பாம்பின் வாயில் பால்...?

 திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் உள்ள ஊர், ரெ.குன்னத்தூர்! திருவண்ணாமலை வேலூர் சாலையில், போளூருக்கு சமீபம் 2 கி.மீ. தொலைவில், ரெ.குன்னத்தூர் கூட்டுச் சாலையில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் அமை
பாம்பின் வாயில் பால்...?

 திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் உள்ள ஊர், ரெ.குன்னத்தூர்! திருவண்ணாமலை வேலூர் சாலையில், போளூருக்கு சமீபம் 2 கி.மீ. தொலைவில், ரெ.குன்னத்தூர் கூட்டுச் சாலையில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஊர். இவ்வூரின் அருகில் "ரெண்டேரிப்பட்டு' என்னும் ஊர் உள்ளதனால் அதனைச் சேர்த்து ரெ.குன்னத்தூர் என்று அழைக்கின்றனர். சிலர், ஆர்.குன்னத்தூர் என்றும் அழைப்பர்.

     இவ்வூரின் பழமை வாய்ந்த சிவாலயம் ஸ்ரீ மரகதவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ வீர ஜம்பீஸ்வரர் கோயிலாகும். சம்புவராயர் ஆட்சிக் காலத்தில் "ராஜ கம்பீர நல்லூர்' என்று போற்றப்பட்ட இவ்வூர், படை வீட்டை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த ராயர்களின் முக்கிய ஊராகும்! கி.பி. 1317ஆம் ஆண்டு எழுப்பப்பட்ட இவ்வூர் சிவாலயம், அப்போதைய இப்பகுதி மன்னரான வீர ஜம்பன் என்பவரின் பெயரால் "வீர ஜம்பீஸ்வரம்' என்று அழைக்கப்பட்டது.

  மேலும் கிருஷ்ணதேவராயர், பராக்கிரம பாண்டியன் ஆகியோரது நிலக் கொடைகளையும், திருப்பணிகளையும் பெற்றுள்ளது இவ்வாலயம். வீர ஜம்பன் காலத்து கல்வெட்டு மற்றும் கிருஷ்ண தேவராயர் காலக் கல்வெட்டு ஆகியன இச்செய்திகளை நமக்குத் தெரிவிக்கின்றன. கிருஷ்ணதேவராயரின் சின்னமான காளையோடு கூடிய பிறைச் சின்னம், ஆலயத் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளது.

    இத்தனைச் சிறப்புகள் கொண்ட வீர ஜம்பீஸ்வரர் ஆலயம், காலத்தால் சீர்குலைக்கப்பட்டு இன்று பாழ்நிலையில் உள்ளது.  ஊரின் நடுவே, தார்சாலைக்கு இடப்புறம் அமைந்துள்ளது ஆலயம். மதில் சுவர்கள்  சரிந்து, உள்ளிருக்கும் சந்நிதிகள் பிரிந்துள்ளன.

   ஆலயத்தில் நுழைந்ததும் எழிலே உருவான நந்திதேவர் வீற்றிருக்கின்றார். மகாமண்டபம் மூடுதளத்தோடு உள்ளது. இதனுள் இடப்புறம் கணபதி வீற்றருள்கிறார். கணபதியின் தனி சந்நிதி முற்றிலும் சிதைந்துள்ளது. கால பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோரும் இம்மண்டபத்துள் உள்ளனர். அடுத்து அர்த்த மண்டபம்! கருவறை! கருவறையுள் கருணாமூர்த்தியாய் அருளாட்சி புரிகின்றார் ஸ்ரீ வீர ஜம்பீஸ்வரர்! வழவழ பச்சை இழையோடும் அழகிய பாணம்! மனம் கவர்ந்து இழுக்கின்றார். ஐயனைப் பணிந்து ஆலயத்தை வலம் வருகையில் முறையே கோஷ்டங்களில் உரிய தெய்வங்களைக் கண்ணுறுகின்றோம்.

