ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மங்கலம் தருவாள் மகாலட்சுமி

'நலம் தரும் சொல் நாராயணா' என்பர். மங்கலம் தரும் சொல் மகாலட்சுமி ஆகும். திருமகள் வழிபாடு உலகெங்கும் பரந்து விரிந்து காணப்படும் வழிபாடாகும். செல்வம் இந்த இடத்தில்தான் என்றில்லாமல் எல்லா இடங்களிலும்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:46 pm

இரா. இரகுநாதன்

"ந லம் தரும் சொல் நாராயணா' என்பர். மங்கலம் தரும் சொல் மகாலட்சுமி ஆகும். திருமகள் வழிபாடு உலகெங்கும் பரந்து விரிந்து காணப்படும் வழிபாடாகும். செல்வம் இந்த இடத்தில்தான் என்றில்லாமல் எல்லா இடங்களிலும் பரந்து கிடப்பதால், அனைத்து இடங்களிலும் மகாலட்சுமி விரவியிருக்கின்றாள்.

எங்கு மகாலட்சுமி இருக்கிறாளோ, அந்த இடம் செல்வச் செழிப்பு பெறும். மகாலட்சுமியின் திருவருள் பார்வையில் படுவோர் அனைவரும் அனைத்து நலனும் பெற்றுச் சிறப்பாக வாழ்வார்கள். மும்பை நகரில் மகாலட்சுமி கோயில் அமைந்த பிறகு அங்கே வியாபாரங்கள் பெருகின என்பர்.

அதனைக் கருத்திற்கொண்டே காஞ்சி மாமுனிவர் சந்திரசேகரேந்திர சுவாமிகள், சென்னையில் "ஓடை மாநகர்' எனும் பகுதியில் மகாலட்சுமியோடு அஷ்டலட்சுமிகளுக்கும் ஆலயம் அமைக்க அறிவுறுத்தினார். அப்போது அமைக்கப்பட்ட குழுவின் மூலம் கட்டப்பட்ட திருக்கோயில், சென்னை பெசன்ட்நகரில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோயிலென வழங்கும் அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயிலாகும். இது அஷ்டாங்க விமானத்துடன் அமைந்துள்ளது.



ஓம்கார úக்ஷத்திரம்
:

அனைத்துத் திருக்கோயில்களும், பொதுவாக ஆறு அங்கங்களுடன் அமைக்கப்படும். எட்டு லட்சுமிகளுக்கும் எட்டு அங்கங்களுடன், ஒரே விமானத்தின் கீழ் தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் எனும் அடுக்குமுறையில் அமைக்கப்பட்ட திருக்கோயில் அஷ்டலட்சுமி கோயிலாகும். "அஷ்டாங்க விமானம்' என்பது எல்லா இடங்களிலும் அமைக்கப்படக்கூடியது அல்ல. ஆகம முறைப்படி திருமால் திருக்கோயில்கள் அமையும் பல வகைகளில் ஒரு வகைக் கோயில் அஷ்டாங்க விமானம் அமைந்த கோயிலாகும்.

இந்த விமானம், எப்போதும் பசுக்கூட்டங்கள் செழிப்போடு மேய்ந்து கொண்டிருக்கக்கூடிய வளமான நிலத்திலோ, அல்லது ""ஓம்'' என்னும் பிரணவ ஒலி எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கக்கூடிய இடத்திலோதான் அமைக்கப்பட வேண்டும் என்பது விதியாகும். அந்த விதிப்படி, வங்காள விரிகுடா கரையோரம், எப்போதும் பிரணவத்தை ஒலித்துக் கொண்டிருக்கக்கூடிய காரணத்தினாலும், எட்டு லட்சுமிகளையும் தரிசனம் செய்து வரும் பாதை ஓம்கார வடிவில் அமைக்கப்பட்டுள்ளதாலும், ""ஸ்ரீ ஸ்தலம்'' எனும் இந்தத் தலம் ""ஓம்கார úக்ஷத்திரம்'' எனவும் அழைக்கப்படுகிறது.

மகா மேரு வடிவம் :

நான்கு திசைகளும் நான்கு நான்காகப் பிரியும்போது அறுபத்து நான்கு கோணங்கள் உருவாகும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அறுபத்து நான்கு கோணங்கள் உள்ளன என சொல்லுவோரும் உண்டு. அந்த அறுபத்து நான்கு கோணங்களால் அமைக்கப்பட்ட ஆதார பீடத்தில் அஷ்டாங்க விமானம் என்னும் மகாமேரு வடிவ விமானம் அமைத்துக் கட்டப்பட்டு, சென்னையைச் செழிப்பாக்கும் திருக்கோயில் அஷ்டலட்சுமி திருக்கோயில்! தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமல்லாமல், வட இந்தியா மற்றும் அயல்நாடுகளிலிருந்தும் அனைவரும் வந்து தரிசனம் செய்து செல்லும் வகையில் அமைந்துள்ள திருக்கோயில் இது.

