பரமன் யாரென நிர்ணயம் செய்தவர்
மண்ணில் மிகவும் பழைமையான வேதங்களும், அவற்றின் விளக்கமாக வந்த ஸ்ருதி, ஸ்மிருதி, இதிகாச புராணங்கள் எல்லாம் பரம்பொருளைப் பற்றியும், அதன் தன்மையைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கின்றன.


மண்ணில் மிகவும் பழைமையான வேதங்களும், அவற்றின் விளக்கமாக வந்த ஸ்ருதி, ஸ்மிருதி, இதிகாச புராணங்கள் எல்லாம் பரம்பொருளைப் பற்றியும், அதன் தன்மையைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கின்றன. ஆனால், அதன் உண்மைப் பொருளை உணர்ந்தார் அதிகம் இல்லை.
இப்படித்தான் மதுரையை ஆண்ட வல்லபதேவ பாண்டியனுக்கும் ஐயம் எழுந்தது. பரம்பொருள் யார்? பரம்பொருளை உணரும் வழி என்ன? பரம்பொருளை நாம் அறியும் வகையில் விளக்க வல்லார் யார்? இப்படியெல்லாம் தோன்றியதால் நாடெங்கும் முரசடித்து, மன்னனின் ஐயத்தை நீக்குவோருக்கு பொற்கிழி பரிசு என அறிவிக்கச் செய்தான். பொற்கிழியைப் பெறும் எண்ணம் இல்லை ஆயினும், ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் வடபெருங் கோயிலுடையான் கட்டளையால், மதுரை சென்று, பாண்டியன் அவையில் வேத, ஸ்மிருதி, இதிகாச பிரமாணங்களைக் கொண்டும் அனைத்து வித்வான்களும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் நாராயணனே பரம்பொருள் என்று நிர்ணயம் செய்தார் விஷ்ணுசித்தர். உடனே, விஷ்ணுசித்தரின் வெற்றி, பரம்பொருளாலும் இசையப் பெற்றது என்பதைச் சொல்லும்படியாக, பொற்கிழி கட்டியிருந்த கம்பம், பொற்கிழி இவர் அருகே வரும்படி வளையலாயிற்று. விஷ்ணுசித்தரும் பொற்கிழியை அறுத்துக் கொண்டார்.
இவ்வாறு பரமனை நிர்ணயம் செய்து, உலகுக்கு உணர்த்தி நிறுவிய விஷ்ணுசித்தருக்கு பட்டர்பிரான் என்னும் பட்டம் வழங்கி, பட்டத்து யானையின்மீது அவரை ஏற்றி, நகர் உலா வரச் செய்தான் மன்னன்..
அப்படி உலாவந்தபோது, அயன், அரன், இந்திரன் முதலியோர் புடைசூழ கருடன் மீதேறி வந்து, விஷ்ணுசித்தருக்கும் அரசனுக்கும் காட்சியளித்தார் திருமால். பரந்தாமன் எழில் கண்ட விஷ்ணுசித்தர், அவனுடைய அழகுக்கு கண்ணெச்சில் பட்டுவிடுமோ என்று கவலையுற்றார். அதனால் அவன் எழில் நிலை பெற்றிருக்கும் வகையில் பல்லாண்டு பாடி வாழ்த்தத் தொடங்கினார். எப்படி ஒரு குழந்தைக்கு கண்பட்டுவிடுமோ என்று தாயார் அஞ்சுவாளோ அப்படியே, பெருமானையும் எண்ணிய விஷ்ணுசித்தர்தான் பின்னாளில் தமிழிலக்கியத்தின் முதல் பிள்ளைத்தமிழைப் படைத்தார். பெற்றவன் என்ற நிலையிலிருந்து, கண்ணனைக் குழந்தையாக்கிப் பாடினார். இதனாலேயே அவர் பெரியாழ்வார் என்று அழைக்கப்பெறும் பேறு பெற்றார். காலத்தால் பிற்பட்டவராயினும், இவருடைய பாசுரங்கள் பெரியாழ்வார் திருமொழி என்று வழங்கப்பட்டு, நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் முதலிலேயே இடம் பெறும் சிறப்பைப் பெற்றது.
இப்படி இவர் மிகப் பரிவுடன் பல்லாண்டு பாடியமையாலேயே, வைணவ ஆசாரியர் மணவாள மாமுனிகளும், ""பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றார் பெரியாழ்வார் என்னும் பெயர்'' என்று உபதேசரத்னமாலையில் பாடியருளினார்.
அப்படிப்பட்ட பெரியாழ்வாரே, பரிவு கொண்டு ஆண்டாளை வளர்த்து ஆளாக்கி, அரங்கனுக்கே மணமுடித்துக் கொடுத்து, அரங்கனுக்கு மாமனார் ஆகும் சிறப்பையும் பெற்றார். இதுவே பக்தி உலகின் அதிசயம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...