ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மருதமலை மாமணி!

தமிழக நிலங்கள் நான்காக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று மருதம் என்பதாகும். வயலும் வயல் சார்ந்த இடமுமாக இருந்தது மருதம் என வழங்கப்பட்டாலும், மருத மரங்கள் நிறைந்திருந்த வனப்பகுதி மருத நிலத்தின் பெயரால் வழங்கப்பட்டது.

News image
Updated On :21 மார்ச் 2013, 10:19 am

இரா. இரகுநாதன்

தமிழக நிலங்கள் நான்காக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று மருதம் என்பதாகும். வயலும் வயல் சார்ந்த இடமுமாக இருந்தது மருதம் என வழங்கப்பட்டாலும், மருத மரங்கள் நிறைந்திருந்த வனப்பகுதி மருத நிலத்தின் பெயரால் வழங்கப்பட்டது.

ஏழாவது படை வீடு: மேற்குத் தொடர்ச்சி மலையில், கொங்கு நாட்டின் கோவை மாநகருக்கு 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மருதமலை. குன்று இருக்கும் இடத்தில் குமரன் இருப்பான் என்பதுபோல் இங்கு அமைந்துள்ள குன்றில் நின்று அருள்பவன் குமரன். அவன் நிற்கும் இந்த மலை "மருதமால் வரை' "மருதவெற்பு' "மருதக்குன்று' "மருதவோங்கல்' "மருதாசலம்' என்றெல்லாம் பேரூர் புராணத்தில் குறிப்பிடப்படுகிறது.
இவ்வூரின் இறைவனை மருதமலையான், மருதப்பன், மருதாசலமூர்த்தி என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர். ஏழாவது படை வீடாகத் திகழ்கிறது இந்த மருதமலை.

தீமையை அறுப்பவன்: சென்ற நூற்றாண்டில் திருப்பணி நடைபெற்றது. அதற்கென பொன்னும் பொருளும் சிறுகச் சிறுகச் சேர்ந்தது. ஒருநாள் இரவு கள்வர் மூன்று பேர் பொன்னும் பொருளும் சேர்ந்திருந்த உண்டியலை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து படி இறங்கினர். கலியுக தெய்வம் கந்தன் குதிரை வீரனாகப் புறப்பட்டார். பொருட்களை மீட்டு உரிய இடத்திற்குச் சென்று வைப்பதற்கு முன் மூவரையும் மலையின் பதினெட்டாம் படியின் அருகில் சிலைகளாக்கி நிற்க வைத்தார். இன்றும் சாட்சியாக வித்தியாசமான கற்சிலைகளாக கள்வர்கள் நிற்கின்றனர். குதிரையில் புறப்பட்டுச் சென்ற குளம்படியை மண்டபம் கட்டி வணங்குகின்றனர்.

சாபம் நீங்கியது: கச்சியப்ப முனிவர் பேரூர் புராணத்தில் இத்தலத்தின் பல சிறப்புகளை எடுத்துக்காட்டுகிறார்.
சுயம்பு மூர்த்தியாய் லிங்க வடிவில் இருந்த சிவன் மீது பால் சுரந்தபோது காமதேனுவின் குளம்பு தெரியாமல் பட்டுவிட்டது. அதனால் தோஷம் அடைந்தது காமதேனு. பஞ்சகிரியில் உறையும் முருகனை வழிபட்டு பாவ தோஷ நிவர்த்தி பெற முடிவு செய்தது. அதன்படி சிவன் உறையும் வெள்ளியங்கிரியில் சிவனை வழிபட்டு, பிரும்ம கிரியில் விநாயகரை வழிபட்டு, திருமால் உறையும் விஷ்ணுகிரியை வணங்கி, அம்பாள் உறையும் நீலிமலை என்னும் நீலகிரியை வழிபட்டு, குமரன் உறையும் மருதகிரி வந்து பசி நீங்க புல் மேய்ந்து, சுனை நீர் அருந்தி தொடர்ந்து வழிபட்டு தன் தோஷம் நீங்கியது.
மேலே குறிப்பிட்ட பஞ்சகிரியும் மருதமலையைச் சுற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள மலைப்பகுதிகள் ஆகும்.

பாம்பாட்டிச் சித்தர்: பாம்பாட்டிச் சித்தர் நெடுங்காலம் இம்மலையில் வாழ்ந்தார் என்பது வரலாறு. அவர் வாழ்ந்த இடம் தற்போது குகையாக உள்ளது. இந்தக் குகையில் இருந்து ரகசிய வழியாக "ஆதி மூலஸ்தானம்' என இப்போது வழங்கும் இடத்தில் சென்று அரூப நிலையில் இருக்கும் முருகன் - வள்ளி-தெய்வானையை வணங்கினாராம் பாம்பாட்டிச் சித்தர்.
இத்தலத்தில் மருத தீர்த்தம், கன்னி தீர்த்தம், கந்த தீர்த்தம் என்னும் மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இவை மலையில் இருந்து வருபவை. இந்த தீர்த்தங்கள் உடற்பிணி நீக்கும் என துடியலூர் திருத்துடிசை புராணம் கூறுகிறது.

சந்நிதிக்கு செல்லும் முன் மலை மேல் வெவ்வேறு ஐந்து மரங்கள் பின்னிப் பினைந்துள்ளன. இதுபோல் ஐவகை விருட்சம் இணைந்த மரம் எங்கும் கிடைக்காத அபூர்வம்.

சந்நிதிகள்: மூலவர் சந்நிதிக்கு வலப்புறம் பட்டீஸ்வரர், இடப்புறம் மரகதாம்பிகை, நவகிரகங்கள், அலங்கார மண்டபத்தில் அருள்தரும் வரதராசர் ஆகிய சந்நிதிகள் உள்ளன. மருதாலசமூர்த்தி: கருவறையில் மருதாசல மூர்த்தி, சிரசில் கண்டிகையுடன் பின்புறம் குடுமியுடன் கோவணம் கட்டி வலது திருக்கரத்தில் ஞானத்தண்டுடன் இடது திருக்கரத்தை இடது இடுப்பில் வைத்தவாறு உள்ளார். முன்புறம் பலி பீடமும், வாகனமும், கொடி மரமும் ஆகம முறைப்படி அமைக்கப்பட்டுள்ளன.

பங்குனி உத்திரம்: இத்திருக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டு மார்ச் 18 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. ஏழுநிலை கொண்ட ராஜகோபுரம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. பங்குனி உத்திர நன்னாளில் சென்று வணங்கியோர்க்கு வளம் பெருகும். மருதமலை மாமணியை வழிபட்டு நீங்காத பேரின்பம்
பெறலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.