அன்னியூர் அண்ணல்!

செந்நெல் கழனிகளும், சோலைகளும் செழித்து வளரும் சோழ நன்னாட்டில், காவிரி வடகரையில் அமையப் பெற்ற தேவாரத் திருத்தலங்களுள் ஒன்றாக  போற்றப்படுவது "திரு அன்னியூர்' என்னும் பொன்னூர்! ஒரு சந்தர்பத்தில், ரதி தேவ
அன்னியூர் அண்ணல்!
Published on
Updated on
2 min read

செந்நெல் கழனிகளும், சோலைகளும் செழித்து வளரும் சோழ நன்னாட்டில், காவிரி வடகரையில் அமையப் பெற்ற தேவாரத் திருத்தலங்களுள் ஒன்றாக  போற்றப்படுவது "திரு அன்னியூர்' என்னும் பொன்னூர்!

ஒரு சந்தர்பத்தில், ரதி தேவி இட்ட சாபத்தினால் ஒரு கரத்தை இழந்தார் சூரிய பகவான். பின்னர் சாப விமோசனம் பெற அன்னியூரை எய்தி சிவ வழிபாடு செய்தார். ஈசனது பேரருளால் இழந்த கை மீண்டும் முளைத்தது!

ரதி தேவி, சிவபெருமானால் பொசுக்கப்பட்ட தனது கணவன் காமனை மீட்க இத்தலத்தில் வீற்றருளும் ஆபத்சகாயேஸ்வரரை பிரார்த்தித்தாள். அக்னி தேவர் வழிபட்ட திருத்தலங்களுள் இதுவும் ஒன்றாகும்.

தீரா வெண்குஷ்டத்தால் அவதியுற்ற ஹரிச்சந்திர மகாராஜா, இத்தலத்திற்கு வந்தார்.  இறைவனின் கட்டளைப்படி வைகாசி விசாக நன்னாளில் தயிர் சாதம் நிவேதனம் செய்து நோய் நீங்கப் பெற்றார்.

மேற்கு திசைக்கு உரியவனான வருணனும் இங்கு வழிபட்டுள்ளான். பாண்டவர்கள் ஐவரும் கூட இங்கே ஈசனை பூஜித்துள்ளனர். அகத்தியர் இங்கு வழிபட்டதாகவும் தல புராணம் குறிப்பிடுகின்றது.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களும் இங்கு பாடியுள்ளனர். ராமலிங்க வள்ளலாரும் தனது திருவருட்பாவில் இத்தல இறைவனைப் போற்றியுள்ளார்.

ஆரவாரமற்ற அமைதியான இந்தப் பொன்னூர் கிராமத்தின் வடகோடியில், எழிலுற அமைந்திருக்கிறது சிவாலயம். தெளிந்த நீர் நிறைந்து, ஆலயத்தின் முன்னே அழகுற விளங்குகிறது இத்தலத்தின் தீர்த்தமான அக்னி தீர்த்தம்.

ஆலயத்தில் உள்ள சிறிய வாயில் மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்கிறோம். சுவாமி சந்நிதியின் மேலே அம்மையப்பர், சுதை வடிவில் அருட்காட்சி அளிக்கின்றார். ஒரே திருச்சுற்று கொண்ட இவ்வாலயம் மூடுதளமாக அமைந்துள்ளது. ஒரே மகாமண்டபத்தினைக் கொண்டு சுவாமி சன்னதி கிழக்கு முகமாகவும், அம்பாள் சந்நிதி தெற்கு முகமாகவும் அமையப் பெற்றுள்ளது.

அற்புதமான லிங்க உருவில் அருள்புரிகின்றார் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர்! அம்பாள், ஸ்ரீ பிரகன்நாயகி என்ற பெயருடன் அருள் மழை பொழிகின்றாள்! "பெரியநாயகி' என்று தீந்தமிழில் அழைக்கப் பெறுகின்றாள்!

தென்மேற்கில் கணபதியும், மேற்கில் கந்தனும் தனித்தனியே சந்நிதி கொண்டுள்ளனர். பிற கோஷ்ட தெய்வங்களும் முறையே அணி செய்கின்றன!

சூரிய பரிகாரத்திற்கு உகந்த இத்திருத்தலத்தில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் 25ஆம் தேதி முதல்-29ஆம் தேதி வரை காலையில் சூரியக் கதிர்கள் மூலவர் மீது விழும். சூரிய பூஜை, இங்கு வெகு சிறப்பாக நடக்கின்றது!

இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இவ்வாலத்தின் குடமுழுக்கு விழா, சென்ற 29.8.2010 அன்று மிகச் சிறப்பாக நடந்தது. இக்கோயிலின் நடை தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும். தினசரி மூன்று கால பூஜைகள் நடக்கின்றன.

மேலும் வைகாசி விசாகத்தில் சிறப்பு அபிஷேகமும், கார்த்திகை மாதம் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் விசேஷ அபிஷேக, ஆராதனைகளும் அற்புதமாக அரங்கேறுகின்றன! பிரதி மாத பிரதோஷமும் இங்கு விசேஷமே!

இக்கோயிலில் சோழர் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. வைகாசி விசாகத்தில் இத்தலத்தில் நீராடி, ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரருக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் நடத்தி, தயிர் சாதம் நிவேதித்து வழிபடுவோரின் எல்லாத் துன்பங்களும் நீங்கும்.  புத்திரப் பேறு அடையவும், திருமணத் தடை நீங்கவும் இத்தலத்தில் வழிபடுவது உசிதமாகும்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது பொன்னூர்! மயிலாடுதுறையிலிருந்து 8 கி.மீ. தூரத்திலும், நீடூரிலிருந்து 5 கி.மீ. தூரத்திலும் இத்தலம் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து நமச்சிவாயபுரம் செல்லும் பேருந்திலும், மயிலாடுதுறையிலிருந்து  பொன்னூர் மார்க்கமாக பாண்டூர் செல்லும் பேருந்திலும் பயணித்து இவ்வூரை அடையலாம்! ஆபத்சகாயேஸ்வரர் தாள் பணிந்து, ஆபத்துகள் நீங்கி, ஆன்ம பலம் பெறுவோம்! வருக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com