ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

'கன்னி நீலக்கண் கன்னி'

தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருள் உண்டு என்பதை தமிழறிஞர்கள் மட்டுமன்றி தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் அறிவர்.

கோப்புப் படம்

Published On :

முனைவர் பா. சக்திவேல்

தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருள் உண்டு என்பதை தமிழறிஞர்கள் மட்டுமன்றி தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் அறிவர். அடி என்பது ஒரு பொருளின் அடிப் பகுதியையும் குறிக்கும்; ஒருவரைத் தாக்கி அடித்தலையும் குறிக்கும். அணி - அழகையும் குறிக்கும்; திரண்ட படையையும் குறிக்கும்.

பொதுவாக தற்கால மனிதர்கள் அறிந்துள்ளது 'கன்னி' என்றால் மணமாகாத பெண் என்று மட்டும்தான். ஆனால், இச்சொல்லுக்கு பல பயன்பாடு உண்டு.

வேளாண்மையில் ஈடுபடும் உழவர்கள் 'கன்னி' என்ற சொல்லை கழனிகளில் நீர்ப்பாய்ச்சும்போது பயன்படுத்துகின்றனர். ஆற்று நீர் கால்வாய்க்குப் பிரிந்து, பிறகு சிறிய வாய்க்கால் வழியோடி வயல்வெளியை அடைகிறபோது பரந்த வயல்களுக்கிடையே நீர்ப்பாசனத்துக்கு உதவி செய்வதற்காக குறுகலான அளவில் நீரோடும் சிறிய வாய்க்கால் போன்ற அமைப்பை உழவர்கள் புதிதாக உருவாக்குவார்கள். அதற்கு கன்னி என்று பெயர். கன்னி வைத்து வயலின் மேட்டுப்பகுதிக்கு நீர் பாய்ச்சுவது தற்போதும் நடைமுறையில் உள்ளது. இப்பெயர் இன்றும் ஒருங்கிணைத்த தஞ்சை மாவட்ட உழவர்களிடம் பழக்கத்தில் உள்ளது.

சபரிமலை ஐயப்ப சுவாமி வழிபாட்டுக்காக நோன்பிருந்து அவரைக் கண்டு வணங்க ஆண்டுதோறும் செல்லும் பக்தர் குழாம் முதன்முதலில் மாலை அணிந்து வரும் பக்தரை 'கன்னிச்சாமி' என்று அழைக்கும் முறை காலங்காலமாக இருந்து வருகிறது.

புதிதாக அரங்கமேறி முதன்முதலில் உரையாற்றுபவர்களை (பாலின வேறுபாடின்றி) 'கன்னிப்பேச்சு' பேசுகிறார் என்று பெருமைப்படுத்துவார்கள்.

இவ்விடத்தில் 'கன்னி' என்பது முதலில் அல்லது

புதிதாக என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

'கன்னி' என்ற சொல் புதுமை, இளமை, முதன்

முதலில் எனும்படி அதிகம் கையாளப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியங்களில் இதன் பயன்பாடு நிறைந்துள்ளது.

'கன்னி நீலக்கண் கன்னி' -சீவக சிந்தாமணி

இவ்வரியில் முதலில் வரும் 'கன்னி' என்ற சொல் புதுமை, பொலிவு என்னும் பொருளிலும், பின்னே வரும் 'கன்னி' என்ற சொல் இளம்பெண்ணையும் குறிக்கிறது. கன்னி என்கிற ஒரு சொல் இரு

பொருளில் ஒரே பாடலில் ஒரே அடியில் எடுத்தாளப்

படுவதைச் சான்றாகக் கொள்ளலாம்.

'கன்னி மூதெயில் சூழ் கடி காவினுள்'

-சீவக சிந்தாமணி

பகைவரால் ஒருபோதும் தகர்க்கமுடியாத, சிதைக்க முடியாத பலமும் உறமும் கொண்ட தொன்மையான, வலிமையான மதிலின் தன்மையை 'கன்னி' என்று இவ்விடத்தில் பொருள் கொள்கிறது.

மன்னும் மாலை வெண்குடையான்/ வளையாச் செங்கோல்- அதுஓச்சிக் / கன்னி- தன்னைப் புணர்ந்தாலும், / புலவாய் வாழி காவேரி' -சிலப்பதிகாரம்

காவிரி ஆற்றின் வளம் சேர்க்கும் தன்மையால் என்றும் வளமும் வனப்பும் குறையாத எழில் கொஞ்சும் நிலத்தை ஆளுகின்ற சோழ மன்னனைக் குறிக்கிற இப்பாடலில் புதுமை, இளமை குன்றாத நிலத்தை கன்னி நிலம் என்கிறார்.

காவிரி தன்னுடன் வேறொரு ஆறு கலந்தாலும் அதன்மீது ஊடல் கொள்ளாமல் இருப்பதாக பாடல் உருவகப்படுத்துகிறது.

'கன்னி விடியல் கணக்கால் ஆம்பல்'

-ஐங்குறுநூறு

ஒரு நாளின் புதிய விடியலை, இளமையான விடியல் பொழுதைக் 'கன்னி விடியல்' என்று குறிக்கிறது.

'கன்னி இளஞாழல் பூம்பொழில்'

- ஐந்திணை ஐம்பது

இவ்விடத்தில் 'கன்னி இளஞாழல்' என்பது இன்று புதிதாய்ப் பூத்து நிற்கும் இளமையான, புதுமை குறையாத ஞாழல் பொழிலைக் குறிக்கிறது.

புதிதாகத் தளிர்த்து பூத்து நிற்கும் இளம் புன்னை மரத்தை 'கன்னிப் புன்னை' என்று திருக்கோவையாரில் மணிவாசகர் குறிக்கிறார்.

புதிதாக எழுப்பியது போல திடமாகவும் வலுவாகவும் எதிரிகளால் உடைக்க முடியாத மதிலை 'கன்னி மாமதில் சூழ் கருவூர்' என்கிறார் பெரியாழ்வார்.

ஆகவே 'கன்னி' என்கிற சொல் தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் பல்வேறு பொருளில் பயன்பாட்டில் உள்ளது. கன்னிப்பேச்சு என்பது மாற்றம் செய்ய வேண்டிய வழக்கு இல்லை, இது தொன்றுதொட்டு வழங்கி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER