மணிப்பூரில் 36 இனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்: முதல்வர் கெம்சந்த் சிங் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

ஆண்டாள் தீட்டிய அழகு ஓவியம்

தமிழகத்தின் இயற்கை எழில் நிறைந்த காட்சிகளையும் இணைத்து தமது பதிகங்களுக்கும் பாசுரங்களுக்கும் மேலும் மெருகூட்டினர் என்பதை ஆண்டாளின் பாடல் எடுத்துக்காட்டுகிறது.

Updated On :

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை அக்டோபர் நடுவில் தொடங்குவது வழக்கமானதாகும். இதற்கு முன்பாக செப்டம்பர் நடுவில் சமவெளிப் பகுதிகளிலிருந்து வண்ணத்துப்பூச்சிகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளை நோக்கிப் பறக்கத் தொடங்கும்.

விதவிதமானதாகவும், வண்ணமயமானதாகவும் உள்ள வண்ணத்துப்பூச்சிகள் அதிக உயரத்தில் இல்லாமலும் நமக்கு 20 அல்லது 25 மீ. உயரத்தில் அலைஅலையாக பறந்து செல்வதை நாம் பார்க்கலாம்.

மேற்கு மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் வண்ணத்துப்பூச்சிகள் இவ்வாறு இடம்பெயர்தலை நாம் காணலாம்.

மலைக் காடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்ந்த அதே வண்ணத்துப்பூச்சிகள் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சமவெளியை நோக்கி மீண்டும் படைபடையாகத் திரும்பத் தொடங்கும். பல நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் இந்த அற்புதக் காட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஆண்டாள் தான் பாடிய 'நாச்சியார் திருமொழி' பாசுரம் ஒன்றில், பட்டுப்பூச்சிகளின் இடம்பெயர்தலைக் குறிப்பிட்டு 1,300 ஆண்டுகளுக்கு முன்பாக பாடியிருப்பது விந்தையிலும் விந்தையானதாகும்.

பெரியாழ்வாரின் பூங்கொடியான சூடிக்கொடுத்த சுடர் நாச்சியார் பாடிய அகத்துறைப் பாசுரம் ஒன்றில் பட்டுப்பூச்சிகள் மலையை மூடிமறைக்கும் அளவுக்கு செல்வதையும், ஒரு தலைவியின் பிரிவாற்றாமையுடன் அழகாக இணைத்துப் பாடியுள்ளார். அது வருமாறு:-

சிந்துரச் செம்பொடிப் போல்

திருமாலிருஞ் சோலை எங்கும்

இந்திர கோபங்களே எழுந்தும்

பரந்திட்டனவால்;

மந்தரம் நாட்டி யன்று

மதுரக் கொழுஞ்சாறு கொண்ட

சுந்தரத் தோளுடையான் சுழலையில்

நின்று உய்தும் கொலோ (587)

என்பது நாச்சியார் திருமொழியின் பாசுரமாகும்.

தலைவனின் பிரிவாற்றாமையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் மிகவும் நலிவடைந்திருக்கும் தலைவி, அவன் வாழும் இடமான திருமாலிருஞ்சோலை மலையைக் கண்ணால் கண்டாவது ஆறுதல் பெறலாம் என எண்ணி, அவன் வாழும் மலையை நோக்கிய திசையில் திரும்பிப் பார்க்கிறாள். ஆனால், பெரும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அவளை எதிர்கொள்கின்றன.

அந்த மலை மீது சிந்தூரப் பொடியைத் தூவியிருப்பது போன்று தலைவன் வாழும் அழகிய மலையும் காடும் கண்ணுக்குத் தெரியாத அளவில் பட்டுப்பூச்சிகள் (இந்திரகோபங்கள்) அந்த மலையை மொய்த்து மறைத்துவிட்டன. இதைக் கண்டு மனமொடிந்து போகிறாள் தலைவி. இப்பாசுரத்துக்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை, 'தலைவனைக் காணப் பெறாவிடினும் அவன் நாட்டு மலைகளையாவது கண்டு ஆற்றியிருக்க முடியாதபடி அவையும் தோன்றாது ஒழிய வேண்டுமோ?' என்கிறார், மேலும்,

அவன் நாட்டில்குன்றும் கொடியவோ ஒன்றும் தோன்றா?

என்று தமிழ் இலக்கியங்களிலும் கவி பாடினார்களன்றோ? என்றும் குறிப்பிடுகின்றார். 'தலைவனுடைய நாட்டில் அவனுடைய மலையும் தலைவிக்கு விரும்பத் தக்கதாயிருக்கும்' என்பதைத் தமிழருடைய துறையிலே அருளிச் செய்கிறார் என்று அரும்பத உரை இதற்கு விளக்கம் அளிக்கிறது.

இங்குத் தமிழர் துறை என்றது அகப்பொருள் துறைகளையே. அத்துறை தழுவியமைந்த நாச்சியார் பாசுரத்தையும் தமிழர் துறையையறிந்து விளக்கம் தந்த பெரிய வாச்சான் பிள்ளை உரையையுமே அரும்பதம் இவ்வாறு குறிப்பிடுகிறது என வைணவ அறிஞர் ம.பெ. சீனிவாசன் சுவைபட எடுத்துக்காட்டியுள்ளார்.

இயற்கையாக நடைபெறும் இந்த ஓவியத்தன்ன அரிய காட்சியைக் காண நேர்ந்த ஆண்டாள் நாச்சியார், தன்னையொத்த பிரிவாற்றாமையால் வருந்தும் தலைவி ஒருத்தியின் ஏக்கத்தை வெளிப்படுத்த இந்த அகப்பாடல் சித்திரத்தைத் தீட்டியுள்ளார்.

பழந்தமிழ் இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள் ஆகியவை தமிழுக்குச் செம்மொழித் தகுதியை உலக அளவில் பெற்றுத்தந்தன.

சங்கம் மருவிய காலத்தில் சிலம்பு, மேகலை போன்ற காப்பியங்கள் தமிழின் சிறப்பை மேலும் உயர்த்தின. இவற்றை அடுத்துத் தோன்றிய பத்திமை இலக்கியங்கள் தமிழுக்கு அணியாகவும், அரணாகவும் அமைந்தன.

உலக மொழிகள் பலவற்றிலும் பல்வேறு சமயங்களைச் சார்ந்த பக்திப் பாடல்கள் படைக்கப்பட்டுள்ளன.

ஆனால், நாயன்மார்களும், ஆழ்வார்களும் அவர்கள் பாடிய பதிகங்களையும், பாசுரங்களையும் அகத்துறையில் அமைத்துப் பாடினர். தாங்கள் போற்றி தொழுது வணங்கிய சிவனையும் திருமாலையும் தலைவர்களாகவும் தங்களை அவர்கள் மீது காதல் அன்புகொண்ட தலைவிகளாகவும் அமைத்துப் பெரும்பாலும் அகத்துறை பாடல்களையே பாடினர்.

தமிழகத்தின் இயற்கை எழில் நிறைந்த காட்சிகளையும் இணைத்து தமது பதிகங்களுக்கும் பாசுரங்களுக்கும் மேலும் மெருகூட்டினர் என்பதை ஆண்டாளின் பாடல் எடுத்துக்காட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER