புனிதர் பியோ

மலை சூழ்ந்த கிராமத்தில், இத்தாலி நாட்டில், பனி படர்ந்த பூமியில், மரியாஜியுசெப்பா-தெனன்சியா தம்பதிக்கு நான்காவது மகனாய்ப் பிறந்தார் ஆன்மீகக் குரு பியோ அடிகளார். "ஃபிரான்செஸ்கோ' என்றுதான் அவரை அனைவரும்
Published on
Updated on
2 min read

மலை சூழ்ந்த கிராமத்தில், இத்தாலி நாட்டில், பனி படர்ந்த பூமியில், மரியாஜியுசெப்பா-தெனன்சியா தம்பதிக்கு நான்காவது மகனாய்ப் பிறந்தார் ஆன்மீகக் குரு பியோ அடிகளார். "ஃபிரான்செஸ்கோ' என்றுதான் அவரை அனைவரும் அன்புடன் அழைத்தனர். விவசாயத் தொழில் செய்து வாழ்கின்ற குடும்பமாக அவரது குடும்பம் திகழ்ந்தது.

குடும்பத்தில் தினமும் செபமாலை சொல்லும் பக்தியும், கடவுள் பக்தியும் அனுசரிக்கப்பட்டன. இவை பியோவை இறை வழிபாட்டில் மேலும் உற்சாகப்படுத்தியது. பியோ குடும்பத்தினர் திருப்பலிக்குத் தினமும் சென்று, நற்கருணை பெற்று இறைவனுக்கு நன்றி கூறுவர்.

ஒரு நாள் ஆலயத்திற்கு தந்தையுடன் சென்ற பியோ அடிகளார் செய்த ஜெபத்தினால், உடல் நலமற்றிருந்த ஒரு குழந்தை பூரண சுகமடைந்தது மிக உன்னத நிகழ்வு எனலாம். இதனால் பத்தாவது வயதில் பியோ அடிகள், இறைப்பணிக்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்க முடிவு செய்தார்.

இதற்கிடையில் வறுமையின் காரணமாக பியோவின் தந்தையார், அமெரிக்கா சென்றிட முடிவெடுத்தார். அதே சமயம் இங்கே கி.பி. 1902 ஜனவரியில் பியோ, துறவற வாழ்வைத் துணிவுடன் துவக்கினார். கப்புச்சின் ஆஸ்ரமத்திற்குச் சென்று, 1903 ஜனவரி 22ல் சபை விதிப்படி துறவற ஆடைகளைப் பெற்றார்; இறைவனிடம் மன்றாடினார்; சுகமான அனுபவப் பயணமாக துறவற வாழ்வு பியோவுக்கு அமைந்தது.

அன்றாடம் ஏழுமுறை செபமாலை சொல்வது, காலை 6 மணி முதல் இரவு 9 மணி முடிய மௌன விரதமிருப்பது எனச் சபை விதிகளைச் சரியாகக் கடைபிடித்து வந்தார் பியோ.

புனித அவில்லா தெரஸô, புனித சிலுவை அருளப்பர் ஆகிய இரு துறவிகளை தனது ஆன்மீக வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டார் பியோ அடிகளார். பற்பல போராட்டங்களின் மத்தியில் 1909ல் ஜனவரி மாதம், "திருத்தொண்டராக' பணியாற்றினார் பியோ அடிகள். 1910 ஆகஸ்டு 10ல், பெனவன்டோவில் "குரு' பட்டம் பெற்றார். 1911 டிசம்பர் 1ல் இயேசுபிரான் தான் பட்ட துயரத்தை இவருக்குக் காட்சியாகத் தந்திட்டார். முதல் உலகப் போரில் துறவிகளும் பங்கெடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி துறவி பியோவும் அதில் பங்கேற்றுத் திரும்பினார்.

திடீரென ஒரு நாள் கைகளில் தேள் கொட்டிய வலி உண்டாயிற்று. மீண்டும் இதேபோல் 1918, செப்டம்பர் 18ல் திருப்பலி முடிந்ததும் விலாவிலிருந்து ரத்தம் கசிந்து ஓட மயங்கி விழுந்தார். இதைக் கண்ட அருட்தந்தையர்கள், அதிர்ந்து போயினர். பின்னர் நினைவு வந்ததும் பியோ நடந்ததை உணர்ந்தார். "உடலில் ஏற்பட்ட 5 காயங்கள் மட்டுமின்றி, இதயத்திலும் காயம் ஏற்பட்டதை உணர்ந்தேன்' எனப் பியோ கூறினார். இதன் பின்னர் தினந்தோறும் அருட்தந்தை பியோவிடம் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து மன, உடல் நலம் பெற்று நன்றி கூறிச் சென்றனர்.

இயேசுபிரானின் வழியில் வாழ்ந்த புனித பியோ அடிகளார், 1968ல் செப்டம்பர் 23ல் இறைவனடியில் இணைந்தார். புதுமைகள் பல செய்ததால் 1999 மே 2ல் அருட்தந்தை பியோ அடிகளாருக்கு இரண்டாம் போப் ஜான்பால் அவர்கள் "வணக்கத்துக்குரியவர்' எனப் பட்டம் வழங்கினார்; பின்னர் 2002 ஜூன் 16ல் புனிதர் பட்டர் வழங்கிச் சிறப்பித்தார். "கப்புச்சின் துறவிகளின் ஆன்மீக முன்னோடி' என திருத்தந்தை பியோ அடிகளாரை அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com