பலன்தரும் பரிகாரத் தலம்: திருவோண நட்சத்திர பரிகாரத்துக்கு

மன்னன் அபராஜிதவர்மப் பல்லவன். திருப்பதி பெருமாளின் அழகில் மயங்கிப் போனார். அதே நினைவுகளுடன் தீர்த்த யாத்திரை செய்துகொண்டிருந்தபோது, ஒரு மலையைக் கண்டார். தன்னுடைய எண்ணத்தில் எப்போதும் நிறைந்திருக்கும்
பலன்தரும் பரிகாரத் தலம்: திருவோண நட்சத்திர பரிகாரத்துக்கு
Published on
Updated on
2 min read

மன்னன் அபராஜிதவர்மப் பல்லவன். திருப்பதி பெருமாளின் அழகில் மயங்கிப் போனார். அதே நினைவுகளுடன் தீர்த்த யாத்திரை செய்துகொண்டிருந்தபோது, ஒரு மலையைக் கண்டார். தன்னுடைய எண்ணத்தில் எப்போதும் நிறைந்திருக்கும் திருப்பதி ஸ்ரீனிவாசனை அங்கேயும் எழுந்தருளும்படி வேண்டினார். அபராஜிதன் மனத்தில் தோன்றிய பிரான், அவருக்காக அங்கே ஒரு ரதத்தில் காட்சி தந்தார். குதிரைகள் பூட்டப்பட்ட அந்த ரதத்தில் இருந்தபடி மன்னருக்கு அருள்புரிந்தார் திருப்பதி ஸ்ரீவேங்கடேசப் பெருமான்.

தன் நாட்டின் பாதுகாப்புக்காக ரதத்தில் செங்கோல் பூண்டு காட்சி தந்த பெருமாளுக்கு பிரசன்ன வேங்கடேசர் என திருநாமம் இட்டு அழைத்தார். பின்னர், இந்த மலை மீது ஒரு கோயிலையும் கட்டுவித்தார். பிற்காலத்தில், ராஜா தோடர்மால் திருக்கோயிலுக்குத் திருப்பணிகள் பல செய்வித்தார்.



வராகத் தலம்:
ஆதிவராக சுவாமி, ஆதிவராக úக்ஷத்திரம், ஆதி வராக புஷ்கரிணி என ஒரு தலத்துக்கு மிக முக்கியமானதாகப் போற்றப்படும் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் அமையப் பெற்ற தலம் இது. திருமலை திருப்பதியைப் போல் விளங்கும் தலமும்கூட.

திருப்பதியில் எவ்வாறு வராக சுவாமியை வணங்கிய பிறகே வேங்கடாசலபதியை தரிசிக்கச் செல்ல வேண்டுமோ அதே போன்றுதான் இங்கும். இந்த மலையில், லட்சுமி வராகர் சந்நிதி உள்ளது. இங்குள்ள ஆதிவராகரிடம் மனமுருகி வேண்டினால், தீராத தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வராக சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்கின்றனர்.

மலை மீது, வலம் வந்து பெருமாள் சந்நிதிக்குள் சென்றால், இங்கே மூலஸ்தானத்தில் பெருமாள் செங்கோலுடன் ராஜகோலத்தில் காட்சி தருகிறார். இவரது இரு மார்புகளிலும் இரண்டு மகாலட்சுமிகள் என்றும் நீங்காது அருள் புரிகின்றனர். வியாழக்கிழமை காலை, பெருமான் அலங்காரம் ஏதுமின்றி நேத்திர தரிசனம் தருகிறார். இது மிகவும் சிறப்பானது.

இங்கே ஸ்ரீனிவாசர், கள்ளர்பிரான் என இரண்டு உற்ஸவர்கள். சித்திரை பிரம்மோற்ஸவத்தில் கள்ளபிரானும், புரட்டாசியில் ஸ்ரீனிவாசரும் தேரில் வீதியுலா வருகின்றனர்.

