தீச்சுடராய்க் காட்சி தரும் ஜ்வாலாமுகி!

அன்னையின் உடற் கூறுகள் வீழ்ந்த 51 இடங்களில் ஜ்வாலாமுகி தலம் ஒன்பதாவது சக்தி பீடமாக விளங்குகிறது.
தீச்சுடராய்க் காட்சி தரும் ஜ்வாலாமுகி!
Updated on
1 min read

அன்னையின் உடற் கூறுகள் வீழ்ந்த 51 இடங்களில் ஜ்வாலாமுகி தலம் ஒன்பதாவது சக்தி பீடமாக விளங்குகிறது. ஹிமாச்சல பிரதேசத்தில், காங்ரா பகுதியில் உள்ளது இத்தலம். தேவியின் உடற் பகுதிகளில் நாக்குப் பகுதி விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. இவ்வாலயத்தில் உள்ள இறைவன் மஹாதேவர் என்ற பெயரிலும், மஹாதேவி என்ற பெயரிலும் விளங்குகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தின் பிரதான தெய்வமாக காளி விளங்குகிறாள். ஒவ்வொரு சக்தி பீடமும் ஒவ்வொரு சிறப்பினைப் பெற்றிருப்பது போன்று, இங்கே மகா காளியின் வடிவாகவும், கொளுந்து விட்டெரியும் ஜ்வாலையாகவும், ஜ்வாலாமுகி திகழ்கிறாள். நீலநிற நெருப்பு போன்ற ஜுவாலை கோயிலிலுள்ள புராதன பாறை இடுக்குகள் வழியே தொடர்ந்து பல்லாயிரம் ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கின்றது.

அக்காலத்தில் காங்ரா பகுதியை பூமிசந்த் என்ற மன்னன் ஆண்டு வந்தான். தேவியின் சிறந்த பக்தனாக இருந்தான். ஒரு நாள் மன்னனின் கனவில் காளி தோன்றி, தான் சுடர் வடிவில் கோயில் கொண்டிருக்கும் இடத்தை உணர்த்தினாள். அதன் பின்னர் அவ்விடத்தை அடைந்த மன்னர் அங்கே மிகப்பெரிய ஆலயத்தை எழுப்பினார்.

மொகலாயப் பேரரசர் அக்பர் இவ்வாலயத்தைப் பற்றி கேள்விப்பட்டு எரிந்து கொண்டிருக்கும் ஜ்வாலைகளை அணைக்க முற்பட்டார். எவ்வளவோ முயன்றும் ஜ்வாலையை அணைக்க முடியவில்லை. அதன்பின் தேவியின் ஆற்றலைப் புரிந்துகொண்டு அக்பர் ஒரு தங்கக் குடையை காணிக்கையாகச் செலுத்தினார். இதையடுத்து தன்னுடைய ஆசை ஒன்றை நிறைவேற்றித் தருமாறு தேவியிடம் வேண்டினான் மன்னன். அதற்கு அன்னை உடன்படவில்லை. அதற்கு அடையாளமாக மன்னன் அளித்த தங்கக் குடை சாதாரண உலோகமாக மாறியது. இவ்வாறு பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைத் தன்னுள்ளே கொண்டுள்ளது இந்தக் கோயில்.

இங்குள்ள அன்னையை வழிபட்டால் தீயனவற்றை எல்லாம் தீக்கிரையாக்கி நம்மை நல்வழியில் செலுத்துவாள் என்பது திண்ணம். பில்லி, சூனியம், ஏவல் போன்ற செய்வினைகளை விலக்கும் தாயாகவும் ஜ்வாலாமுகி விளங்குகிறாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com