பாடுவார் பசி தீர்ப்பான்!

இறையோடு, இயற்கையையும் ஒரு சேர அனுபவிக்கக்கூடிய வனப்பு மிக்கதொரு நாடு சோழ நாடு. கண்டும், கேட்டும் ஆனந்தக் களிப்படையச் செய்யும் தலங்கள் சோழநாட்டுத் திருத்தலங்கள்! அவ்வாறான அதி அற்புதமானத் தலங்களுள் ஒன்ற
பாடுவார் பசி தீர்ப்பான்!

இறையோடு, இயற்கையையும் ஒரு சேர அனுபவிக்கக்கூடிய வனப்பு மிக்கதொரு நாடு சோழ நாடு. கண்டும், கேட்டும் ஆனந்தக் களிப்படையச் செய்யும் தலங்கள் சோழநாட்டுத் திருத்தலங்கள்!

அவ்வாறான அதி அற்புதமானத் தலங்களுள் ஒன்றாக விளங்குவது திருக்குருகாவூர்! தற்போது இந்த தலம் "திருக்கடாவூர்' என்று அழைக்கப்படுகிறது!

  திருஞானசம்பந்தரின் அவதாரப் பதியான சீகாழிக்கு அருகில் அமையப் பெற்றுள்ளது திருக்குருகாவூர்.

  அகத்திய மாமுனிவர் மற்றும் துர்வாச மகரிஷி இத்தலத்துப் பெருமானைப் பூஜித்துப் பேறு பெற்றுள்ளனர்!

 திருஞானசம்பந்தர் ஒரு சந்தர்ப்பத்தில் காசி விசுவநாதரை தரிசித்து, கங்கையில் நீராட ஆசைப்பட்டாராம். அப்போது குருகாவூர் இறைவர் கங்கையையே இங்கு வரவழைத்து அருள் புரிந்துள்ளார். ஆளுடையப் பிள்ளையான சம்பந்தர் அந்த கங்கை நீரில் நீராடி குருகாவூர் வெள்விடைநாதரை வணங்கி, பதிகம் பாடியதாகத் தலபுராணம் விவரிக்கின்றது.

""தென்னாடுடைய சிவனே போற்றி'' என்னும் மாணிக்கவாசகரின் அருள் மொழிக்கேற்ப எந்நாட்டிற்கும் தனது அடியார்களை அனுப்பாது, இந்த தென்னாட்டிலேயே தக்க வைத்துக் கொண்ட ஈசனின் அருள்திறம் இதன் மூலம் தெளிவாகின்றது! இந்தச் சம்பவத்தை நினைவுகூர்கின்ற வகையில்... ஆண்டுதோறும் தை மாதம் அமாவாசை தினத்தில் இத்தல மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்த பின்னர், ஆலயத்திற்கு வெளியே உள்ள பால்கிணற்றில் அம்பிகை மற்றும் சம்பந்தரோடு தீர்த்தம் கொடுக்கும் வேளையில் தூய நீர், பால் நிறமாக (வெண்நிறமாக) மாறுகின்றது. கிணற்றில் இருந்து கங்கை நீர் வருவதாக ஐதீகம்! இந்த அற்புதத்தைக் கண்டுகளிக்க அன்று சுற்றுவட்டார ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு குழுமியிருப்பர்.

சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் சீகாழி தலத்தைக் கண்டு வணங்கிப் பாடியபின், தென்திருமுல்லைவாயில் தலம் நோக்கி வந்தார். அவரும், அவருடன் வந்த அடியார்களும் மிகுந்த பசியோடும், தாகத்தோடும் வந்தனர். அப்போது வழியில் சிவபெருமான் ஓர் அந்தணர் வடிவில் எதிர்கொண்டு, அடியார்களது நிழலுக்கு பந்தல் அமைத்தும், பசியாற கட்டமுது வழங்கியும், தாகத்திற்கு நீரும் தந்து ஆட்கொண்டார்.

உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டல்லவா? பசியாறிய பக்தர்கள் அசதியால் கண் அயர்கின்றனர். சுந்தரரும் உடன் உறங்கிவிடுகின்றார். சிவனாரோ தனது திருவிளையாட்டை வெளிப்படுத்த பந்தலுடன் மறைந்துவிடுகின்றார்! கதிரவனின் கரங்கள் பட்டு கண் விழித்தனர் அடியார்கள்! தம்பிரான் தோழரான சுந்தரரோ யாதும் பரமனின் அருளெனப் புரிந்து, இந்த குருகாவூர் தலம் எய்தி, பதிகம் பாடிப் போற்றுகின்றார். அதில், ""பாடுவார் பசி தீர்ப்பாய்'' எனக் குறிப்பிட்டுப் பாடியிருப்பது இங்கு நடந்த இறை விளையாட்டை எடுத்துரைப்பதாக உள்ளது. இத்தலம் மீது 11 பாடல்களைப் பாடிப் போற்றிய பின்னர் தென்திருமுல்லைவாயில் அடைந்தார் சுந்தரர்.

