அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாகக் கோயில் கொண்டிருப்பவர் சிவபெருமான். "திருமாலும், சிவபெருமானும் ஜகதீஸ்வரர்கள்' என்பதற்கு வேதத்திலேயே நிறைய சான்றுகள் உள்ளன' என்று கூறுகின்றார், ஸ்ரீ போதேந்திர சரசுவதி சுவாமிகள். (இவருடைய ஜீவ சமாதி, கும்பகோணத்துக்கு அருகேயுள்ள கோவிந்தபுரத்தில் உள்ளது).
இந்த அருளாளர் உரைத்த அனைத்தும் சத்தியமே! எனினும் தமிழகத்தில் சிவபெருமானே ஜகதீஸ்வரர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. "ஜகதீஸ்வரர்' என்றால் "உலகின் தலைவர்' என்று பொருள்.
தமிழகத்தில் சிவ வழிபாடே முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது என்பதற்கு, ஆயிரக்கணக்கில் இங்குள்ள சிவாலயங்களே சாட்சி! அதனால்தான் எந்நாட்டவர்க்கும் இறைவனாக சிவ பரம்பொருள் இருப்பினும், "தென்னாடுடைய சிவனே போற்றி' என்கிறார் மாணிக்க வாசகர்.
இவை ஒரு புறமிருக்க "அக்ரே' என்ற சொல்லுக்கு, "முன்னால்' என்று அர்த்தம் என வடமொழி வல்லுநர்கள் இயம்புகிறார்கள். முன்னால் சிவன் கோயில் இருக்க, அதன் நேரே உள்ள வீதிக்கோ, அல்லது ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளுக்கோதான் "அக்ரஹாரம்' என்று பெயர். சிவபெருமானுக்கு "ஹரன்' என்றொரு திருநாமம் உண்டு. ஹரன் முன்னே (அக்ரே) வீதி உள்ளதால்தான் அதற்கு "அக்ரஹாரம்' என்ற பெயர் ஏற்பட்டது. இன்று பல அக்ரஹாரங்கள் அழிந்து கடை வீதிகளாகிவிட்டது வேறு விஷயம். இங்கே நாம் குறிப்பிட விரும்புவது, தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் சிவாலயம் அமைந்துள்ளது என்பதைத்தான்.
இன்று காலத்தின் கோலத்தால் சில சிவாலயங்கள் மறைந்துவிட்டன! பல சிதிலமாகியுள்ளன! ஆனால், "சுவறில் விழுந்த விதை என்றேனும் மண்ணில் விழுந்தாவது முளைக்கும்' என்று ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறியுள்ளதுபோல, பல சிவாலயங்கள் ஆங்காங்கே புதுப்பிக்கப்பட்டு, குடமுழுக்கு காண்பது ஆறுதல் அளிக்கும் அம்சம்.
அந்த வரிசையில், சிறுங்குன்றம் "புற்றிடம் கொண்ட ஈஸ்வரர்' கோயிலும் இடம் பெறுகின்றது என்பது சிவனடியார்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.
அமைவிடம் :
செங்கல்பட்டுக்கு முன்னேயுள்ள சிங்கப் பெருமாள் கோயிலிருந்து கிழக்கே இருக்கின்றது அனுமந்தபுரம். இங்கிருக்கும் "அகோர வீரபத்திர சுவாமி' கோயில் மிகவும் புகழ் பெற்றது. பில்லி, சூனியம், ஏவல், வைப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் அருட்கடலாக "அகோர வீரபத்திரர்' உள்ளார். இவருடைய ஆலயத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது சிறுங்குன்றம்.
திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் எதிர்படும் சிறுங்குன்றம் கூட்டு ரோடிலிருந்து இரண்டு கி.மீ. பயணித்தாலும் சிறுங்குன்றம், புற்றிடம் கொண்ட ஈஸ்வரர் கோயிலை அடையலாம்.
தல புராணம் :
"அப்பாலும் அடி சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்' என்று "திருத்தொண்டத் தொகை'யில் பாடியருளியுள்ளார் சுந்தரமூர்த்தி நாயனார். இவரது காலம், ஏழாம் நூற்றாண்டு என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். சைவ சமயக் குரவர்களில் ஒருவராக இருந்தும், "எனது காலத்துக்குப் பின்னர் தோன்றப் போகும் சிவனடியார்களுக்கும் நான் அடியவன்' என்று அன்றே பணிவோடு பாடி வைத்தார் சுந்தரர்.
அவருடைய வாக்குக்கு ஏற்ப ஆயிரமாயிரம் சிவனடியார்கள் இன்றளவும் தோன்றிக் கொண்டேதான் உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவருமே, "சுந்தரரின் அடிமைகள்' என்று தங்களைச் சொல்லிக் கொள்வதில்தான் ஆனந்தம் அடைகின்றனர்.
அப்படிப்பட்ட அடியார்களில் ஒருவர், பல நூற்றாண்டுகளுக்கு முன் சிறுங்குன்றத்தில் வாழ்ந்து வந்தார். சுந்தரமூர்த்தி நாயனார், சங்கிலி நாச்சியாரை மணம் புரிந்து கொண்ட தலமான திருவொற்றியூரின் மீது, சிறுங்குன்றம் சிவனடியார்க்கு மட்டற்ற காதல்! போக்குவரத்து வசதிகள் அதிகமற்ற அந்தக் காலத்திலேயே சிரமப்பட்டு அவ்வப்போது திருவொற்றியூர் சென்று, அங்குறையும் "புற்றிடம் கொண்ட ஈஸ்வரனை' போற்றிப் பணிவது, அந்த அடியாரின் வழக்கமாக இருந்தது.
