செயல் வீரர்கள்
என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை.


என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்'' (மத்தேயு 7:21)
நம் வாயிலிருந்து வெளிப்படுகின்ற வார்த்தைகளுக்கும் நாம் உண்மையாகவே புரிகின்ற செயல்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. பெரிய சாதனைகளைச் செய்யப் போவதாகச் சொல்வோர் எல்லாம் பெரிய காரியங்களைச் சாதிப்பதுமில்லை, புகழ் பெறுவதும் இல்லை. தாம் செய்யப்போவதாகக் கூறுபவற்றைச் செய்யாமல் வெறும் வாய்ச்சொல் வீரர்களாகவே நின்றுவிடுவோரை நாம் பார்த்திருக்கிறோம்.
எது நல்லது என நம் உள்ளத்தின் ஆழத்தில் உணர்கின்றோமோ அதைச் செய்வதும் அந்த உறுதிப்பாட்டின் அடிப்படையில் செயல்படுவதும் மனிதருக்கு அழகு.
இதையே இயேசு நமக்கு நினைவுபடுத்துகிறார். இயேசு கடவுளின் முழு வெளிப்பாடாக நம்மிடையே வந்தார். அவரை நாம் ஆண்டவர் என ஏற்கிறோம். ஆனால் இயேசு நம் ஆண்டவர் என்றால் அவர் எந்த விழுமியங்களுக்காக வாழ்ந்தாரோ, எந்த மதிப்பீடுகளுக்காக இறந்தாரோ அந்த விழுமியங்களையும் மதிப்பீடுகளையும் நம் வாழ்வில் எதார்த்தமாக்கிட நாம் முன்வரவேண்டும். இயேசு தம் தந்தைக் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் முனைந்து செயல்பட்டார். அதுபோல நாமும் செயல்படவேண்டும்.
இறையாட்சியில் பங்கேற்க விரும்புவோர் வெறும் வாய்ச்சொல் வீரராக மட்டுமே இருந்தால் போதாது. நம் சொல்லும் செயலும் இயேசுவின் மதிப்பீடுகளுக்கு இசைய அமையும்போது நாம் உண்மையிலேயே கடவுளின் விருப்பப்படி நடக்கின்றோம் எனலாம். அன்றாட வாழ்வில் நாம் மொழியைப் பயன்படுத்தி நம் உறவுகளை வெளிப்படுத்துகின்றோம். அதுபோலவே, கடவுளோடு நமக்குள்ள உறவை வெளிப்படுத்தவும் நாம் மொழியைக் கையாளுகின்றோம். மொழி என்பது நம் நாவிலிருந்து உதிர்கின்ற சொல் மட்டுமல்ல. வாய்ச்சொல்லாக வடிவெடுக்கும் முன்னரே மொழி என்பது நம் உள்ளத்தில் உருவெடுக்கின்றது. உள்ளத்தில் எழுகின்ற நல்ல சிந்தனைகளை நம் மொழி எதிரொலிக்க வேண்டும் அச்சிந்தனைகளின் குரலை எதிரொலிக்க
வேண்டும்.
அப்போது நமது சொல்லும் நல்லதாக இருக்கும். அச்சொல்லில் அடங்கிய பொருளும் வெளியே துலங்கும். நம் சொல்லுக்குப் பொருந்துகின்ற விதத்தில் நம் செயலும் அமைந்தால் அதுவே நம் ஆழ்ந்த மனிதப் பண்பை வெளிப்படுத்துகின்ற ஒளியாக மாறும்.
எனவே, நம் தலைவரும் வழிகாட்டியுமாகிய இயேசுவை நோக்கி, ""ஆண்டவரே, ஆண்டவரே'' என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், நம் விண்ணகத் தந்தையின் திருவுளப்படி செயல்பட நாம் முனைந்திட வேண்டும். அப்போது விண்ணரசில் புகுந்திடும் பேறு நமக்கு வழங்கப்படும்.
இறைவா, உம்மை நோக்கிக் குரலெழுப்புகின்ற நாங்கள் உம் விருப்பத்தைச் செயல்படுத்த அருள்தாரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...