வருடந்தோறும் "கட்டமுது தரும் விழா' சித்ரா பெüர்ணமியன்று இத்தலத்தில் வெகு விசேஷமுடன் நடத்தப்படுகின்றது! சுந்தரருக்கு இறைவன் கட்டமுது அளித்த இடம், "வரிசைப்பற்று' என்றும், "இடமணல்' என்றும் தென்திருமுல்லைவாயிலுக்குப் போகும் வழியில் உள்ளது. (இவற்றுள் சில, பெரிய புராணத்தில் இல்லாத குறிப்புகள். ஆனால் தல புராணத்தில் உள்ளன.)

  ஆலயம் ஊரின் நடுவே அழகுற அமைந்துள்ளது! ராஜகோபுரம் இல்லை! நுழைவுவாயில் கடந்து, உள்ளே சென்றால் முதலில் தென்முகம் கொண்ட அம்பாள் சந்நிதியும், பின்னர் கிழக்கு முகம் கொண்ட ஸ்வாமி சந்நிதியும் காணப்படுகிறது.

 நீண்ட திறந்தவெளி மண்டபமும், அதைத் தொடர்ந்து மூடுதளமாக நீண்ட மகாமண்டபமும் அமையப் பெற்றுள்ளது. பின்னர் அர்த்த மண்டபமும், ஸ்வாமி கருவறையும் உள்ளன.

கருவறையுள் சிறிய லிங்கமாக அருள் பரப்புகின்றார் ஸ்வாமி ஸ்ரீ ஸ்வேத ரிஷபேஸ்வரர். தமிழில் "வெள்விடையீஸ்வரர்' என்று அழைக்கப்படுகின்றார்! வெள்ளடைநாதர் என்றும் இவரைக் கூறுவர்.

  மகாமண்டபத்தில் வலப்புறம் ஸ்ரீநடராஜமூர்த்தி, சிவகாமியம்மையுடன் அருள் புரிகின்றார். பிற உற்சவ விக்ரஹங்களும் உடன் அணிவகுக்கின்றன. மகாமண்டபத்தின் நடுவே வெளிச்சத்திற்கென மேற்புறம் சாளரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. வெளிமண்டபத்தில் மரத்திலான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஸ்வாமிக்கு இரண்டு நந்திகளும், அம்பாளுக்கு ஒரு நந்தியும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

அம்பாள் சந்நிதி அர்த்தமண்டபமும், மூலஸ்தானமும் அமைப்பில் சிறிதாக உள்ளன. அம்பிகை இங்கு, "காவியங்கண்ணியம்மை' என்றும், "நீலோற்பலாம்பாள்' என்றும் போற்றப்படுகிறாள். நின்ற வண்ணம் பேரழகுடன் அருள்பாலிக்கின்றாள் அன்னை.

  ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் சேர்த்து ஒரே திருச்சுற்று மட்டுமே உள்ளது!

 தேவகோஷ்டத்தில் நர்த்தன கணபதியை சக்கரவாகப் பறவை பூஜிக்கும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. பின்புறம் கிழக்கு நோக்கும் கணபதி சந்நிதி, வள்ளி-தேவசேனையுடன் முருகன் சந்நிதி, கஜலட்சுமி சந்நிதி என வரிசையாக உள்ளன. முன்புறம் மேற்கு பார்த்தவாறு இரண்டு லிங்கங்கள், மற்றும் பைரவர் வீற்றுள்ளனர். துர்வாச முனிவரது சிலையும் இங்குள்ளது. மேலும் சனீஸ்வரர், சூரியன், ஐயனார், நவக்கிரகங்கள் போன்றோர் அணி செய்கின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகையில் உள்ள இந்த சிவாலயத்தில் தினசரி இரண்டு கால பூஜைகள் நடக்கின்றன. தினமும் காலை 7 மணி முதல், இரண்டு கால பூஜைகள் நடக்கின்றன.

  தினசரி காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7.30 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும். கடைசியாக இவ்வாலயத்தில் 2004ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தேறியுள்ளது.

இத்தலத்தின் தீர்த்தமாக பால் கிணறும், தல விருட்சமாக வில்வமும் உள்ளன. இத்தல விசேஷங்களாக பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா, கார்த்திகை, தை அமாவாசை தீர்த்தவாரி, தைப்பூசம், சித்ரா பெüர்ணமி, சுந்தரர் விழா போன்றன வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

  இவ்வாலய அம்பிகைக்கு மகா அபிஷேகம் நடத்தி, புதுப்புடவை அணிவித்து வழிபட்டால் மகப்பேறு கிட்டும் என்பது இங்கு நிலவும் நம்பிக்கையாகும். போதிய வசதிகள் இங்கே உள்ளன. சீகாழியில் தங்கி இத்தல தரிசனம் செய்யலாம். சீகாழியிலிருந்து இங்கு வர மினி பஸ் வசதியும் உள்ளது!

நாகை மாவட்டம், சீகாழி தாலுகாவில், சீகாழியிலிருந்து திருமுல்லைவாயில் செல்லும் வழியில் வடகால் என்ற ஊருக்கு தெற்கே 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கடாவூர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com