வருடங்கள் உருண்டோடின! சிறுங்குன்றம் சிவனடியாருக்கு மனம் சளைக்கவில்லை என்றாலும், மூப்பினால் உடல் களைத்தது. அப்போதும் திருவொற்றியூர் ஈசனை தரிசிக்கச் செல்வதை அவர் நிறுத்தவில்லை. ஒற்றியூர் ஈசனுக்கு "படம் பக்க நாதர்' என்ற திருநாமமும் உண்டு. படமெடுக்கும் நாகத்தின் கீழிருப்பதால் இப்படியோர் பெயர். ஆயின் சிவபெருமான் நாகபடத்தின் பக்கத்தில் நின்றபடியே, பக்தர்களின் பக்கத்திலும் நின்று இடர் களையும் இயல்புடையவரன்றோ! அதனால் அந்த முதிய சிவபக்தரின் கனவில் காட்சியளித்தார்.
""அன்பனே! உன் பக்தியால் அகம் மகிழ்ந்தோம். நீ ஆரோக்கியத்துடன் இருந்தபோது என்னைக் காண ஓடோடி வந்தவனல்லவா? இன்று நீ மூப்பினால் களைத்துள்ளாய். இனியும் உன்னை சிரமப்பட விட்டால் நான் "கருணைக் கடல்' என்பது உண்மையற்றதாகி விடும். கடலோரத்தில், ஒற்றியூரில் வாழ்கின்ற நான், உனக்காக நீ வசிக்கும் சிறுங்குன்றம் வருகின்றேன். என்னை விட்டுப் பிரியாத வரம் வேண்டுமென இமயமலையில் உள்ள திருக்கேதாரத்தில் தவம் செய்து, என் உடலில் பாதியைப் பெற்றாள் பார்வதி. அவளே ஒற்றியூரிலும் "வடிவுடை அம்மன்' என்ற பெயரில் கோயில் கொண்டிருக்கிறாள்.
கேதாரத்தில், "உன்னைப் பிரியேன்' என்று அம்பிகைக்கு வாக்களித்தேன். இப்போது, "சிறுங்குன்றத்துக்கு நான் எழுந்தருளப் போகிறேன்' என்றதும், தானும் உடன் வருவதாகக் கூறுகின்றாள் உன் தாயான வடிவுடையாள். நீ ஒரு ஆலயத்தை உன் ஊரில் எழுப்புக! அதில் "புற்றிடம் கொண்ட ஈஸ்வரன்' என்ற திருநாமத்துடன் நான் உறைவேன். என்னைப் பிரியாத சக்தி, உன் ஊரில் "கேதார கௌரி'யாகத் திகழ்வாள். நாங்கள் இருவரும் இங்கும் இருப்போம்! அங்கும் இருப்போம்! எங்கும் இருப்போம் என்பதனை நீ அறியாதவனா?'' என்று கூறி, நகைத்து மறைந்தார்.
கனவு மெய்யானது!
இப்படியோர் காட்சியைக் கனவில் பெற்ற பாக்யசாலியான சிறுங்குன்றம் சிவனடியார், உற்சாகத்துடன் எழுந்தார்! பக்தியுணர்வு பொங்கியதால் கதறியழுதார்! உடனே சிறுங்குன்றத்தில் சிவாலயம் எழுப்பும் பணியைத் துவக்கி, நிறைவு செய்தார். கேதார கௌரி என்ற திருநாமத்துடன் தேவியதில் விளங்க, "புற்றிடம் கொண்ட ஈஸ்வரன்' என்ற திருப்பெயருடன் பெருமானும் அக்கோயிலில் குடி கொண்டார்.
இன்றைய நிலை :
காலப் போக்கில் சிறுங்குன்றம் சிவாலயம் சிதிலமடைந்தது. கிராம மக்கள் கவலையுற்றனர். கார்த்திகேயன் என்ற சிவனடியார் "பிள்ளையார் சுழி' போட, கோயில் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. நாளது (அக்டோபர்) 23-ம் தேதியன்று யாக சாலை பூஜையைத் தொடங்கி, 25-ம் தேதியன்று (காலை 9.30 மணியிலிருந்து 10.30க்குள்) மகா கும்பாபிஷேகம் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆயின் இன்னும் சில திருப்பணிகளை நிறைவேற்ற நிதியுதவி தேவைப்படுகின்றது. விருப்பமுள்ளோர் ஆலய தர்மகர்த்தா வையோ, (மொபைல் எண் : 96001 39044) சிறுங்குன்றம் கார்த்திகேயனையோ (மொபைல் எண் : 98414 09748) தொடர்பு கொள்ளலாம். சிதிலமடைந்த சிவாலயத்தை புதுப்பித்து குடமுழுக்கு நடத்தும் கைங்கரியத்தில் ஈடுபடுவோர் இகத்திலும் பல இன்பங்களைப் பெற்று, பரத்தில் சிவகதியையும் அடைவார்கள் என்பது திண்ணம். பெருங்குற்றங்கள் பொறுப்பாய் போற்றி! சிறுங்குன்றத்துச் சிவனே போற்றி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டுறவுத் துறை தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி! மாவட்டத் தோ்தல் அலுவலா் தொடங்கி வைத்தாா்!

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! - சீமான்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருடன் ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் அருள் சந்திப்பு

வில்லியனூரில் முதல்வா் ரங்கசாமி பிரசாரம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


