விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

குரு பரிகாரத்துக்கு... சென்னை, பாடி - திருவதாயம் திருவல்லீஸ்வரர் கோயில்

வேதம் அறிந்தவர், ஞானம் நிறைந்தவர், தன் பார்வையினால் மங்களத்தைத் தருபவர் என்றெல்லாம் போற்றப்படும் குரு பகவானுக்கு ஒரு சிக்கல் வந்தது. சகோதரர் மகரிஷி உதத்தியர் என்பவரின் மனைவி யை தாய் போல் கருதி வணங்கி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:14 am

மயில் வாகனன்

வேதம் அறிந்தவர், ஞானம் நிறைந்தவர், தன் பார்வையினால் மங்களத்தைத் தருபவர் என்றெல்லாம் போற்றப்படும் குரு பகவானுக்கு ஒரு சிக்கல் வந்தது. சகோதரர் மகரிஷி உதத்தியர் என்பவரின் மனைவி யை தாய் போல் கருதி வணங்கி வந்தவருக்கு ஒரு முறை மனத்தளவில் தவறான எண்ணம் எழுந்தது.

ஓரிரு கணமே அவர் பார்வை தவறாகச் சென்றாலும், அவரது ஞானம் ஆதிக்கம் செலுத்த உடனே அந்த எண்ணத்தில் இருந்து மீண்டார். அப்போது தனது பார்வையை அவ்விடத்திருந்து திருப்ப, அங்கே மரக்கிளை ஒன்றில் கருங்குருவி ஒன்று இருந்தது.

குருவின் பார்வை பட்டதால், அந்தக் குருவிக்கு மனித உடலுடனும் குருவித் தலையுடனும் விகார உருவில் ஒரு குழந்தை பிறந்தது. தன் நிலையை எண்ணி வருந்திய குருவிக் குழந்தை, இந்த உருவில் இருந்து விமோசனம் பெற திருவலிதாயத்தில் பரமேஸ்வரனை நினைத்து தவத்தில் ஈடுபட்டது.

அதே நேரம், கண நேரமே ஆனாலும், தவறான பார்வையினால் மன அமைதி இழந்து தவித்த குருவும் தன் பாவம் போக இங்கே தவத்தில் ஈடுபட்டார். இருவரின் தவத்துக்கும் மனமிரங்கிய ஈசன், இருவருக்கும் ஒருசேர தரிசனம் தந்து அருள் புரிந்தான்.

ஈசனின் கருணைப் பார்வையில் கருங்குருவி தன் சுய உருவான மனித உருவைப் பெற்றது. அவரே வேதம் நான்கும் கற்றுணர்ந்த மகரிஷி பரத்வாஜர். கருங்குருவிக்கு வலியன் என்று பெயர். வலியனாகிய கருங்குருவி வழிபட்டதால், இந்த இடம் வலிதாயம் என்றும், ஈசன் திருவல்லீஸ்வரர், திருவலிதமுடைய நாயனார் என்றும் சிறப்பு பெற்றார்.

மனத்தளவில் தீய எண்ணம் ஏற்பட்டாலும் அதனைப் போக்க எண்ணி தவமிருந்த குரு பகவானுக்கு, அவருடைய புகழ் பெருகவும், அவர் வினைதீர்த்த இந்தத் தலத்தில் அவரது பார்வை சுபம் பெறவும் ஈசன் வரமளித்தார். குருவுக்கு பாப விமோசனம் அளித்து, அவரது சுப பார்வை பெருக ஈசன் வரமளித்ததால் இந்தத் தலம் குருவுக்கு உரிய புனிதத் தலமாகக் கருதப்படுகிறது.

தலத்தின் மூலவர் திருவல்லீஸ்வரர். சுயம்பு மூர்த்தி. அம்மனின் திருநாமம் ஜெகதாம்பிகை என்பது. இங்கே பாதிரி கொன்றை மரம் தலவிருட்சமாகத் திகழ்கிறது. பரத்வாஜ தீர்த்தம். சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான தலம் எனப்படுகிறது. இது சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாம். இறைவனின் கருவறை அரை வட்ட வடிவில் உள்ளது. கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் மூலவர் கருவறை அமைந்துள்ளது. தொண்டை மண்டலக் கோயில்களின் அமைப்பு நன்றாகத் தெரிகிறது.

பிரம்ம புத்திரிகளான கமலி, வல்லி ஆகிய இருவரையும் விநாயகர் இத்தலத்தில்தான் திருமணம் செய்து கொண்டார் என்பது ஐதீகம். இதை விளக்கும் பொருட்டு, இங்கே கமலை, வல்லியுடன் விநாயகரின் உற்ஸவர் விக்ரஹம் உள்ளது. மேலும், இங்கே சிவலிங்கத்தை வழிபட்ட நிலையில் ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளது.

திருஞான சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலம். தொண்டை மண்டலத்தில் உள்ள பாடல் பெற்ற சிவாலயங்கள் 32ல் 21வது தலமாக, முக்கியமான திருத்தலமாகத் திகழ்கிறது. இந்தத் தலத்தை அருணகிரியாரும் பாடியுள்ளார்.



குரு சந்நிதி
: இங்கே குரு பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது. தேவர்களின் குல குருவான வியாழ பகவானுக்கு தனி சந்நிதி அமைந்துள்ள கோயில்களில் தனித்துவம் வாய்ந்த தலம் இது. கோயிலில் கோபுரம் தாண்டி உள்ளே செல்லும்போது வலப்புறம் இந்த சந்நிதியை தரிசிக்கலாம். தன் பாவம் தீர, இத்தலத்தின் புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார் குரு பகவான் என்பதால், இத் தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கிட தோஷங்கள் விலகும்.



பிரார்த்தனை
: திருவல்லீஸ்வரரை வணங்க நோய் நீங்கும். குறிப்பாக பெüர்ணமியில் வழிபட, நற்பேறுகள் கிடைக்கும். இங்கே சுவாமி சந்நிதியின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி கொண்டைக் கடலை மாலை அணிவித்து ஞானமும் கல்வியும் கிடைக்க பிரார்த்திக்கிறார்கள். வியாழக் கிழமைகளில் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால், ஜாதகத்தில் குரு தொடர்புடைய தோஷம் உள்ளவர்களுக்கு அந்த தோஷம் விலகி நற்பலன்

கிட்டும்.

இருப்பிடம் : சென்னை பாரிமுனையில் இருந்து அம்பத்தூர் செல்லும் வழியில் பாடி பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவு. பஸ் வசதி உண்டு.

திருவிழாக்கள்: சித்திரையில் பெருந்திரு

விழாவான பிரம்மோற்ஸவம் நடைபெறுகிறது. மேலும், தை கிருத்திகை, குரு பெயர்ச்சி விழாக்கள் வெகு சிறப்பானவை.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6.30-12 வரை, மாலை 4.30-8.30 வரை தகவலுக்கு: 044-26540706

திட்டை குருபகவான்

திட்டை குருபகவான் கோவில் குரு பரிகாரத்திற்கு சிறந்த தலமாக விளங்குகிறது. தற்போது திருப்பணி வேலைகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. சுமார் 17 ஆண்டுகளுக்கு பின் திருப்பணி நடைபெறுகிறது. வரும் தை மாதம் குடமுழுக்கு விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

குருபெயர்ச்சியை முன்னிட்டு ஜுன் 1 முதல் 4 வரை இக்கோயிலில் பரிகார ஹோமங்கள் நடைபெற உள்ளன.

தகவலுக்கு: 04362-252858

டி. கோவிந்தராஜு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.