சித்தர் கருவூரார், இந்த ஈசனை வேண்டித் தொழுது அருள் பெற்றவர். இங்கே கோயிலில் தென்மேற்கு மூலையில் இவரின் சந்நிதியை தரிசிக்கலாம். கருவூரார் பற்றற்றவராக வாழ்ந்தவர். இருப்பினும், இவரின் செயல்களால் வெறுப்புற்ற கோயில்வாழ் அந்தணர்கள் இவர் குறித்து அரசனிடம் அடிக்கடி புகார் கூறியுள்ளனர். மது அருந்துதல், புலால் உண்ணல் என சில குறைகள் குறித்து மன்னனிடம் புகார் சென்றது. மன்னனும் இவரை அழைத்து சோதிக்க, இவர் மீது மன்னனால் குறை எதுவும் காண இயலவில்லை. எனவே, இவர் குறித்துப் புகார் கூறியவர்கள் மீதே மன்னன் தண்டனை வழங்கினான். இருப்பினும் மீண்டும் மீண்டும் கருவூரார் மீது புகார்கள் குவியவே, இவர் தைப்பூச நன்னாளில், ஆநிலையப்பர் முன் நின்று, அவரிடமே ஐக்கியமானார்.