ஆதி பரம்பொருளான வாசுதேவன், பாற்கடலிலும் வைகுண்டத்திலும் நிரந்தரமாய் வசிக்கின்றான். ஆனால் தேவர்களாலும் நினைத்த மாத்திரத்தில், இந்தத் திவ்விய தேசங்களில் பெருமானை தரிசித்தல் இயலாது. அவர்கள் கதியே அப்படியெனில் மானுடர்களாகிய நம்மைப் பற்றி கேட்பானேன்?
"எண்பதத்தான் ஓரா முறை செய்யா மன்னவன் தண் பதத்தான் தானே கெடும்' என்கிறார் திருவள்ளுவர். "ஒரு மன்னன் என்பவன் எளிதில் பார்த்துப் பேசக் கூடியவனாக இருந்து, நீதி பரிபாலனம் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாத அரசன் கெடுவான்' என்கின்றார் திருவள்ளுவர்.
திருமாலுக்கோ, "ஜகத்ரட்சகன்' என்பது திருநாமம். அவர் அரசர்களுக்கெல்லாம் அரசர். இப்பூவுலகுக்கு மட்டுமின்றி அண்ட சராசரங்களுக்கும் அதிபதி. அப்படிப்பட்டவர், தன் படைப்புகள்-அதிலும் குறிப்பாக மனித குலம்-தன்னுடன் எளிதில் பேசுமாறுதான் இருக்க வேண்டும் என்று விரும்பாதிருப்பாரா? அதனால்தான் பல்வேறு அவதாரங்கள் எடுத்து, மக்களோடு மக்களாய் வாழ்ந்து, அவர்களுக்கு அறநெறிகளைப் போதித்து, முக்தியை வழங்குகின்றார்.
தானே வருவது போதாமல், தனது அடியார்களையும் அவ்வப்போது அனுப்பி வைத்து, தர்மத்தை நிலை நாட்டுகிறார். அதிலும், "இந்தக் கலியில் நாரணன் அடியார்கள் பலர் தோன்றி, நல்வழி காட்டுவார்கள்' என்கின்றன புராண நூல்கள்.
இத்தனை செய்தும் திருமாலுக்கு திருப்தி இல்லையாம். "அர்ச்சாவதாரம்' என்னும் வடிவில், நிலவுலகெங்கும் கோயில் கொண்டு திகழ்கின்றார். ஆலயங்களில் நாம் காணும் கல் மற்றும் ஐம்பொன்னால் ஆன சிலைகளுக்கே "அர்ச்சாவதாரம்' என்று பெயர். இந்த வடிவங்களால் பல கோடி மக்களை ஆட்கொள்கின்றார் பகவான்.
"ராமனும், கண்ணனும் தோன்றியிருந்த காலத்தில் நாமும் பிறந்திருந்தால் அவர்களைத் தரிசித்திருக்கலாம். கோயில்களில் நாம் காண்பது வெறும் சிலைகளைத்தானே?' எனக் கருதுபவர்களை, "அர்ச்சாவதார தத்துவம்' அறியாதவர்கள் என்றுதான் கூற வேண்டும்.
ராமாவதாரத்தில்கூட திருமால், ஒரு சாதாரண மனிதனைப் போலத்தான் நடித்தார். ஆனால் முனிவர்களில் சிலர் மட்டுமே ராகவனை "பரமாத்மா' என்று அறிந்து வைத்திருந்தனர். அதுபோல் அர்ச்சாவதாரத்திலும் கல் போலும், ஐம்பொன் போலும் இறைவன் காட்சி தருகிறார். யாரேனும் தன்னைக் களவாடினாலும் ஒப்புக் கொடுக்கிறார். ஆயின் யார் அவரை "பகவான்' என்றே நினைக்கிறார்களோ, அவர்களுடன் திருமால் பேசுகிறார்! விளையாடுகிறார்!
"ராம் லால்' என்ற சிறிய ராம விக்ரஹத்தை ஒரு சாது பூஜித்து வந்தார். அவர் ராமகிருஷ்ண பரமஹம்ஸரை தரிசிக்க வந்தபோது, ராம்லால் அவரிடமிருந்து பரமஹம்ஸரிடம் தாவிவிட்டார். அந்தச் சிறிய விக்ரஹத்தோடு தான் பல முறை விளையாடியிருப்பதாக ஸ்ரீ ராமகிருஷ்ணரே கூறியுள்ளார். பரமஹம்ஸரிடம் வந்த அந்த பகவான், மீண்டும் தன்னை ஏற்கெனவே ஆராதித்து வந்த சாதுவிடம் போகவேயில்லை. இதுவும் "ராம லீலை' என்று சமாதானமடைந்த அந்த சாது, ராம் லாலை பரமஹம்ஸரிடமே ஒப்படைத்துவிட்டு, தீர்த்த யாத்திரை போய்விட்டார்.