     சுவாமி சந்நிதியின் விமானம் மிகவும் பின்னமுற்று, செடிகள் பல முளைத்து, திருப்பணி வேண்டிக் காத்திருக்கின்றது. அடுத்து, மேற்கில் சண்முகர் வீற்றருளும் தனிச் சந்நிதி! அதியற்புத அழகில் மிளிறும் சண்முகர் இவர்! இடது காலை மடித்தும், வலது காலை நாகத்தின் தலைமீதும் பதித்து உள்ளார். பால் அபிஷேகத்தின்போது ஆறுமுகர் திருமேனியில் இருந்து வழிந்து வரும் பால், பாம்பின் வாய் வழியே வருவது போலிருக்கிறது. இது, பாம்பு பாலை கக்குவதுபோல் வித்யாசத் தோற்றத்தை காட்டுகிறது.  மிக நேர்த்தியுடன், கலாரசனையோடு வடிவமைக்கப்பட்ட மூர்த்தம்! காணக் கண் கோடி வேண்டும்! இரு தேவியர்களான வள்ளி மற்றும் தெய்வானை உடனுள்ளனர்.

    அடுத்ததாக சுவாமிக்கு வலப்புறத்தில் அம்பிகை சந்நிதி! அம்பிகை இங்கு மரகத ஜொலிப்பில் அருள் புரிவதாலோ என்னவோ, "மரகதாம்பிகை' என்கிற திருநாமத்தோடு தேவி காட்சி தருகின்றாள்.

   அம்பிகை விமானமும் சீர் செய்யப்பட வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது. சுற்று மதில்களும் செப்பனிடப்பட வேண்டும். பழைய நவக்கிரக சந்நிதி பாழ்பட்டு சரிந்துவிட்ட காரணத்தால் ஈசான்ய திக்கில் நவகோள் நாயகர்களின் சந்நிதி புதிதாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

   ஸ்ரீ வீர ஜம்பீஸ்வரருக்கு தொடர்ந்து ஐந்து திங்கட்கிழமைகள் நெய்தீபம் ஏற்றி, பாலாபிஷேகம் செய்து, வில்வத்தால் அர்ச்சனை செய்து வர நினைத்தவை நிறைவேறும்!

    ஸ்ரீ ஆறுமுகப் பெருமானுக்கு தொடர்ந்து ஆறு வளர்பிறை சஷ்டியில் பால் அபிஷேகம் செய்து வில்வத்தால் அர்ச்சனையும் செய்து, ஏழாவது சஷ்டியன்று சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை செய்ய, அனைத்துத் தோஷங்களும் நீங்குவதோடு எதிரி பயமும் விலகும்! எண்ணியவை எண்ணியபடி நிறைவேறும்!

   அதுபோல் ஸ்ரீ மரகதவல்லி அம்பாளுக்கு ஒன்பது வெள்ளிகள் தொடர்ந்து பால் அபிஷேகம் செய்து, எலுமிச்சைப் பழம் மாலை சாற்றி, ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் திருமணத் தடை நீங்குவதோடு மாங்கல்ய பலமும் கூடும்! குடும்ப ஒற்றுமை ஓங்கும்!

    இவ்வாலய விசேஷங்களாக பிரதோஷ வழிபாடு, ஐப்பசி அன்னாபிஷேகம், மஹா சிவராத்திரி போன்றனவும், நவராத்திரி விழா மற்றும் ஆடி மாதம் 108 குத்துவிளக்கு பூஜையும் நடைபெறுகின்றன.

   சண்முகருக்கு பிரதி மாத சஷ்டியன்று சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் விமரிசையாக நடந்தேறுகின்றன.

   அருமை, பெருமை பல கொண்ட இச்சிவாலயம் பார்க்கப் பரிதாபகரமான நிலையில் உள்ளது வருந்தச் செய்கிறது. முதலில் கணபதிக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டு, மகா மண்டபத்தில் உள்ள விநாயகரை அங்கே பிரதிஷ்டை செய்ய வேண்டும். நவக்கிரக சந்நிதி அமைக்கப்பட வேண்டும். சுற்றுச் சுவர் எழுப்புதல், விமானம் செப்பனிடுதல் போன்றவை செய்யப்பட வேண்டும்.

   எனவே பெரிய மனம் படைத்த சிவ பக்தர்கள், இச்சிறப்புமிகு தொன்மைச் சிவாலயத்தைப் புதுப்பிக்க உதவிட வேண்டும். விருப்பமுள்ளவர்கள் நேரில் வந்து, தங்களாலியன்ற திருப்பணிகளை உபயமாகச் செய்து உதவலாம் என்கின்றனர் ஊர் மக்கள்.

படங்களும், படைப்பும் :   பழங்காமூர் மோ. கணேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com