எட்டு லட்சுமிகளின்  அருளாட்சித் தலம்

எந்தக் குறையுமின்றி சகல செல்வங்களுடன் முதலில் தோன்றியவள் ஆதிலட்சுமி. அவளை வணங்குவதால், நோய்கள் நீங்கும். அதற்காக அஷ்டமங்கலப் பொருட்களைத் தனது திருவடியின் கீழ் கொண்டு காட்சி தரும் வகையில் அமைந்து அருள் தருபவள் ஆதிலட்சுமி!

உணவு வளம், உற்பத்திப் பெருக்கம் போன்றவற்றைக் கொடுத்தல், வயிறு தொடர்பான குறைகளை நீக்குதல் ஆகியவற்றுக்காக யானை வாகனத்தில் காட்சி தருபவள் தான்ய லட்சுமி!

எந்தச் செயலுக்கும் மனத்துணிவு இல்லையெனில், செயலை நடைமுறைப் படுத்துவது கடினமாகும். அந்த எண்ணத்திற்கு வலுவூட்டுபவள் சிம்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் தைரிய லட்சுமி!

கன்னிகை இருவர் உதவிபுரிய, கன்னிகை பீடத்தில் நன்னிலையில் அமர்ந்து அருள்பவள் சந்தான லட்சுமி! இவள், "குழந்தைப் பேறு' நல்கும் குணவதி!

வெற்றியை நல்கும் வீரத் திருமகளாக அன்ன வாகனத்தில் அமர்ந்து அருளாட்சி செய்பவள் விஜயலட்சுமி.

கல்வியில் சிறக்க குழந்தைகளுக்கு அருளும் வகையில் சரஸ்வதி தேவியாக காட்சி தந்தவள், குதிரை வாகனத்தில் அமர்ந்து அருளும் வித்தியாலட்சுமியாகவும், சகல சௌபாக்கியங்களையும் குறைவின்றி நல்கும் வகையில், சௌபாக்கிய லட்சுமி என்னும் கஜலட்சுமியாகவும் காட்சி தருகிறாள்.

இடது கையில் கமண்டலம் தாங்கி, வலது கையில் வெற்றிலை வைத்து, மனித வாழ்விற்குத் தேவையான செல்வத்தை, வழிபடுவோருக்கு அளிப்பவளே தனலட்சுமி!

இந்த எட்டு வகை லட்சுமிகளும் ஒருங்கிணைந்து, மகாலட்சுமி எனும் வடிவில் திருமாலுடன் திருமணக் கோலத்தில் காட்சி நல்கும் திருமண பிரார்த்தனைத் திருத்தலம் அஷ்டலட்சுமி திருக்கோயிலாகும்.

திருமகள் துணைவனுடன் காட்சி நல்கும் இத்திருக்கோயிலில், திருமகளோடு தொடர்புடைய தசாவதாரங்கள், கமல விநாயகர், குருவாயூரப்பன், சுதர்சனர், தன்வந்திரி, அனுக்கிரக அனுமன் ஆகியோரின் சந்நிதிகளும் அமைந்துள்ளன.

திருப்பணி

மற்ற இடங்களில் கட்டப்பட்டுள்ள திருக்கோயில்களைப் போன்று இத்திருக்கோயிலைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் மிகவும் கடினமாகும். நேரடியாகக் கடலரசனின் பார்வையிலும், கதிரவனின் ஒளியிலும் கோயில் அமைந்துள்ளது.

அருள்பெற்ற பலர், இத்திருக்கோயிலில் அமைந்துள்ள சங்கநிதியம், பத்மநிதியம் உட்பட அனைத்து விமானங்களையும் திருப்பணி செய்யும் அவாவில் திருப்பணி செய்து வருகின்றனர். ஏற்கெனவே இரும்பில் அமைந்துள்ள கதவுகள் முதல் ஆணி வரையும் அகற்றப்பட்டு, சீரும் சிறப்பும் மிக்க வகையில் செப்பாலும், துருப்பிடிக்காத பொருட்களாலும் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்னும் பொது மக்கள் நலம் பெறும் வகையில் சில பணிகள் மற்றும் குடமுழுக்கு ஆகியவை செய்ய வேண்டிய நிலையும் உள்ளது. ஏற்கெனவே இந்த ஆலயத்தில் முதன் முதலாக 1976ம் வருடம், அதற்குப் பிறகு 1999ம் வருடங்களில் "சம்ப்ரோஷண வைபவம்' நடைபெற்றது.

மங்கலங்கள் நல்கும், "மகாலட்சுமி திருக்கோயில் திருப்பணி' என்னும் புனித கைங்கர்யத்தில் ஈடுபட விரும்புவோர் காசோலை, பணம், வரைவோலை, மணியார்டர் போன்றவற்றை ""அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில் திருப்பணி நிதி, பெசன்ட்நகர், சென்னை-600 090'' (இந்தியன் வங்கி, பெசன்ட் நகர் கிளை, கணக்கு எண்: 734527715) என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேல் விவரங்கள் தேவைப்படுமென்றால், திருக்கோயிலின் தொலைபேசி எண்: 044-24466777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.