அளவற்ற பேறுகளை அள்ளித் தரும் விமலை

அன்னை சக்தியின் உடற்கூறுகளில் நாபி விழுந்த இடமாக பூரி விமலை கருதப்படுகிறது. 51 பீடங்களில் 29வது சக்தி பீடமாக விளங்கும் இது, "பைரவி பீடம்' எனவும் வழங்கப்படுகிறது.
அளவற்ற பேறுகளை அள்ளித் தரும் விமலை
Updated on
2 min read

அன்னை சக்தியின் உடற்கூறுகளில் நாபி விழுந்த இடமாக பூரி விமலை கருதப்படுகிறது. 51 பீடங்களில் 29வது சக்தி பீடமாக விளங்கும் இது, "பைரவி பீடம்' எனவும் வழங்கப்படுகிறது. ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள பைரவி பீடத்தில், அன்னை விமலை என்ற பெயரில் எழுந்தருளியிருக்கிறாள். ஜகந்நாதபுரியின் முக்கிய தேவதையாக விமலாதேவி கருதப் பெறுகிறாள். பைரவி பீடமானது பக்தர்களை ஈர்க்கும் சக்தி பெற்றது. அதனால்தான் பக்தர்கள் இந்த பீடத்தை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

ஒரு நாள்... பூரியை ஆண்ட அரசனின் கனவில் இறைவன் தோன்றினார். "அரசனே சமுத்திரத்தில் மிதந்து வரும் மரத் துண்டுகளைக் கொண்டு என் மூர்த்திகளைச் செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும்'' என்று கட்டளையிட்டார். இறைவனின் ஆணையை சிரமேற்கொண்ட மன்னன், மரத் துண்டுகள் அனைத்தையும் சேகரித்து மூர்த்திகளை நிர்மாணிக்க முற்பட்டான். இறைவனே தச்சர் உருவெடுத்து அந்த வேலையை மேற்கொள்வதற்காக வந்தார்.

இறை மூர்த்திகளை சிறப்பாக அமைக்கும்படி தச்சரிடம் கேட்டுக் கொண்டார் அரசர். அதனை ஏற்ற தச்சரும் அரசருக்கு நிபந்தனை ஒன்றை விதித்தார். ""மரத்துண்டுகளைப் பயன்படுத்தி அழகான மூர்த்திகளை உருவாக்க முப்பது நாட்கள் ஆகும். அந்த முப்பது நாட்களும் நான் வேலை செய்யும் கர்ப்ப கிரகத்தின் கதவுகள் மூடியே இருக்க வேண்டும்'' என்றார். அரசரும் அதனை ஏற்றார்.

அதன்படி மூர்த்திகளை நிர்மாணிக்கும் பணி துவங்கியது. உருவம் அமைக்கும் பணி எவ்வளவு முடிந்திருக்கிறது என்பதைக் காணும் அதீத ஆவலில், தச்சர் கூறிய முப்பது நாள் நிபந்தனையையும் மறந்து அரசர் கருவறைக் கதவைத் திறந்தார். நிபந்தனையை மன்னர் மீறிய காரணத்தால் தாம் மேற்கொண்டிருந்த வேலையை அப்படியே பாதியில் நிறுத்திவிட்டு, தச்சர் வடிவில் வந்த இறைவன் மறைந்து விட்டார்.

எனவே, அரைகுறையாக செதுக்கப்பட்டிருந்த அந்த நிலையிலேயே இறை மூர்த்தங்கள் தற்போதும் உள்ளன. பின்னர் ஒரு நாள் கடலில் மிதந்து வந்த மூன்று மரத்துண்டுகளை வைத்து புது மூர்த்திகளை செய்தனர். இருந்தும், அவை பழைய மூர்த்திகளுக்கிடையே நிறுவப்பட்டு காட்சியளிக்கின்றன. இதுவே ஜகந்நாதர் கோவில் கொண்ட வரலாறு!

இந்தப் புகழ் பெற்ற பூரி தலத்தில் முதன்முதலில் குடியேறியவள் அன்னை விமலை. அவளுக்கு அங்கே சக்தி பீடம் அமைந்திருந்தது. இந்தத் தலத்தில் குடி கொள்ள எண்ணினார் ஸ்ரீஜகந்நாதர். அப்போது இந்தத் தலத்தினுள் ஜகந்நாதர் வர வேண்டுமானால், ஒரு நிபந்தனைக்கு உட்பட வேண்டும் என்றாள் விமலை. அதன்படி, எந்த நிவேதனப் பொருளானாலும் முதலில் விமலைக்கே வழங்கப்பட வேண்டும் என்பது வழக்கமாயிற்று. மேலும், துர்க்காஷ்டமி அன்று, ஜகந்நாதர் நள்ளிரவில் திருப்பள்ளி கண்ட பிறகு, இந்த பீடத்தில் ஆடு பலியிடப்படுவதும், அதன் பின்னர் ரத்தக் கறை உடனே கழுவப்பட்டு வெட்டுண்ட ஆட்டின் மிச்சங்கள் பின் வாசல் கதவு வழியாக வெளியேற்றப்படுவதும், பின்னர் கோயில் சுத்தம் செய்யப்படுவதும் இங்கே வழக்கமானது.

இந்தத் தலத்தில் வரலாற்று அதிசயங்கள் பல நிகழ்த்திக் காட்டினாள் அன்னை விமலை. இன்றும் பூரி தலத்துக்கு வரும் பக்தர்கள், அன்னை விமலையை வணங்கி, தங்கள் மனதிலுள்ள குறைகள் அகன்று, மன பாரம் அனைத்தும் நீங்கப் பெறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com