தாயார் சந்நிதி: இந்த ஆலயத்தில் சற்று வித்தியாசமாக, அலர்மேல்மங்கைத் தாயார் இதே மலையில், தனி சந்நிதி கொண்டுள்ளார். லட்சுமி வராகர் சந்நிதிக்கு எதிரே கொடி மரம் உள்ளது. இவர் தனது வலது காலை ஆதிசேஷனின் வால் மீதும், இடது காலை ஆதிசேஷனின் தலை மீதும் வைத்து, மடியில் மகாலட்சுமியை அணைத்தபடி, காட்சி தருகிறார். இந்த மலையின் முக்கிய மூர்த்தியான இவருக்கே முதல் தீபாராதனை. பிரசன்ன வேங்கடேசருக்கு பெருவிழா நடக்கும்போதும், இங்கேயே கொடி ஏற்றப்படும்.

மேலும், ஸ்ரீசக்கரத்தாழ்வார், வேணுகோபாலர், ராமர் சந்நிதிகளும் இங்கே உள்ளன.

அடிவாரத்தில் ஆஞ்சநேயர்: இந்த மலையில் ஏறும் முன்னர், பேருந்து நிறுத்தத்தில் அருகே மலை அடிவாரத்தில் வீர ஆஞ்சநேயர் பறக்கும் நிலையில் தனியாகக் கோயில் கொண்டிருக்கிறார். இவரது சந்நிதியில் பக்தர்கள் தங்கள் கோரிக்கையை எழுதி, மட்டைத் தேங்காயுடன் வைத்து மஞ்சள் துணியில் கட்டி வேண்டிக் கொள்கிறார்கள்.

ஓணதீபம்: வையாவூர் திருத்தலத்தில், மாதாமாதம் திருவோண நட்சத்திரங்களில் ஓணதீபம் ஏற்றுகின்றனர். இதற்கு ஒரு புராணக் கதையைச் சொல்கிறார்கள். எலி ஒன்று... சிவாலயம் ஒன்றில் வசித்து வந்தது. ஒருமுறை, சந்நிதியில் இருந்த விளக்கு எண்ணெய் குறைந்து, அணையும் நிலையில் இருந்தது. அப்போது, விளக்கில் தற்செயலாக அந்த எலி குதித்தது. அதனால், அந்த வேகத்தில் திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமாக எரிந்தது. இந்தப் புண்ணியத்தால், அந்த எலியே மறு பிறவியில் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்ததாம். பின்னர், மகாபலி திருவோண நட்சத்திரத்தில் பெருமாளால் ஆட்கொள்ளப்பட்டார். அதை நினைவூட்டும் வண்ணம், இங்கே திருவோண நட்சத்திரங்களில் அகண்ட தீபம் ஏற்றுகின்றனர். அன்றைய தினத்தன்று காலையில் ஸ்ரீனிவாசர் யாக மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். அப்போது திருமஞ்சனம், திருக்கல்யாண வைபவங்களும் நடக்கின்றன. பெருமாள் சந்நிதியில் அகண்ட தீபத்தில் நெய் விளக்கேற்றி சுவாமி பாதத்தில் வைத்து ஆராதிக்கின்றனர். இந்த தீப தரிசனம் மிகவும் சிறப்பானது. திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் தீபத்துக்கு நெய் கொடுத்து வேண்டிக்கொண்டால் அந்த தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும், புரட்டாசி மற்றும் ஆவணி திருவோணம் இங்கே மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புரட்டாசித் திருவோணத்தில், ஏழு மலைகள் போல அன்ன நைவேத்யம் படைத்து, ஏழு நெய் தீபம், ஏழு வகையான பட்சணங்கள், காய்கறிகள் வைத்து பூஜிக்கின்றனர். இத்தலம் திருவோண நட்சத்திரத்துக்கு பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது.

இருப்பிடம் : செங்கல்பட்டில் இருந்து சுமார் 20 கி.மீ., தொலைவு. சென்னை- திருச்சி சாலையில், படாளம் கூட்ரோட்டில் இருந்து வேடந்தாங்கல் செல்லும் வழியில் சுமார் 4 கி.மீ.ல் கோயில் உள்ளது. மலை மீது படிகளில் ஏறிச் செல்ல வேண்டும்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8-12.30 வரை, மாலை 4-7 வரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com