

பீகார் மாநிலம், மிதிலாபுரி மாவட்டத்தில் உள்ளது உமாதேவி ஆலயம். 51 சக்தி பீடங்களில் 17வது பீடமாக விளங்குகிறது. அம்மனின் உடற்கூறுகளில் இடது தோள் விழுந்த இடமாக இது கருதப்படுகிறது.
மிதிலாபுரி பீடத்தில் உள்ள சக்தி, உமா (மகா தேவி) என்ற திருநாமத்துடனும், இறைவன் மஹோதர் என்ற திருநாமத்துடனும் காட்சியளிக்கின்றனர். ஆதிகாலத்தில் மிகப் பிரசித்தி பெற்று விளங்கிய மிதிலாபுரி சக்தி பீடம், தற்போது ஜனக்புரி என்று குறிப்பிடப்படுகிறது.
அயோத்தி மன்னன் இக்ஷ்வாகுவின் நூறு புத்திரர்களில் திறமையானவன் நிமி. கெüதம முனிவரின் ஆசிரமத்தை அடுத்துள்ள வைஜயந்தா என்னும் இடத்தைத் தேர்ந்தெடுத்து அரசைத் தோற்றுவித்தான். ஒரு முறை அரசன் நிமி, பெரும் வேள்வி செய்ய திட்டமிட்டான். அதற்குத் தலைமை தாங்கி நடத்திக் கொடுக்க வசிஷ்டரை வேண்டினான். ஏற்கெனவே, ஒரு யாகத்தை நடத்திக் கொடுப்பதாக இந்திரனுக்கு வசிஷ்டர் வாக்குக் கொடுத்திருந்தார். அந்த யாகத்தை முடித்துவிட்டு வந்த பிறகு, நிமியின் யாகத்தை நடத்துவதாகக் கூறி வசிஷ்டர் இந்திரலோகம் சென்றுவிட்டார்.
கால தாமதம் ஏற்பட்டதால், கெüதமரை வேள்வி நடத்தும்படி நிமி வேண்டினார். அவரும் மகிழ்ச்சியுடன் யாகத்துக்குத் தலைமை தாங்கினார். இந்தப் பெரும் வேள்வியால் களைப்படைந்த நிமி நீண்ட தூக்கத்திலிருந்தபோது இந்திரலோகம் சென்ற வசிஷ்டர் திரும்பி வந்தார். நடந்ததை அறிந்தவர், ஏமாற்றத்துடன் பெருஞ்சினம் கொண்டு, "நீ இனி உயிரற்ற உடலாக இரு' என்று நிமிக்கு சாபம் கொடுத்தார். நித்திரையிலிருந்து விழித்தெழுந்த நிமி, வசிஷ்டரின் சாபத்தை அறிந்து ஆத்திரம் கொண்டார். வசிஷ்டரும் சடலமாக மாறட்டும் என்று சாபம் கொடுத்தார்.
உயிர் நீங்கிய நிமியின் உடலை அங்கிருந்த முனிவர்கள் தைலத்தில் இட்டு பக்குவப் படுத்தினர். இதன்பின் முனிவர்கள் ஒன்றுகூடி நிமிக்காக யாகம் நடத்தினர். யாகத்தின் முடிவில் தோன்றிய தேவர்கள், வாயு உருவில் இருந்த நிமியிடம், விரும்பினால் மீண்டும் மனித தேகத்துடன் நீ வாழலாம் என்றனர்.
இனி மனித உருவில் வாழ விரும்பவில்லை, அனைவர் கண்களிலும் நிரந்தரமாக இருக்க விரும்புவதாக நிமி கூறவே, தேவர்கள் அவ்வாறே வரம் அளித்தனர். இதனால்தான் நிமி எல்லா உயிர்களின் கண்களிலும் இமைகளாக சிமிட்டிக் கொண்டிருக்கிறான். அந்தச் சிமிட்டலால் வரும் காலத்துக்கு நிமிடம் என்றானது.
இவ்வாறு புராண வரலாற்றைத் தன்னுள்ளே கொண்டுள்ள மகாசக்தி பீடத்துக்குரிய சின்னங்கள் எதுவும் இன்று மிதிலையில் காணப்படவில்லை. அருவமாகக் காட்சி அளிக்கும் கல்லாலான சிறு கோயிலையே உமா தேவி கோயில் என்கிறார்கள்.
ஜனக்புரி என்ற மிதிலையில் ஒரு காலத்தில் எண்ணற்ற கோயில்கள் இருந்தனவாம். சீதாதேவி பிறந்ததும் இங்கேதான். ஒவ்வோர் ஆண்டும் அட்சய திருதியையை ஒட்டி ஏழு நாட்கள் சீதாதேவியின் பிறந்த விழா இங்கே கொண்டாடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.