ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

'தக்வா' எனும் இறையச்சம்

இறை நம்பிக்கை கொண்ட நல்லடியார்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்ற அரபிச்சொற்களில் ஒன்று, "தக்வா' என்பதாகும். இச்சொல்லுக்கு "இறையச்சம்', "பயபக்தி' என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். குர்ஆனிலும், நபிமொழித் தொகுப்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:45 pm IST

இறை நம்பிக்கை கொண்ட நல்லடியார்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்ற அரபிச்சொற்களில் ஒன்று, "தக்வா' என்பதாகும். இச்சொல்லுக்கு "இறையச்சம்', "பயபக்தி'

என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். குர்ஆனிலும், நபிமொழித் தொகுப்புகளிலும் இச்சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

உமர்(ரலி) அவர்கள் தொடர்பான நபி மொழி அறிவிப்பு ஒன்று, "தக்வா' எனும் இறையச்சத்தின் உட்பொருளையும், இறையச்சமுடையோரின் இலக்கணத்தையும் ஓர் எடுத்துக்காட்டின் மூலமாகத் தெளிவுப்படுத்துகிறது. அதாவது "ஒரு மனிதர், முட்கள்

நிறைந்த பாதையில் எவ்வாறு சிரமப்பட்டு, எச்சரிக்கை உணர்வுடன் நடந்து செல்வாரோ, அவ்வாறாக இறையச்சமுடையோர் செயல்படுவார்கள். மேலும் இத்தகையோர் இறைவனுடைய தண்டனைக்குப் பயந்து தீமைகளைத் தவிர்ப்பார்கள்; அவனுடைய

அருளை நாடி நற்செயல்கள் புரிவார்கள். இவற்றின் காரணமாக, இறைவனுடைய நெருக்கத்தையும், அன்பையும் பெற்றுக் கொள்வார்கள்' என்று எடுத்துரைக்கிறது.

திருக்குர்ஆன் வசனமொன்று இறையச்சத்தைப் பற்றிக் கூறும்பொழுது, "ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் எடுத்துச் செல்ல உகந்த கட்டமுது (கட்டுச் சாதம்) தக்வா எனும் இறையச்சமே' (2:197) என்று குறிப்பிடுகிறது. இறையச்சமென்னும் கட்டமுதான

து ஒருவருடைய வாழ்க்கைப் பயணத்திற்கும் இன்றியமையாதது என்பதையும், அதனை

க் கொண்டு அவர் பேணுதலுடன் நற்செயல்கள் புரிந்து இவ்வுலக வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் திருக்குர்ஆனின் இந்த உவமை

உணர்த்துவதாகவுள்ளது.

நபி(ஸல்) அவர்களும் இறையச்சத்தின் சிறப்பினை எளிய உதாரணங்களைக் கொண்டு தெளிவுப்பட விளக்கியுள்ளார்.

"இறையச்சத்தினால் உள்ளம் உருகி ஒருவன் அழுவானாயின், கறந்த பால் மடியில் புகாதது

போன்று அவன் நரகம் புகமாட்டான்.' அதேபோன்று "எவனுடைய உடல் இறையச்சத்தால் மயிர்க்கூச்செறிகிறதோ (மயிர் சிலிர்க்கிறதோ) அவன் செய்த பாவங்கள் அனைத்தும் மரத்திலிருந்து காய்ந்த இலைகள் உதிர்வது போன்று களையப்பட்டுவிடுகின்றன'

என்பன நபி மொழிகளாகும்.

மேலும் "இறையச்சமுடையோர் திண்ணமாகச் சொர்க்கம் புகுவர்' என்ற கருத்துக்கு இஸ்லாமிய வரலாற்றில் இடம் பெற்றுள்ள ஒரு சம்பவம், நல்லதோர் எடுத்துக்காட்-

டாக அமைகிறது.

அப்பாஸிய கலீபாக்கள் ஆட்சிக் காலத்தில் ஹாரூண் அல்ரஷீத் எனும் ஆட்சியாளர் மிகவும் புகழ்பெற்று விளங்கினார். இவருக்கு "தாம் இறந்த பின்னர் சொர்க்கம் செல்வோமா? நரகம் செல்வோமா?' என்பதை ஆதாரப் பூர்வமாக அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் நெடுநாட்களாகவே இருந்து வந்தது. இதற்காகப் பல அறிஞர்களையும், மார்க்கவல்லுநர்களையும் அரசவைக்கு அழைத்து அவர்களிடம் வினவினார். வந்திருந்த அனைவருமே ஒருமித்த குரலில்,

