பலன்தரும் பரிகாரத் தலம்

ஆனால் நம்மை நம்பியுள்ள நம் கால்நடைச் செல்வங்களுக்குத் துன்பம் வந்தால்...
பலன்தரும் பரிகாரத் தலம்

பசுக்களின் நோய் தீர்க்கும் ஸ்ரீகோமாளி அரங்கன்

நமக்குத் துன்பம் வந்தால் அதனைத் தீர்க்க பல்வேறு புண்ணியத் தலங்களுக்கு செல்கிறோம். ஆனால் நம்மை நம்பியுள்ள நம் கால்நடைச் செல்வங்களுக்குத் துன்பம் வந்தால்...
 அதற்கும் ஒரு பரிகாரத் தலம் உண்டு. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ஒன்னிபாளையத்தில் உள்ள ஸ்ரீகோமாளி அரங்கன் கோவில் கால்நடைகளின் துன்பங்களைத் தீர்க்கும் புண்ணியத் தலமாகத்
 திகழ்கிறது.
 மிகப் பழைமையான கோவில். கோவை மாவட்டத்தில் மிகவும் புகழ் பெற்ற கோவிலும்கூட. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்தக் கோவில் அடர்ந்த காட்டுக்குள் இருந்தது.
 அந்தக் காலத்தில் புதர்கள் மண்டிக் கிடந்ததாலும், அச்சத்தின் காரணமாகவும் இந்தக் கோவிலுக்கு யாரும் செல்லாமல் இருந்தனர். அப்பகுதியில் வசித்த ஒருவர் பெருமாளை பூஜித்து வந்தார்.
 ஒருமுறை அவர் வளர்த்து வந்த மாடுகளுக்கு கடும் நோய் ஏற்பட்டது. அவர் அவற்றுக்கு வைத்தியம் பார்க்க பல இடங்களுக்கும் போனார்.
 ஆனால், நோய் தீர்ந்தபாடில்லை. கால்நடைகள் கதறுவதைக் கண்டு இவர் உள்ளம் கதறினார். அந்தப் பெருமாளை நாடிச் சென்றார். "பெருமாளே... இந்த மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நோயைத் தீர்த்து அவற்றுக்கு அருள் புரிய வேண்டும்' என்று வேண்டினார்.
 அவருக்கு கோயில் தீர்த்தத்தை மாடுகளுக்கு அளிக்குமாறு ஏதோ ஒரு சத்தம் காதில் கேட்டது. பெருமாளின் தீர்த்தத்தை வாங்கிக் கொண்டு ஓடோடிச் சென்றவர், அந்த மாடுகளுக்குக் கொடுத்தார்.
 பெருமாளின் பிரசாதமான தீர்த்தத்தை மாடுகள் உட்கொண்டதும் அவற்றின் நோய் தீர்ந்தது. அவை வழக்கம் போல் எழுந்து நடமாடின. ஆச்சரியப்பட்ட அவர், இதுபற்றி கிராமத்தினரிடம் கூறினார். சுற்று வட்டார கிராமங்களுக்கும் இந்தத் தகவல் பரவியது. அவர்களும் கால்நடைகளை கோவிலுக்கு அழைத்து வந்து வேண்டி பரிகாரம் பெற, இந்தக் கோவில் பிரபலமடைந்தது.
 ஒரு வேப்பமரத்தின் கீழ் பெருமாள் தனியாக கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
 சுற்றிலும் தடுப்புச் சுவர். அருகே தெற்கில் பழைமையான மண்டபம். முன்புறம் பெரிய பசுவின் சிலை நிறுத்தப்பட்டு அதற்கும் வழிபாடு செய்யப்படுகிறது. கோவிலைச் சுற்றிலும் மிகப் பெரிய ஆலமரங்கள் பரந்து விரிந்துள்ளன.
 குவிந்து கிடக்கும் பசுக்களின் சிலைகள்: தங்கள் பசுக்களின் நோய் தீரப் பரிகாரம் பெற்றவர்கள் அங்கே பசுக்களின் சிறிய சிலைகளைச் செய்து பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். சுமார் நூற்றுக்கணக்கான சிலைகள் இங்கே பரவிக் கிடக்கின்றன.
 திருவிழா: வருடத்திற்கு ஒருமுறைதான் திருவிழா நடக்கிறது. முன்பு இப்பகுதியில் போக்குவரத்து இல்லை என்பதால் விழாவில் கலந்து கொள்ள கோவை மாவட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வண்டிகளில் பக்தர்கள் வருவர். இதனைப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சி. இப்போதும் வண்டிகளில் விவசாயிகள் வந்து செல்கின்றனர். அருகிலுள்ள வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த ராமர் பஜனைக் குழுவினர் ஆண்டுதோறும் பஜனை பாடியபடியே பாத யாத்திரையாக வந்து வழிபடுகின்றனர். அப்போது அன்னதானமும் நடக்கிறது.
 பரிகாரம்: இங்கே தரப்படும் தீர்த்தத்தை நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைச் செல்வங்கள் உட்கொண்டால் நலமடையும்.
 அமைவிடம்: கோவை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் வீரபாண்டி பிரிவிலிருந்து கிழக்கே காளிபாளையம் வழியாக 5 கி.மீ. சென்றால் ஒன்னிபாளையம் கிராமப் பிரிவில் இக்கோவிலின் வரவேற்பு வளைவு தெரியும். இதிலிருந்து வடக்கே சென்றால் ஒரு தோட்டத்தில் இக்கோவில் உள்ளது. வாகன வசதி குறைவு. சொந்த வாகனங்களில்தான் செல்ல முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com