குண நலனா? குணக் கேடா?
நற்குணம் பொருந்திய நாயகன் என்று பெருமானை ஆழ்வார்களும் கவிகளும் கொண்டாடுகின்றனர்.


நற்குணம் பொருந்திய நாயகன் என்று பெருமானை ஆழ்வார்களும் கவிகளும் கொண்டாடுகின்றனர். இவ்வகையில் போற்றுவார் இருக்கும்போது தூற்றுவாரும் இருந்துவிடுவது இயற்கைதானே. கண்ணனைப் போற்றி ஆய்ச்சியரும் பாண்டவராதியரும் இருந்தபோது, சிசுபாலன் வகையறாக்களும் துரியோதனாதியரும் தூற்றியபடி இருந்ததும் மகாபாரதத்தில் கண்டிருக்கிறோம்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் ஒரு பாசுரம்...
கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடியஎன் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே
துடிகொள் இடை மடத்தோழி அன்னை என்செய்யுமே
ஆழ்வார் பராங்குச நாயகியாகி, பெண்மையடைந்து பாடியது. நாயகியான இப்பெண்ணுக்கும் அவளது தோழிக்கும் பேச்சு. தோழி, இவளைப் பார்த்துச் சொல்கிறாள். ""பேதையே நீ பகவான் பகவான் என்று எப்போது பார்த்தாலும் அவனையே எண்ணி வீணாக உன் மனத்தை வருத்திக் குலைக்கிறாயே! உனக்கு இந்தக் கஷ்டம் எதற்கு? அவன் நல்ல குணவானாக இருந்தால் அவனிடத்தில் மனத்தைச் செலுத்தலாம். அவனோ நல்ல குணமுள்ளவனாகத் தெரியவில்லையே! பின் எதற்கு அவனிடத்தில் ஆசை வைத்துத் தவிக்கிறாய்?'' என்று பெருமானின் நினைவிலே தோய்ந்திருந்த அவளின் உள்ளத்தைத் தேற்றுகிறாள்.
இதற்கு நாயகி பதிலளிக்கிறாள். ""தோழி எம்பெருமானை நான் மஹாகுணசாலி என்கிறேன். நீயோ நல்ல குணநலன்கள் இல்லாதவன் என்கிறாய். நீ சொல்கிறபடியே இருந்தாலும் என் உள்ளம் அவனையல்லாது பிறரை நாடாது. அவனிடத்தில் நான் வைத்திருக்கும் ஆசையிலிருந்து என்னை திசை திருப்புவதற்காகத்தானே நீ அவனை குணநலன் இல்லாதவன் என்கிறாய். ஆனால் தோழீ, அதையும் நான் சொல்ல வேண்டுமே அல்லாது நீ சொல்வது எவ்வகையில் நியாயம்? என்னையும் அவனையும் கூட்டி வைப்பது மட்டுமே உன் வேலை. அவனோடு உள்கலந்து ஒன்றியவள் நானே அல்லாது நீ இல்லையே? அவனிடத்துள்ள குணமோ, குற்றமோ எதுவாக இருந்தாலும் எனக்குத் தெரிந்த அளவு உனக்குத் தெரிய வாய்ப்பில்லை. எனவே அவனுடைய குணமற்ற தன்மையையும் குற்றங்களையும் நான் சொல்ல நீ கேள்...'' என்று சொல்லி இந்தப் பாசுரத்தில் சொல்கிறாள்.
கடியன்- தன் காரியத்தை சாதித்துக் கொள்வதில் அதிக வேகமுடையவன். கொடியன் - எதிராளி படுகிற கஷ்டங்களைப் பார்க்காமல் கல்நெஞ்சனாய் விலகிப் போகிறவன். நெடியமால் - மிகவும் பெரியவன். உலகங்கொண்ட அடியன் - பிறர் உடைமையைத் தன்னுடையதாக்கிக் கொள்ள நினைத்தால், அவர்களுக்கு ஒன்றுமே மிச்சப்படாதபடி செய்து, அவர்களைப் பாதாளத்தில் தள்ளிவிடுபவன். எனக்கே அவன் மர்மம் தெரியும். இதை உன்னாலும் சொல்ல முடியாது. இதற்காகவே பிறந்த சிசுபாலன் வகையறாக்களாலும் முடியாது என்று பதிலளிக்கிறாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...