"ஒருவர் சொர்க்கம் செல்வதும், நரகம் செல்வதும் இறைவனுக்கு மட்டுமே தெரியும்; மனிதர்கள் எவருக்கும்

அதனை அறிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை' எனப் பகர்ந்தனர். ஆனால் அவைக்கு வந்திருந்த வாலிபர் ஒருவர் மட்டும் துணிச்சலுடன் எழுந்து, "ஆட்சியாளர் பெருந்தகையே! தாங்கள் எப்பொழுதாவது ஏதேனும் ஒரு

பாவச் செயலில் ஈடுபட வாய்ப்பிருந்தும் இறைவனுக்கு அஞ்சி அதனைத் தவிர்த்துக் கொண்டதுண்டா? இதற்கு

வெளிப்படையான பதில் கூறினால் தங்கள் ஐயத்தினை நான் தீர்த்து வைக்கிறேன்' என்றார். கலீபா வியப்புற்ற

நிலையில் சற்று யோசித்துவிட்டு, "ஆம்! ஒரு நாள் நான் படுக்கையறைக்குச் சென்றபோது அங்கே பணிப்பெண்

அறையைச் சுத்தம் செய்துவிட்டு, தனியே அமர்ந்திருந்தாள். அப்போது அவள்மீது இச்சை கொண்டு, அவளை அடைய வேண்டுமென்று அருகில் நெருங்கினேன். ஆனால் இறைத் தண்டனைக்குப் பயந்து நான் அப்பாவச் செயலில் ஈடுபடவில்லை' என்று நடந்த சம்பவத்தை நடந்தவாறே எடுத்துரைத்தார் கலீபா.

"அப்படியானால், கலீபா அவர்களே! தாங்கள் நிச்சயமாக சொர்க்கவாசிதான். இதில் எந்த ஒரு சந்தேகமும்

இல்லை' என்று திட்டவட்டமாகக் கூறினார் அந்த வாலிபர். தொடர்ந்து தன் கூற்றுக்கு ஆதாரமாக, ""எவன்

தன் இறைவனின் சந்நிதியில் (விசாரணைக்காக) நிற்பதைப் (பற்றி) பயந்து (தப்பான) சரீர இச்சையை விட்டுத் தடுத்துக் கொண்டானோ அவன் செல்லுமிடம் நிச்சயமாக சுவனபதிதான்'' (79:40-41) என்ற திருமறை வசனத்தை அவையோர் முன் கலீபாவை நோக்கி ஓதிக் காட்டினார். அவையிலிருந்த அனைவரும் வாலிபரைப் பாராட்டினர். கலீபா ஹாரூண் அல்ரஷீத்தும் மன நிறைவு பெற்றார்.

அந்த வாலிபர்தான், பிற்காலத்தில் இஸ்லாமிய மார்க்கச் சட்டங்களை வகுத்துத் தந்த சிறப்புக்குரிய இமாம்கள்

நால்வருள் ஒருவராகப் புகழ்பெற்று விளங்கும் ஷாபிஈ(ரஹ்) அவர்களாவர்.

நபி(ஸல்) நவின்றுள்ள இதைப் போன்ற மற்றொரு சம்பவம், இறையச்சத்துடன் செயல்படுபவர்களுக்குத் தம்

வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களையும், இடையூறுகளையும் இறைவன் எவ்வாறு நீக்குகிறான் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

காட்டு வழியே சென்று கொண்டிருந்த மூவர், திடீரென ஏற்பட்ட மழை-புயல் காரணமாக ஒரு மலைக்குகைக்குள்

சென்று ஒதுங்கினர். அப்பொழுது எதிர்பாராதவிதமாக மேலிருந்து ஒரு பெரிய பாறாங்கல் விழுந்து

அக்குகைவாயிலை முழுமையாக மூடிக் கொண்டது. அக்கல்லை அகற்ற அம்மூவரும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவர்கள் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். தாம் ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் இறைவனுக்கு அஞ்சி ஏதேனும் ஒரு நற்செயல் புரிந்திருந்தால் அதனை எடுத்துரைத்து இறைவனிடம் வேண்டி நின்றால் தமக்கு வழி பிறக்கலாம்- வழி கிடைக்கலாம் என்று, ஒவ்வொருவரும் இறைவனைப் பிரார்த்திக்கத் தொடங்கினர்.

