைவார்கள். அந்த உணவைச் சாப்பிடுபவர்களும் கலப்படமில்லாத இயற்கை உணவுகளை சாப்பிட்டு நலமோடு வாழ்வார்கள். இந்தத் திட்டத்தை அரசு ஏற்றுக் கொண்டால், ஒவ்வொரு பகுதியிலும் விவசாயப் பண்ணை அமைக்க ஆலோசனைகளை வழங்க நான் ஆர்வமாக உள்ளேன்.
விவசாயம் அழிவதற்குக் காரணம் விவசாயிகள் அல்ல; நுகர்வோர்கள்தான். ஏனென்றால், நுகர்வோர் விரும்புகின்ற பொருளைத்தான் விவசாயிகள் உற்பத்தி செய்ய வேண்டும். மண்ணில் விளையும் பயிர்களை நுகர்வோரும் விரும்பினால், அவர்களும் ஆரோக்கியமாக வாழ்வார்கள், விவசாயிகளும் பொருளாதாரத்தில் மேம்படுவார்கள்.
உலகின் பல்வேறு நாடுகளில் எங்களுடைய செயல்பாடுகளைப் பார்த்து, தங்கள் நாட்டிலும் அதற்கான பயிற்சி வேண்டுமெனக் கேட்கின்றார்கள். மெக்ஸிகோ போன்ற நாட்டைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் நாங்கள் பயிற்சி அளித்து வருகின்றோம்.
சமையலுக்கு உரல், உலக்கை, கல் இயந்திரங்களை மறந்து விட்டோம். மண்ணுக்கு ஏற்காத கேரட், பீட்ரூட் போன்றவற்றை உணவாக விரும்பாமல், சுண்டைக்காய், வெண்டைக்காய், முருங்கைக் கீரை, வாழைத்தண்டு, மணத்தக்காளிக் கீரை எனச் செழிப்பாக வளரும் பயிர்களை உண்ணும் பழக்கத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதனால் விவசாயிகளும் பயன் பெறுவார்கள். உண்பவர்களும் நீண்ட ஆயுளோடு வாழ்வார்கள்.
பாரம்பரிய விவசாயத்தை எப்படியாவது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கடமை நமக்கு உள்ளது. இந்த வாய்ப்பை நழுவ விட்டால், பாரம்பரியப் பெருமைகள் மறைந்து விடும். மண்ணின் தன்மையும் மாறிவிடும். எனவே அதை மீட்டெடுக்க வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் இயன்ற முயற்சிகளைச் செய்ய வேண்டும்' என்கிறார் கிருஷ்ணா மெக்கன்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

