தண்ணீரில் தோன்றிய அம்மன்!
தேவர்களுக்கும், மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் சக்தி ரூபிணியாய் இருந்து, சகல உலகங்களையும் ஆட்சி செய்பவளே பராசக்தியான அம்பிகை. "இவளை வழிபடுவதே எல்லா தெய்வ வழிபாடுகளிலும் சிறந்தது' என


தேவர்களுக்கும், மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் சக்தி ரூபிணியாய் இருந்து, சகல உலகங்களையும் ஆட்சி செய்பவளே பராசக்தியான அம்பிகை. "இவளை வழிபடுவதே எல்லா தெய்வ வழிபாடுகளிலும் சிறந்தது' என்பார்கள் சாக்தர்கள்.
நமது நாட்டில், பல்வேறு பெயர், வடிவங்கள் தாங்கும் சக்தியை பரவலாக வழிபடுகிறோம். அவ்வகையில் சென்னை ஆதம்பாக்கத்தில், பரங்கிமலை ரயில் நிலையம் அருகே உள்ள பழண்டியம்மன் கோயிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்த்துக் கொண்டுள்ளது.
பற்பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள், இப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றிலிருந்து திடீரென்று அம்மன் சிலை ஒன்று வெளியே வந்தது. கிணற்றுக்குள்ளிருந்து தானாகவே அம்மன் சிலை தோன்றியது, அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், பக்திப் பரவசத்தையும் ஏற்படுத்தியது. பின்னர் இப்பகுதியில் வசித்த ஒரு அன்பர், அந்த அம்மனுக்கு கிணற்றுக்கு அருகிலேயே ஒரு சிறிய கோயிலை அமைத்தார். அந்த அம்மன் வடிவைக் கண்ட பெரியோர், "இது தொன்மையானது' என்று பரவசத்துடன் கூறினர். பழமையான விக்ரகம் என்பதால், "பழமையான அம்மன்' என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் "பழண்டியம்மன்' என இத்தேவியின் பெயர் மருவியதாகச் சொல்கின்றனர்.
பழண்டியம்மனை வணங்கியோரின் வேண்டுதல்கள் நிறைவேற, நிறைவேற, இக்கோயிலின் புகழ் நாளுக்கு நாள் பரவியது. பழண்டியம்மனுக்கு பெரிய அளவில் கோயில் கட்ட வேண்டும் என்கிற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டது. ஆலயத்தின் நிர்வாகி மற்றும் அர்ச்சகரின் முயற்சியால், பொதுமக்களின் ஒத்துழைப்போடு கடந்த 2004ஆம் ஆண்டு திருப்பணி தொடங்கப்பட்டு, கும்பாபிஷேகமும் இனிதே நடந்தது.
தன்னை வேண்டுபவர்களுக்கு சகல நன்மைகளையும் தருபவள் பழண்டியம்மன். குறிப்பாக திருமண பாக்யம், குழந்தை பாக்யம் தரும் சக்தி வாய்ந்தவள்.
இக்கோயிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. பழண்டியம்மன் தண்ணீரிலிருந்து தோன்றியவள் என்பதால், தெப்ப உற்சவத்தன்று, கருவறை அருகிலேயே தெப்பம் போல் அமைத்து, அதில் நீர் நிரப்பி வழிபாடு செய்யப்படுகிறது. அந்த நீரில் அன்னை இறங்கிக் கலந்திருப்பதாக ஐதீகம். மேலும் நவராத்திரி விழாவும் சிறப்புற நடத்தப்படுகிறது. இதுதவிர கார்த்திகை மாதத்தில் இக்கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு மிகவும் விசேஷமான முறைகளில் பூஜைகள் செய்யப்படுகின்றன. எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் ஏராளமான பக்தர்கள், இந்த அம்மனை தரிசித்து ஆனந்தப்படுகின்றனர்.
இவ்வாலயத்தின் பிரகாரத்தில், தேவி சந்நிதியின் பின்புறம் புற்று உள்ளது. பக்தர்கள் வெள்ளிக் கிழமைகளில் புற்றுக்குப் பால் ஊற்றி வணங்குகின்றனர். ஆறடி உயரத்தில் ஐந்து தலை நாகர், கணபதி, சிவன், நந்தி ஆகியோரின் சுதைச் சிற்பங்கள் புற்றின் அருகே காட்சி தருகின்றன. சுற்று மதிலின் பக்கவாட்டில் அஷ்டலட்சுமிகளும் சிற்ப வடிவில் அருள்கின்றனர். கோயில் மண்டபத்து விதானங்களிலும், சுற்றுச் சுவர்களிலும் பல்வேறு தெய்வங்களின் திருவுருவங்கள் தீட்டப்பட்டுள்ளன. பக்தர்கள் அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய ஒரு ஆலயம் இது.
பழண்டியம்மன் ஆலயத்தின் வளர்ச்சியில் பங்கு கொள்ள விரும்புகிறவர்களும், முடிவு பெற வேண்டிய ராஜ கோபுரத் திருப்பணி வேலைக்கு உதவி செய்ய விருப்பம் உள்ளவர்களும் தங்களால் இயன்ற பொருளுதவியை அளிக்கலாம். தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
ஆலயப் பரம்பரை அறங்காவலர் மற்றும் கோயில் அர்ச்சகருமான ஏ.டி. சுப்பராயன்,
கைப்பேசி எண்: 9282223832.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...