"உனக்கு உண்மையான பக்தி இருந்தால், உன் கையிலுள்ள பூமாலை- எதிரேயுள்ள கிருஷ்ண விக்ரஹத்தின் மேல் போய் விழ வேண்டும்; இல்லையேல் உன் தலையைச் சீவுவோம்' என்று "நரசிம்ம மேத்தா' என்னும் பக்தரை மிரட்டினார்கள் அந்நியர்கள். அடுத்த கணம், அந்த மாலை தானாகவே பறந்து சென்று, கண்ணன் தோள்களில் விழுந்தது.
"கேசவனே! எழுக' என்று ஆழ்வார் கூறியவுடன் பாம்பணை விட்டு நிமிர்ந்தார் குடந்தை ஆராவமுதர். இன்றும் அதே கோலத்தில் (உத்தான சாயி) தரிசனம் தருகிறார்.
"அந்நியர்களால் கடத்தப்பட்ட திருமால் விக்ரஹத்தை மீட்க டில்லி சென்றார் ராமானுஜர். "அது வெறும் சிலைதானே?' என்றார் பாதுஷா. "சிலையல்ல! என் செல்லப் பிள்ளை' என்று பதிலளித்த உடையவர், "வாராய்' என அழைத்ததும் அந்த விக்ரஹம் நடந்து வந்து, எம்பெருமானாரின் மடியில் அமர்ந்தது. இன்றும் கர்நாடக மாநிலம், திருநாராயண புரத்தில் அந்த "சம்பத் குமாரனை' அனைவரும் தரிசிக்கலாம்.
பானுதாஸர் என்ற பக்தரின் அழைப்பை ஏற்று பண்டரிபுரம் திரும்பினார் ஸ்ரீவிட்டல முர்த்தி. இப்படி ஓராயிரம் உதாரணங்கள் சொல்லலாம்.
திருமாலை, சிலை என்று பார்த்தால் சிலை! கலையென்று பார்த்தால் கலை! தெய்வம் என்று பார்த்துவிட்டால் தெய்வம்! சாதாரண தெய்வமல்ல, பேசும் தெய்வம். இதனைப் புரிந்து கொண்டவர்கள் பாக்கியசாலிகள்.
அப்படிப்பட்ட பாக்கியவான்களால், பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் "சிங்க புரி'யில் ஸ்ரீலட்சுமி நாராயண அர்ச்சாவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தற்போது இவ்வூர், "சிங்கனூர்' என்றழைக்கப்படுகிறது; திண்டிவனம்-விழுப்புரம் சாலையில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. தற்போது நூதன ஸ்ரீநிவாஸன், ஸ்ரீபத்மாவதி தாயார் அர்ச்சாவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. "ஆழி மழைக் கண்ணனை' அன்பால் வயப்படுத்திய ஆண்டாளுக்கென்று தனி சந்நிதி உருவாகியுள்ளது. திருப்பணிகள் நிறைவுற்று, கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
"நிகரில் புகழாய்! உலகம் மூன்றுடையாய்' என்று ஆழ்வாரால் துதிக்கப்பட்ட பெருமையுடைய "ஸ்ரீலட்சுமி நாராயணர்' கோயிலுக்கு விரைவில் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அனிதா ராதாகிருஷ்ணன் கைது! இன்றைய செய்திகள் ஜூலை 3 - நேரலை

ரீல்ஸ் அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு உதயநிதி கண்டனம்

அதிமுகவிலிருந்து வைகைச்செல்வன் விலகல்! தவெகவில் இணைகிறாரா?

லூக்கா மோட்ரிச் கால்பந்தின் ஜாம்பவான்..! குரோஷியாவின் கேப்டனுக்கு ரொனால்டோ புகழாரம்!
விடியோக்கள்

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples



