தீராத நோய்களும் தீரும் அர்த்தகிரி ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில்

திரேதாயுகத்தின்போது ஸ்ரீராமருக்கும் ராவணனுக்கும் போர் நடந்தது. போர் தீவிரம் அடைந்த வேளையில், ராவணனின் மகன் இந்திரஜித், லட்சுமணன் மீது பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தான்.

திரேதாயுகத்தின்போது ஸ்ரீராமருக்கும் ராவணனுக்கும் போர் நடந்தது. போர் தீவிரம் அடைந்த வேளையில், ராவணனின் மகன் இந்திரஜித், லட்சுமணன் மீது பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தான். பிரம்மாஸ்திரத்தின் வலிமையால் மூர்ச்சையாகிக் கீழே விழுந்த இளவல் லட்சுமணனைக் காப்பாற்றும் வழி தெரியாமல் அனைவரும் தவித்தனர். அப்போது அருகே இருந்த ஜாம்பவான், இமய மலைச் சாரலில் உள்ள சஞ்சீவி மலையைக் குறித்தும் அதன் தன்மை குறித்தும் ஆஞ்சநேயரிடம் தெரிவித்தார்.

அந்த சஞ்சீவி மலையில் உள்ள மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள் பற்றி விவரித்த ஜாம்பவான், ஆஞ்சநேயரிடம் உடனே மூலிகையைக் கொண்டு வருமாறு தெரிவித்தார். இதையடுத்து, சஞ்சீவி மலை நோக்கித் தாவிச் சென்றார் ஆஞ்சநேயர். ஆனால், சஞ்சீவி பர்வதத்தில் உள்ள மூலிகையை அவரால் கண்டறிய முடியவில்லை. லட்சுமணனின் உயிரைக் காக்கும் பொருட்டு, அந்தப் பர்வதத்தையே பெயர்த்தெடுத்து, போர்க்களமான இலங்கை நோக்கி எடுத்து வானவீதியில் சஞ்சாரம் செய்தார். அவ்வாறு அவர் வந்தபோது, அந்த மலையின் ஒரு பகுதி இந்த மலையில் விழுந்தது. இதனாலேயே இந்தப் பகுதிக்கு அரகோண்டா என்று பெயரேற்பட்டது. அர என்றால் துண்டு, கோண்டா என்றால் மலை. அரகோண்டா என்றால் மலையின் ஒரு பாகம் என்று பொருள்.

ஆந்திர- தமிழக எல்லையில், சித்தூர் மாவட்டத்தில் உள்ளது அர்த்தகிரி ஆஞ்சநேயர் திருக்கோயில். சித்தூரில் இருந்து சுமார் 22 கி.மீ தொலைவு. சித்தூரில் இருந்து புங்கனூர் செல்லும் வழியில் உள்ளது. சுயம்பு விநாயகர் எழுந்தருளியுள்ள காணிப்பாக்கத்தில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோயில். ஆந்திராவில், பனை வெல்லத் தயாரிப்புக்குப் பிரசித்தி பெற்றது இந்த அரகோண்டா. இதற்கு அருகில் உள்ளது இந்தத் திருக்கோயில்.

இந்தக் கோயிலில் ஒரு தடாகத்தை நாம் பார்க்கலாம். இந்தத் தடாகத்தில்தான் சஞ்சீவி பர்வதத்தின் ஒரு பகுதி கீழே விழுந்ததாம். எனவே இந்தத் தடாகம் முழுவதும் மூலிகை நிரம்பியுள்ளது என்றும், இந்தத் தடாக நீர் நோய்களைத் தீர்க்கும் அருமருந்து என்றும் கூறுகிறார்கள். எனவே பக்தர்கள் தங்கள் தீராத நோய் தீர்க்கும் தீர்த்தமாக இந்தத் தடாக தீர்த்தம் பருக பெருமளவில் வருகிறார்கள். அப்பலோ குழும மருத்துவமனைகளில், முதல் மருத்துவமனை இங்கிருந்துதான் தொடங்கியதாம். இப்போதும் இந்தக் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள அப்பலோ மருத்துவமனைக்கு தடாக நீர்தான் தனித்துவச் சிறப்போடு எடுத்துச் செல்லப்படுகிறது.

இயற்கை அழகு கொஞ்சும் இந்தப் பகுதிக்கு ஒரு முறை வருபவர்களுக்கு மீண்டும் மீண்டும் வரத் தோன்றும். மலையின் அழகு வசீகரம் அத்தகையது. இந்த மலையில் குரங்குகளும் அதிகம். இங்கே வரும் பக்தர்கள், அவற்றின் விளையாட்டுகளைப் பார்த்து ரசிப்பது வழக்கமான காட்சி.

பெரும்பாலான தலங்களில் பரிகாரத்துக்கென்று சில வழிமுறைகள் இருக்கும். ஆனால், இங்கே ஆஞ்சநேயரைத் தரிசித்து தடாக தீர்த்தத்தை பிரசாதமாக ஏற்றுச் சென்றாலே போதும்... தீராத நோயும் தீரும் என்ற பலமான நம்பிக்கை பக்தர்களிடம் நிலவுகிறது.

தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் சிலர் சித்தூர் சென்று அங்கிருந்து அர்த்தகிரிக்குச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com