மூவருள் ஒருவர் : தன் தாய், தந்தையர் உணவருந்துமுன் தானும், மனைவி, மக்களும் எப்பொழுதுமே உணவு

உட்கொண்டதில்லை. இவ்வாறிருக்க ஒரு நாள் அவர் இரவில் வீடு திரும்பியபோது  வெகுநேரமாகிவிட்டபடியால்

பெற்றோர்கள் சாப்பிடாமல் உறங்கிவிட்டனர். அவர்களுக்காக அவர் பால் எடுத்து வந்து பல மணிநேரம்

காத்திருந்தும் அவர்கள் கண்விழிக்கவில்லை. குழந்தைகள் பசியால் அழுதுகொண்டிருந்தனர். அதிகாலையில் பெற்றோர் விழித்த பின்னரே அவர்களை அருந்தச் செய்துவிட்டு அவரும், மனைவி, மக்களும் உணவு உட்கொண்டனர். இறைவனுக்கு அஞ்சி பெற்றோர் கடமையைப் பேணி, தான் அவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறி இறைவனிடம் இடர் தீர்க்கக் கோரினார் அவர். அப்பாறைக்கல் சற்று விலகியது. ஆனால் வெளிவருவதற்குப் போதிய வழி கிடைக்கவில்லை.

இரண்டாமவர் : தன் சிறிய தந்தை மகளுடைய அழகில் மயங்கி அவளை அடைய நெருங்கிய போது, "இறைவன்

பார்த்துக் கொண்டிருக்கிறான்; அவனுக்குப் பயப்படவில்லையா?' என்று அவள் கேட்டதையும், இறையச்சத்தால் அப்பாவச் செயலில் ஈடுபடாது தவிர்த்ததையும் நினைவுகூர்ந்து இறைவனிடம் மன்றாடி, வழி திறக்க வேண்டினôர். இப்பொழுது அக்கல் மேலும் சற்று விலகியது. ஆனால் வெளி வருமளவுக்கு வழி கிடைக்கவில்லை.

மூன்றாமவர் : ஒரு சமயம் அவரிடம் வேலை செய்த கூலியாட்களில் ஒருவன் தனக்குக் கிடைக்க வேண்டிய

கூலியைப் பெற்றுக் கொள்ளாமல் சென்றுவிட்டான். திரும்ப வரவில்லை. ஆதலால் அவனுக்குச் சேரவேண்டிய பணத்தைக் கொண்டு ஒரு ஆடு வாங்கி வளர்த்து, அது பிறகு பெருகி மந்தையாகி, அதன் வருவாய் பன்மடங்கானது. இந்த நிலையில் ஒரு நாள் அந்த வேலையாள் திடீரென வந்து தனக்குச் சேரவேண்டிய கூலியைக் கேட்டான்.

அங்கிருந்த ஆட்டு மந்தையையும், அவனுக்குச் சேரவேண்டிய சொத்துக்களையும் காட்டி அவற்றை எடுத்துச்செல்லும்படி அவர் கூறிய நேரத்தில் அக்கூலியாள் தன்னை அவர் கேலி செய்வதாக எண்ணிக் கொண்டான்.

உண்மையில் இத்தனைச் சொத்தும் அவன் கூலியின் சேமிப்பும், பெருக்கமும்தான் என்பதை உணர்த்தி, அந்த

வேலையாளிடம் அனைத்தையும் அவர் ஒப்படைத்தார். இறைவனுக்கு அஞ்சி இதனை முறைப்படி செய்ததாகக்

கூறி, இறைவனிடம் தனக்கு வந்த இன்னலைத் தீர்க்குமாறு வேண்டி நின்றார் அவர்.

இப்பொழுது அந்தக் கல், முழுமையாக அகன்றது. மூவரும் மனமகிழ்ச்சியுடன் இறைவனுக்கு நன்றி

செலுத்தியவர்களாக அக்குகையிலிருந்து வெளியேறினர். (அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)- நூல் : ஹதியா

ஷரீஃப்)

இவ்வாறாக, "தக்வா' எனும் இறையச்சத்தினால் நல்லடியார்கள் பல நற்பயன்களை இம்மையிலும், மறுமையிலும் பெற்றுக் கொள்கின்றனர். எனவேதான், இறைவன் திருமறையில் தன் அன்புக் கட்டளையாக, "ஓ! மனிதர்களே!

உங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள்' (22:1) என்றும், நபி(ஸல்) அவர்கள் தன் அறிவுரையாக, "நீங்கள்

எங்கிருந்தாலும், எல்லா நிலையிலும் இறையச்சத்துடன் வாழ்வீராக!' என்றும் எடுத்துரைக்கின்றனர்.

ஆகவே ஈருலக வாழ்வு சிறக்க, நாம் அனைவரும் இறையச்சம் கொண்டொழுகுவோமாக!

- எம்.கே.எஸ். பாவா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.