
"மாதா, பிதா, குரு, தெய்வம்' என்ற வாசகம் அனைவரும் அறிந்ததே. குரு என்றால் பாடம் கற்பிக்கும் ஆசானைக் குறிப்பிடுகிறது. கத்தோலிக்க திருச்சபையில் குரு என்றால் மக்களுக்கு இறைப்பணி, சமூகப் பணி செய்திடும் அருட்தந்தையர், அருட் பணியாளர்கள் என்றழைக்கப்படும் பங்கு குருக்கள் ஆவர். வெண்ணிற ஆடையுடன், தூய உள்ளத்துடன், "மக்கள் பணியே மகேசன் பணி' எனப் பணியாற்றும் இப்படிப்பட்ட பங்கு குருக்களின் முன் மாதிரியாகத் திகழ்ந்தவர் புனித வியான்னி. புனித மரிய ஜான் வியான்னி, ஃபிரான்ஸ் நாட்டில் லியான்ஸ் நகருக்கருகே கி.பி. 1786ல் பிறந்தார்.
இவர், தமது 19ஆம் வயது வரை நிலத்தை உழுது பயிரிட்டு வந்தார். "இறைப் பணியே என் பணி'யென்று குரு பட்டம் பெற்று, துணைக் குருவாகப் பணி செய்தார்; தொடர்ந்து பங்கு குருவாக ஆர்ஸ் நகரில் பண்போடும், அன்போடும் தொண்டாற்றினார். பங்கு தேவாலய மக்களுக்கென தினமும் தவமும், ஜெபமும் செய்து வந்தார். நாள்தோறும் 14 மணி நேரம் "பாவ சங்கீர்த்தனம்' கேட்டார். எல்லாத் திசைகளிலிருந்தும் சிறியவர் முதல் பெரியவர் வரை கூட்டமாக மக்கள் வந்து, இந்தப் புனிதரிடம் ஆலோசனையும், ஆசிரும் பெற்றுச் சென்றனர்.
புனித வியான்னி, ஏழைகளுக்காக விடுதி தொடங்கினார். "தேவ பராமரிப்பு' என்ற பெயரில் அவர்களுக்கு உணவும், இருக்க இடமும், உடையும் வழங்கி உதவினார். எல்லையில்லாப் பொறுமை, தாழ்ச்சி, அமைதி போன்ற உயரிய பண்புகளுடன் தன்னடக்கமுள்ள மக்கள் குருவாக விளங்கினார்.
இவருடைய வழியிலே இன்றைய குருக்கள் பலரும்கூட எளிமை, இரக்கம், அமைதி, அன்பு, அர்ப்பணிப்பும் கொண்டவர்களாக விளங்குவது போற்றத்தக்கது. "கடமையினைச் செய்வோம்' என்ற குறிக்கோள் கொண்டு இறைப் பணியில் அமைதியாகப் பெரும் பணி ஆற்றிடும் குருக்களை நாம் போற்றி வாழ்த்துவது நமது கடமையாகும்.
புனித ஜான் வியான்னியின் 150ஆவது ஆண்டு நினைவை நினைவுகூரும் வகையில் போப் 16ஆம் பெனடிக்ட், 2009 ஜூன் 19 முதல் 2010 ஜூன் 19 வரை குருக்கள் ஆண்டாக அறிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டினை குருக்கள் ஆண்டாக ஆண்டு முழுவதும் மிக விமரிசையாகக் கொண்டாட கத்தோலிக்க திருச்சபை திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.